சாற்றுகவி
தென்பரையின் தமிழன்பன் சிந்தைக் குள்ளே
செந்தமிழாள் குடியிருக்கக் கண்டேன்! போற்றும்
இன்னிரையின் வண்ணத்தில் இனிக்கும் இந்நுால்
இன்பத்தின் பொன்னுாஞ்சல்! நற்றேன் ஊற்று!
மென்மரையின் பேரழகும் வியப்பும் கூட்டும்!
விடிவெள்ளிக் கதிராக வழியே காட்டும்!
வன்பறையின் முழக்கங்கள் உரிமை மூட்டும்!
வாழ்த்துகிறேன் பாட்டரசன் பல்லாண்[டு] இங்கே!
சீர்மணக்கும் தாய்மொழியை இதயம் சூடித்
தென்பரையின் தமிழன்பன் திகழக் கண்டேன்!
வேர்மணக்கும் கனியாகச் சுவைக்கும் இந்நுால்
விழிமயக்கும் பொன்னுாஞ்சல்! வீசும் தென்றல்!
ஏர்மணக்கும் ஊராச் செம்மை பூக்கும்!
எந்நாளும் தமிழ்மரபை ஏந்திக் காக்கும்!
பார்மணக்கும் புகழேந்தி நிலைத்து வாழப்
பாட்டரசன் பாடுகிறேன் பல்லாண்[டு] இங்கே!
சேற்பார்வை வண்ணமெனப் பாடும் ஆற்றல்
தென்பரையின் தமிழன்பன் புலமை கண்டேன்!
நாற்பாவைத் தலைசூடி நடக்கும் இந்நுால்
நலமளிக்கும் பொன்னுாஞ்சல்! நல்லோர் வாக்கு!
வேற்பார்வை எழிலுண்டு! விண்மீன் மின்னும்
விரிவுண்டு! விடையுண்டு! வெற்றி வேந்தர்
ஆற்பாதை நிழலுண்டு! வாழ்த்து கின்றேன்
அன்புளத்தால் பாட்டரசன் பல்லாண்[டு] இங்கே!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
பாவலர் பயிலரங்க முகநுால் குழுமம்
18.01.2023
Aucun commentaire:
Enregistrer un commentaire