vendredi 8 novembre 2013

இயலாமை ஓடாதா?




இயலாமை ஓடாதா

சாதிகளை ஒழித்திடவே முடியாதா? தீய
     சண்டைகளை நிறுத்திடவே இயலாதா? இங்கு
நீதிகளை நிலைநாட்டல் நடவாதா? நல்ல
     நெறிகளையே வளர்த்திடல்கை கூடாதா? என்றும்
வாதிகளாய் நின்றதினிப் போதாதா? வாழ்வில்
     வடலூரார் தூயநெறி சேராதா? இன்பம்
மோதிவிளை யாடவழி தோன்றாதா? நாடு
     முன்னேற இயலாமை ஓடாதா தோழா?

தீயிடுவோம்

சாதிவிளை யாடுகின்ற மூடர் நெஞ்சைத்
     தகர்த்தெறிய நெருப்பிடுவோம்! கையுட் டாலே
நீதிவிளை யாடுகின்ற வழக்கு மன்றில்
     நேர்மையிலாச் செயல்புரியும் தீயோர் தம்மை
ஊதிவிளை யாடுகின்ற பந்தைப் போன்றே
     உதைதிங்கு வெடித்திடுவோம்! பொய்மைப் பேசி
மோதிவிளை யாடுகின்ற அரசை யெல்லாம்
     மூட்டைகட்டித் தீயிடுவோம் சம்ப லாகும்!

1996

samedi 2 novembre 2013

தீபாவளி வாழ்த்து




இனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

தூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!
ஆய கலைகள் அணிந்தொளிர! - மாயவனே!
இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
அன்பாம் அமுதை அளி!

சாதி சமயப் பிரிவகற்ற! எவ்விடத்தும்
நீதி நிலைத்திருக்க! நெஞ்சத்தைச் - சோதியாய்த்
துாப மணம்பரப்ப! தொண்டாற்ற வந்திடுக
தீபா வளியே திரண்டு!
 

02.11.2013 

கம்பனில் ஒளிர்வது - பகுதி 4




கம்பன் கவியில் ஓங்கி ஒளிர்வது
(கருணை ஒளி, காதல் ஒளி, கடமை ஒளி, கற்பின் ஒளி)

தலைமைக் கவிதை

காதல் ஒளி

மாமன்னன் தசரதனும் நாட்டின் மீதே
     மாசில்லாப் பெருங்காதல் கொண்டே வாழ்ந்தான்!
ஆ..மன்னன் என்றுருகி இராமன் மீதே
     அயோத்திவாழ் மக்களெலாம் காதல் வைத்தார்!
சீ..மன்னன் நீயெல்லாம் சிதைந்து நின்ற
     இராவணனும் வீரத்தைக் காதல் செய்தான்!
மாமன்னன் நம்கம்பன் படைத்த பாட்டில்
     பாவலர்கள் தீராத காதல் பூண்டார்!

பால்கடலில் துயில்கொண்ட பரமன், இந்தப்
     பார்த்துயரை அகற்றிடவே அவத ரித்தான்!
சேல்கடலில் விளையாடும்! செய்யாள் கண்ணில்
     சேர்ந்தகதை தான்கண்டு காதல் கொண்டான்!
மால்கடலில், அவ்வானில், பெற்ற துண்டோ?
     மலர்மகளின் பொன்விழிகள் நல்கும் போதை!
நூல்கடலில் நுண்கம்பன் நாளும் நீந்தி
     நுட்பமுடன் நுவன்றகவி காதல் வீசும்!

அன்பொழுகும் சொல்வேண்டும்! ஆசை பொங்கி
     அமுதொழுகும் கவிவேண்டும்! இதயக் கூட்டில்
இன்பொழுகும் கற்பனைகள் நொடிகள் தோறும்
     இனிப்பொழுகும் நிலைவேண்டும்! பார்க்கா நாள்கள்
துன்பொழுகும்! துயரொழுகும்! உயிரும் ஏங்கித்
     துவண்டொழுகும் நோய்வேண்டும்! படிப்போர் தம்மின்
என்பொழுகும் வண்ணத்தில் கம்ப நாடன்
     இனியதமிழ்க் காதலினைப் பாடி வைத்தான்!

அண்ணலவன் நோக்கியதைக் காதல் பொங்க
     அருந்தமிழில் நம்கம்பன் பாடி வைத்தான்!
கண்ணிலவள் புரிந்திட்ட வித்தை கண்டு
     காகுத்தன் இவ்வுலகை மறந்து நின்றான்!
மண்ணிலவள் அழகுரைக்கச் சொல்லே இல்லை!
     மாயவனின் மனம்புகுந்து செய்தாள் தொல்லை!
எண்ணிலவள் மாண்புரைக்க ஏதாம் எல்லை?
     இன்காதல் கவியாவும் மணக்கும் கொல்லை!

