கலித்துறை மேடை - 2
கலிநிலைத்துறை
குறிலீற்றுமா + கூவிளம் + விளம் + விளம் + மா
அறிமறியாகாமல், எழுத்து வரையறையப்படாமல் வருவது கலிநிலைத்துறையாம். பலவகையாகக் கலிநிலைத்துறை அமையும். ஒவ்வொன்றிலும் இன்ன இடத்தில் இன்ன சீர் வரவேண்டும் என்ற விதிகள் உண்டு.
ஓரடியில் ஐந்து சீர்கள் இருக்கும். நான்கு அடிகளைப் பெற்று வரும். நான்கடிகளும் ஓரெதுகை பெறும். 1.5 ஆம் சீர்களில் மோனை யமையும்.
கலித்துறைகளில் 1, 5 ஆம் சீர்களில் மோனை யமைவது பெரும்பான்மையாகும். இவற்றோடு 3 ஆம் சீரிலும் மோனை யமையின் ஓசைநயம் சிறக்கும். 5 ஆம் சீரில் மோனை யமையாத போது 3 அல்லது 4 ஆம் சீர்களில் மோனை யிருக்கும்.
குறிலீற்றுமா + கூவிளம் + விளம் + விளம் + மா
தெருண்ட மேலவர் சிறியவர்ச் சேரினும் அவர்தம்
மருண்ட புன்மையை மாற்றுவர் எனுமிது வழக்கே
உருண்ட வாய்தொறும் பொன்னுருள் உரைத்துரைத் தோடி
இருண்ட கல்லையும் தன்னிறம் ஆக்கிய இரதம்
[கம்ப. பால. சந்திரசயிலப் படலம் - 8 ]
கன்னல் கல்வியைக் காதுற மறுப்பதோ? காக்கும்
மன்னல் சீர்களை மண்ணுற நினைப்பதோ? வாழ்வில்
இன்னல் பாதையை இங்குற வைப்பதோ? இழிந்த
நன்னல் சொற்களை நாக்குற வாழ்வதோ? நன்றோ?
[பாட்டரசர்]
குறிலீற்றுமா என்றால் மாச்சீரின் ஈற்றெழுத்துக் குறிலாகவோ அல்லது குறிலொற்றாகவே வரவேண்டும். [அன்பு, அன்பர்] நெடில் ஈற்று மாச்சீர் வரக்கூடாது [ அன்பே, அன்பார்]
கூவிளம் வருமிடங்களில் தேமாங்காயும், கருவிளம் வருமிடங்களில் புளிமாங்காயும் அருகி வரும்.
விளமது வருமென விதித்த வீட்டினில்
விளமது கொண்டிலாக் காயும் வேண்டுவர்
என்பது விருத்தப்பாவியல் 12 ஆம் படலம் கூறும் இலக்கணமாம்.
மேற்கண்ட கலிநிலைத்துறை ஒன்றே ஒன்று விரும்பிய தலைப்பில் இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம், பிரான்சு.
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.
பாவலர் பயிலரங்கம், பிரான்சு
23.12.2023
Aucun commentaire:
Enregistrer un commentaire