நெஞ்சொளிர் தமிழைச் சூடி
நிறைமதி நீல மேகம்
பஞ்சொளிர் வெண்பா யாப்பில்
படைத்துள இந்நுால் வாழி!
மஞ்சொளிர் மணிகள் விஞ்சும்!
மதியொளிர் அணிகள் கொஞ்சும்!
நஞ்சொளிர் ஈசன் காக்க!
நன்மலர் உமையாள் காக்க!
நெடும்புகழ்க் குடியில் வந்த
நிறைமதி நீல மேகம்
இடும்புகழ் நெறிகள் ஏந்தி
இனித்திடும் இந்நுால் வாழி!
தொடும்புகழ் வழிகள் காட்டும்!
தொடர்புகழ் மொழிகள் சூட்டும்!
நடும்புகழ் கண்ணன் காக்க!
நறுமலர்க் கண்ணி காக்க!
நிழறரும் ஆலம் போன்று
நிறைமதி நீல மேகம்
குழறரும் இசையைக் கூட்டிக்
குழைத்திடும் இந்நுால் வாழி!
பொழிறரும் வாசம் வீசும்!
புவியுறு நேசம் பேசும்!
எழிறரும் முருகன் காக்க!
இளங்கொடி வள்ளி காக்க!
நிலமருள் பசுமை யாக
நிறைமதி நீல மேகம்
கலமருள் பாடம் கற்றுக்
கனிந்துள இந்நுால் வாழி!
நலமருள் புலமை பொங்கும்!
நற்றவ வளமை தங்கும்!
பலமருள் இராமன் காக்க!
பன்மலர் சீதை காக்க!
நீதிசேர் இதயங் கொண்ட
நிறைமதி நீல மேகம்
காதிசேர் வெண்பா யாப்பில்
கமழ்ந்திடும் இந்நுால் வாழி!
சாதிசேர் மடமை போக்கும்!
சமமெனும் பொதுமை பூக்கும்!
சோதிசேர் வள்ளல் காக்க!
தொன்மொழி யன்னை காக்க!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
பாவலர் பயிலரங்க முகநுால் குழுமம்
19.01.2023

Aucun commentaire:
Enregistrer un commentaire