கனற்கவிஞன் பாரதியும் காதல் காதல்
     காதலெனக் கமழ்கவிதை ஈந்தான்! எங்கள்
இனக்கவிஞன் பாவேந்தன் காதல் தன்னை
     இவ்வுலகின் உயிர்இயற்கை என்றான்! பூக்கும்
வனக்கவிஞன் நான்கூடக் காதல் கொண்டு
     மதுவெண்பா ஆயிரத்தை நெய்தேன்! என்றன்
மனக்கவிஞன் அருங்கம்பன் காத லுக்கு
     மணிமுடியை அணிவித்தே ஆளச் செய்தான்!

(தொடரும்)

vendredi 1 novembre 2013

கம்பனில் ஒளிர்வது - பகுதி 3




கம்பன் கவியில் ஓங்கி ஒளிர்வது
(கருணை ஒளி, காதல் ஒளி, கடமை ஒளி, கற்பின் ஒளி)
தலைமைக் கவிதை

கடமை ஒளி

நாட்டரசன் தசரதனின் கடமை என்ன?
     நலங்கொழிக்கும் கோசலத்தார் கடமை என்ன?
காட்டரசன் சுக்கிரீவன் கடமை என்ன?
     கமழ்ராமன் இலக்குவனின் கடமை என்ன?
வாட்டரசன் இராவணனின் உடன் பிறந்தோர்
     வன்கும்பன் புகழ்வீடன் கடமை என்ன?
பாட்டரசன் நம்கம்பன் படைத்த நூலைப்
     படித்தாய்ந்து கவி.தணிகா சொன்னார் நன்றே!

செஞ்சோற்றுக் கடமையினைச் செய்தான் கும்பன்!
     செயலறிந்து உயர்பரதன் துறவு பூண்டான்!
நெஞ்சேற்று இளையவனும் பின்னே சென்றான்!
     நெடுங்காட்டில் நெடியவனும் துன்பம் ஏற்றான்!
பஞ்சேற்ற திருப்பாத சீதை ஏனோ
     படர்முள்ளின் பெருங்கல்லின் துயரம் கண்டாள்!
மஞ்சேற்ற நீர்வளமாய்க் கம்பன் பாக்கள்
     மாண்புடைய கடமையினை வடிக்கும் என்பேன்!

இந்திரனாய்ப் பிறந்திட்ட போதும் கூட
     இவ்வுலகு தூற்றுகின்ற இழிவைச் செய்தான்!
தந்திரனாய்ப் பிறந்திட்ட சகுனி தோற்பான்
     சதிநிறைந்த மந்தரையின் சொற்கள் முன்னே!
எந்திரனாய்ச் செயல்பட்டான், தந்தை சொல்லை
     மந்திரமாய்த் தலையேற்ற இராமன்! பாட்டில்
சந்திரனாய் ஒளிர்கின்ற நம்மின் கம்பன்
     தந்தகவி கடமையினைச் சாற்றும் நன்றே!

காதல் ஒளி!

வில்லழகன் மிதிலையிலே நடந்த வீதி!
     விழியழகி வீற்றிருந்த கன்னி மாடம்!
வெல்லழகன் சனகனிடம் இருந்த வன்வில்!
     வியன்போட்டி நடந்திட்ட புகழ் அரங்கம்!
செல்..அழகன் முன்னென்று செலுத்தும் காலம்!
     சிந்தனையைச் சூடாக்கிப் செழித்த ஏக்கம்!
சொல்லழகன் சுடர்க்கம்பன் இவைகள் தம்மைச்
     சுரக்கின்ற காதலுக்குச் சாட்சி வைத்தான்!

கவிகம்பன் காட்டுகின்ற காதல் காட்சி
     கவிஞர்களின் கண்களுக்குள் புகுந்தே வாழும்!
செவி..கம்பன் கவிகேட்டுச் சொர்க்கம் காணும்!
     செப்புகின்ற திருவாயும் மோட்சம் ஏற்கும்!
குவி..கம்பன் பாப்படித்துத் தமிழின் சீரை!
     கொடு..கம்பன் நெறியேந்தும் சந்தத் தேரை!
புவி..கம்பன் சீருரைக்கப் பூந்தேன் நல்கிப்
     புகழுரைத்த நற்சரோசா கவிஞர் வாழி!

என்னணியில் தொண்டாற்றித் தமிழைக் காக்கும்
     எழில்மனத்து வே.சரோசா கவிதை ஊற்று!
பொன்னணியில் பாட்டொளிரும் கம்பன் நூலில்
     பொலிந்தொளிரும் காதலினைப் பொழிந்தார் நன்றே!
இன்னணியில் கவிபாடும் என்றன் நெஞ்சை
     இவர்கவிதை மயக்கியதே! எந்த நாளும்
முன்னணியில் தமிழ்மொழியை முழங்க வேண்டி
     முகுந்தனவன் திருவடியை வணங்கு கின்றேன்!

(தொடரும்)