dimanche 21 février 2021

ஆனந்தக் களிப்பு

 


வாராயோ வெண்ணிலாவே!

[ஆனந்தக் களிப்பு]

 

எடுப்பு

 

வெண்மதி வந்தது விண்ணில் - பொங்கித்

தண்ணதி பாயுது தண்டமிழ்ப் பண்ணில்!

                                             [வெண்மதி]

 

முடிப்பு

 

பொன்முகப் பேரெழில் காட்டி - முன்னே

   போகிறாள் கொஞ்சிடும் ஆசையைக் கூட்டி!

என்னகக் காதலை மூட்டி - நாளும்

   ஏங்கிடச் செய்கிறாள் இன்னிசை மீட்டி!

                                             [வெண்மதி]

 

அன்னத்தின் நன்னடை கொண்டாள் - என்றன்

   அங்கத்தைப் பார்வையால் அள்ளியே உண்டாள்!

கன்னத்தின் மென்மலர்ச் செண்டாள் - கவி

   கம்பனின் சொற்களில் காதலைக் கண்டாள்!

                                             [வெண்மதி]

 

பஞ்செனும் நெஞ்சினை உற்றாள் - இன்றேன்

   பாகெனும் பேச்சினை யாரிடம் கற்றாள்!

பிஞ்செனும் மென்விரல் பெற்றாள் - காதல்

   பித்தேற வாட்டிடும் பெண்கொண்ட நற்றாள்!

                                             [வெண்மதி]

 

எத்தனை எத்தனை எண்ணம் - வானில்

   ஏறியே நீந்திடும் பற்பல வண்ணம்!

தித்திக்கும் இன்மதுக் கிண்ணம் - அவள்

   தீண்டிடத் தீண்டிடத் தேன்சுவை நண்ணும்!

                                             [வெண்மதி]

 

 

மூடி மறைப்பதும் ஏனோ? - மனம்

   வாடிக் கிடப்பதும் வாஞ்சையால் தானோ?

ஓடிக் குதிப்பதும் மானோ? - இங்குப்

   பாடிப் படைப்பதும் பைந்தமிழ்த் தேனோ?

                                             [வெண்மதி]

 

கண்களில் வண்டுகள் மேயும் - தினம்

           கண்டதும் கற்பனை வெள்ளமாய்ப் பாயும்!

பெண்களின் உள்ளங்கள் சாயும் - அவள்

           பேரெழில் தேனுடன் ஒன்றாகித் தோயும்!

                                             [வெண்மதி]

 

சிந்தனை ஓடுமே தேடி - அவள்

           செவ்விதழ்ப் புன்னகைச் சீரெழில் பாடி!

கந்தனை வேண்டுமே ஓடி - அவள்

           கைகளில் உள்ளன சொர்க்கமே கோடி!

                                             [வெண்மதி]

 

ஆசைகள் நெஞ்சத்தைத் துாண்டும் - இந்த

           அண்டத்தைத் துள்ளியே எண்ணங்கள் தாண்டும்!

ஓசைகள் பற்பல பூண்டும் - பாடி

           ஓங்காரி சிங்காரி நல்லருள் வேண்டும்!

                                             [வெண்மதி]

 

நல்லிருள் வந்துயிர் வேகும் - இன்ப

           நற்கனாக் கண்டுளம் புண்ணாக ஆகும்!

நில்லிருள் காதலை ஏகும் - முல்லை

           நேரிழை பல்லெழில் பார்த்துடன் சாகும்!

                                             [வெண்மதி]

 

பொங்கியே கூத்திடும் ஏக்கம் - புலமை

           தங்கியே பூத்திடும் தண்டமிழ் ஆக்கம்!

தங்கமே கொண்டகம் பூக்கும் - என்றன்

           அங்கமே துாளாக ஆசைகள் தாக்கும்!

                                             [வெண்மதி]

பாட்டரசர் கி. பாரதிதாசன்,
29.02.2020.

Aucun commentaire:

Enregistrer un commentaire