சிந்துப்பா மேடை - 15
நீர்மேல்கு மிழிஇக் காயம் - இது
நில்லாது போய்விடும் நீயறி மாயம்
பார்மீதில் மெத்தவும் நேயம் - சற்றும்
பற்றாதி ருந்திடப் பண்ணும்உ பாயம்.
[கடுவெளிச்சித்தர்]
இஃது 'ஆனந்தக் களிப்பு' என்னும் சிந்துப்பா. ஒவ்வோர் அடியும் எட்டுச் சீர்களைப் பெற்றிருக்கும். 'நீர்மேல் ' என்பது முதல் 'மாயம்' என்பது வரை ஓரடி. ஒவ்வொரு சீரும் மூன்று உயிர்களைக் கொண்டிருக்கும். மூன்றாம் சீரில் இரண்டு உயிரே இருந்தாலும் மற்றும் ஓர் உயிர் அளவு அது நீண்டு இசைக்கும். அதன்பின் தனிச்சொல்லைப் பிரித்துக்காட்டும் சிறுகோடு. அதன்பின் முன் சீரின் இறுதி உயிரே மேலும் ஓர் உயிர் அளவு நீண்டு இசைக்கிறது. அதன்பின் இரண்டு உயிர் உள்ள நான்காம் சீா். எட்டாம் சீரும் இரண்டு உயிர். அதுவும் மேலும் ஓர் உயிர் அளவு நீண்டு இசைக்கிறது.
இத்தகைய இரண்டு அடிகள் ஒரே எதுகையில் அமைந்து, ஒவ்வோர் அடியிலும் ஒன்று, ஐந்தாம் சீர்களில் மோனை பெறுவது ஒரு கண்ணி. அடிதோறும் மூன்று எட்டாம் சீர்களில் காயம், மாயம், நேயம், பாயம், என இயைபு அமைந்து வருதல் சிறப்பு.
ஆனந்தக் களிப்பின் இலக்கணம்
கும்மி போல மும்மையில் வரினும்
அடியின் இறுதிசேர் அசைநீட் டத்தைத்
தனிச்சொல் முன்னர்த் தாங்கி வருவது
ஆனந்தக் களிப்பென் றறையப் படுமே
[முனைவர் இரா. திருமுருகனார், சிந்துப்பாவியல் - 43 ஆம் நுாற்பா]
கடுவெளிச் சித்தரின் 'பாபம் செய்யாதிரு மனமே', தாயுமானாரின் 'சங்கர சங்கர சம்பு', வடலுார் வடலுார் வள்ளலின் 'ஞான மருந்து', 'சிவசிவ சோதி', 'சோதியுள் சோதி', மகாகவி பாரதியாரின் 'வந்தே மாதரம் என்போம்', 'தீராத விளையாட்டுப் பிள்ளை', 'ஆதி சிவன் பெற்று விட்டான்' பாவேந்தரின் 'தலைவாரிப் பூச்சூடி உன்னை' குமுதம் திரைப்படத்தில் 'கல்லிலே கலைவண்ணம் கண்டான்' ஆகிய பாடல்கள் ஆனந்தக் களிப்புகளே. அவற்றைப் பலமுறை பாடி ஆனந்தக்களிப்பின் ஓசை அமைதியை உணரலாம்.
விரும்பிய பொருளில் ஆனந்தக் களிப்பு ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
பாட்டரசர் கி. பாரதிதாசன்,
கம்பன் கழகம், பிரான்சு,
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.
21.02.2021.
Aucun commentaire:
Enregistrer un commentaire