dimanche 15 janvier 2023

சந்தக் கலிவிருத்தம்

 


கவிதைப்பெண்

சந்தக் கலிவிருத்தம்

[முதல் மூன்று சீர்கள் 6 சந்த மாத்திரை + இறுதிச்சீர் 4  சந்த மாத்திரை]

 

இறைமாதவள் எனைநாடிட இனியாவையும் நலமே!

நிறைமாண்பவள் மனைநாடிட நிலையாகிடும் புகழே!

மறையானவள் இணையாகிட மதுவாகிடும் இரவே!

முறையானவள் அணையானவள் மொழியானவள் அவளே!

 

மணியானவள் மழையானவள் மலரானவள் கனவால்

பிணியோடிடும் பிழையோடிடும் பெயர்கூடிடும் உறவால்!

துணிவானவள் துணையானவள் சுவையூறிடும் அழகாம்!

அணியானவள் அமுதானவள் அறமானவள் அவளே!

 

பஞ்சானது பிஞ்சானது பண்பானவள் உருவம்!

வஞ்சானது வண்டாடுது வளமானவள் பருவம்!

நெஞ்சானது கவிபாடுது நினைவாலது உருகும்!

விஞ்சேகிட வியனேகிட விழியானவள் அவளே!

 

உடலானவள் உயிரானவள் உலகானவள்! இன்பக்

கடலானவள் கலையானவள் கனவானவள்! வாழ்வின்

சுடரானவள் சுவையானவள் சுகமானவள்! முன்னைத்

தொடரானவள் துடியானவள் துதியானவள் அவளே!

 

அருளானவள் அரணானவள் அகமானவள்! பாடும்

பொருளானவள் பொழிலானவள் பொலிவானவள்! என்றும்

வரமானவள்! வழியானவள் வடிவானவள்! காதல்

உரமானவள் ஒளியானவள் உறவானவள் அவளே!

 

பட்டானவள் பனியானவள் பற்றானவள்! இன்றேன்

மெட்டானவள் மொட்டானவள் பிட்டானவள்! மாயக்

கட்டானவள் காற்றானவள் கழையானவள்! வண்ணச்

சிட்டானவள் செம்பாலவள் செயமானவள் அவளே!

 

பாட்டானவள் உணர்வேயெழும் பண்ணானவள்! என்றன்

கூட்டானவள் உலகேதொழும் கூத்தானவள்! காக்கும்

பூட்டானவள் நெஞ்சேயொளிர் பொன்னானவள்! என்றும்

காட்டானவள் வாழ்வேயொளிர் கண்ணானவள் அவளே!

 

நாற்றானவள் நலமானவள்! நன்றேகவி நல்கும்

ஊற்றானவள் உயர்வானவள்! மூச்சேயென அவள்பூங் 

காற்றானவள் கனியானவள்! கண்ணேமகிழ் தமிழாய் 

நேற்றானவள் இன்றானவள் பின்னானவள் அவளே!

 

விண்ணானவள்! நேரேசெல விதியானவள்! விளையும்

மண்ணானவள்! மனமேயொளிர் மாண்பானவள்! இனிமைத்

தண்ணானவள்! தமிழானவள்! தகையானவள்! கவிதைப்

பெண்ணானவள்! தவமேயருள் பேறானவள் அவளே!

 

தேனானவள் தினையானவள் திருவானவள் அவளே!

மானானவள் மயிலானவள் மரையானவள் அவளே!

மீனானவள் மிகுசீரவள் விளைவானவள் அவளே!

வானானவள் மதியானவள் வாழ்வானவள் அவளே!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

08.01.2023

Aucun commentaire:

Enregistrer un commentaire