dimanche 31 décembre 2023

கலித்துறை - 4

 


கலித்துறை மேடை - 4

 

கட்டளைக் கலித்துறை

மாங்கனி + கூவிளம் + கூவிளம் + குறிலீற்றுத்தேமா + தேமா

 

தாமந்தரு மொய்ம்புடை வீரன்ச யந்தன் விண்ணோர்

ஏமந்தரு  வன்சிறைச் சூழலு ளேக லோடுந்

துாமந்திகழ் மெய்யுடைக் காவலர் துப்பு நீக்கி

மாமந்திர மாம்வலைப் பட்டும யங்க லுற்றார்!

 

[கந்தபுராணம், வீரவாகு சயந்தனைத் தேற்று படலம்]

 

நேரசையில் தொடங்கிய இக்கட்டளைக் கலித்துறையில் ஓரடியில் எழுத்தெண்ணிக்கை ஒற்று நீக்கி 14  இருக்கும்.

 

கலப்பேயிலாச் செந்தமிழ் காணவே கால மெல்லாம்

சலிப்பேயிலாத் தொண்டினைச் செய்தவர், சால்பில் மிக்கார்,

மலைப்பேதரும் ஆய்வுடன் நுால்களைத் தந்த மாண்பால்

நிலத்தேமொழி ஞாயிறாய் வாழ்கிறார் தேவ நேயர்!

 

[புதுவைச் சந்தப்பாமணி அரங்க. நடராசனார், நற்றமிழ் இதழ் 15.02.2022]

 

நிரையசையில் தொடங்கிய இக்கட்டளைக் கலித்துறையில் ஓரடியில் எழுத்தெண்ணிக்கை ஒற்று நீக்கி 15  இருக்கும்.

 

வெல்லுந்தமிழ் பாவிலே வேந்தனாய் வீற்றி ருக்கும்

செல்லும்வெளி நாடெலாம் செந்தமிழ்ச் சீரி சைக்கும்

ஒல்லும்வகை உற்றோரை அன்பினால் ஊக்கு விக்கும்

சொல்லும்வழி தேனாகும் பாரதி தாசத் துாயோன்!

 

[கவிஞர் தே. சனார்த்தனனார்,  நற்றமிழ் இதழ் 15.02.2002]

 

நிலையேயிலா வாழ்வினை நித்தமும் நேர்த்தி யாக்க

அலையாய்வளர் வேட்கையை முற்றுமே அற்றுப் போக்க

கலையாய்த்தமிழ் காலமும் கண்ணெனக் காத்து வக்க

விலையாயுயிர் வீழினும் வாழுவோம் வெற்றி கொண்டே!

 

[படைக்களப் பாவளர்  துரை. மூர்த்தி,  நற்றமிழ் இதழ் 15.03. 2002]

 

நாட்டின்புகழ் ஓங்கிட நற்குறள் நாடி ஆள்வோம்!

பாட்டின்புகழ் ஓங்கிடப் பண்ணிசை பாடி ஆழ்வோம்!                               

ஏட்டின்புகழ் ஓங்கிட இன்னணி ஈட்டி ஆய்வோம்!

வீட்டின்புகழ் ஓங்கிட அன்பறம் மீட்டி வாழ்வோம்!

 

[பாட்டரசர்]

 

அருண்மேவிய நெஞ்சகம் வேண்டுமே! ஆழ்ந்து கற்றுப்

பொருண்மேவிய சிந்தனை வேண்டுமே! பொங்கு மாசை

அரண்மேவிய வல்லமை வேண்டுமே! அன்பும் பண்பும்

சரண்மேவிய நன்னிலை வேண்டுமே! தங்கத் தாயே!

 

[பாட்டரசர்]

 

ஓரடியில் ஐந்து சீர்கள் இருக்கும். நான்கு அடிகளைப் பெற்று வரும். நான்கடிகளும் ஓரெதுகை பெறும். 1.4 ஆம் சீர்களில் மோனை யமையும்.

 

நேரசையில் தொடங்கினால் ஓரடியில் 14 எழுத்துகளும் நிரையசையில் தொடங்கினால் 15 எழுத்துகளும் பெறும்.

 

குறிலீற்றுத்தேமா என்றால் தேமாச்சீரின் ஈற்றெழுத்துக் குறிலாகவோ அல்லது குறிலொற்றாகவே வரவேண்டும். [அன்பு, அன்பர்] நெடில் ஈற்று மாச்சீர் வரக்கூடாது

[அன்பே, அன்பார்]

 

கூவிளம் வருமிடங்களில் தேமாங்காயும் அருகி வரும்.

 

மேற்கண்ட கட்டளைக்கலித்துறை ஒன்றே ஒன்று விரும்பிய தலைப்பில் இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம், பிரான்சு.
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

பாவலர் பயிலரங்கம், பிரான்சு

30.12.2023

Aucun commentaire:

Enregistrer un commentaire