lundi 30 janvier 2023

சந்தக் கலிவிருத்தம் - 5

 

விருத்த மேடை - 88

 

சந்தக் கலிவிருத்தம் - 5

 

தாதன + தனதன + தனதன + தனனம்

[ஒவ்வொரு சீரும் 4  சந்த மாத்திரை]

 

கோதைகள் சொரிவன குளிரிள நறவம்

பாதைகள் சொரிவன பருமனி கனகம்

ஊதைகள் சொரிவன உறையுறு மமுதம்

காதைகள் சொரிவன செவிநுகர் கனிகள்

 

[கம்பன், பால. நாட்டு - 51]

 

முதல் 3 இடங்களில் தனதன மிகுதியாய் வரும். தந்தன, தாந்தன, தாதன அருகி வரும். 4 ஆம் இடத்தில் தனன,  தனனா இவற்றின் ஈற்றில் மெய் பெற்றவை மிகுதியாய் வரும் இப்பாடலில் வருவன எல்லாம் 4 சந்த மாத்திரைச் சீர்களே. மோனை 1, 3 ஆம் சீர்களில் அமையும்.

 

கனிமழை பொழிவன கவிமகள் விழிகள்!

பனிமழை பொழிவன பண்மகள் மொழிகள்!

தனிமழை பொழிவன தமிழ்மகள் வழிகள்!

இனிமழை பொழிவன எழிலவள் இணையோ?  

 

மணிவிழி தருமொழி மதுமழை பொழியும்!

அணிவழி யிதுவென அவணடை மொழியும்!

பணிவழி மணமுறு படர்கவி புனையும்!

பிணிவழி யினியிலை பெயர்புகழ் விளையும்!

 

[பாட்டரசர்]

 

மேற்கண்ட சந்தக் கலிவிருத்தம் ஒன்றே ஒன்று விரும்பிய தலைப்பில் இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம், பிரான்சு

29.01.2023

Aucun commentaire:

Enregistrer un commentaire