vendredi 27 août 2021

சாற்றுகவி

பாவலர் செல்வ. மீனாட்சி சுந்தரம் எழுதிய

விருத்தமாயிரம் நுாலின் முதல் பகுதிக்குச் சாற்றுகவி!

 

பார்அரங்கைக் காத்துவரும் மறவர் போன்று

   பயிலரங்கைக் காக்கின்றார்! பொன்னால் செய்த

தேர்அரங்கைக் கண்டுவக்கும் மக்கள் போன்று    

   சீரரங்கை யாம்கண்டு வியப்பே யுற்றோம்!

யார்அரங்கை அடைந்தாலும் அங்கே யுள்ள

   யாப்பரங்கைக் கடைவிரிப்பார்! மரபின் மாட்சி

வேர்அரங்கைத் தாங்குகின்ற விழுதாய்ச் செல்வ.

   மீனாட்சி சுந்தனார் வாழ்க வாழ்க!

 

ஈரோட்டுப் பெரியாரின் போர்வாள் ஏந்தி

   எத்தர்களின் இழிசெயலை எதிர்த்து நின்றார்!

பாராட்டுப் பேரறிஞா் வழியை ஏற்றுப்

   பகுத்தறிவுப் பாசறையைக் காவல் செய்தார்!

தேரோட்டும் சாரதியாய்ப் பயிற்சி மன்றைச்

   சிறப்புடனே செலுத்துகிறார்! மனிதம் காத்தார்!

வேரூட்டும் வன்மையென என்றும் செல்வ.

   மீனாட்சி சுந்தரனார் வாழ்க வாழ்க!

 

பாடிவைத்த விருத்தங்கள் பாரின் சொத்து!

   பசுந்தமிழாள் சூடிமகிழ் வாசக் கொத்து!

மோடிவைத்த மாயத்தைக் குழிக்குள் போட்டு

   மூடிவைத்த எழுத்துக்கள் மொழியின் வித்து!

தாடிவைத்த பாரதியும், வங்கம் பெற்ற

   தாகூரும் இணைந்தெழுதும் கவிதைச் சித்து!

மேடைவைத்துத் தமிழ்பரப்பும் என்போல் செல்வ.

   மீனாட்சி சுந்தரனார் வாழ்க வாழ்க!

 

சொல்புதிது சுவைபுதிது பாடும் பாக்கள்!

   துாயதமிழ்ப் புலமையுளம் சூடும் பூக்கள்!

பல்புதிது முளைக்கின்ற மழலை யாகப்

   பழகுகின்ற அன்புக்கே ஈடும் இல்லை!

இல்புதிது காணுகின்ற இன்ப மாக

   எழுதுகின்ற கவித்தொண்டர்! என்றன் சீடர்!

வில்புதிது கூர்மையென எங்கள் செல்வ.

   மீனாட்சி சுந்தரனார் வாழ்க வாழ்க!

 

இலக்கணமும் இலக்கியமும் கண்கள் என்றே

   ஏத்துகின்றார்! மாண்பொளிரும் கொள்கை கொண்டார்!

கலையினமும் கவியினமும் கற்றே நாளும்

   களிக்கின்றார்! கற்றோர்மேல் காதல் பூண்டார்!

நிலவளமும் நீர்வளமும் ஓங்கும் நாடாய்

   நிறைகின்றார்! என்னணியில் முன்னே நின்றார்!

விலைக்கனமும் தலைக்கனமும் ஓடச் செய்யும்

   மீனாட்சி சுந்தரனார் வாழ்க வாழ்க!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

27.08.2021

Aucun commentaire:

Enregistrer un commentaire