பாவலர் செல்வ. மீனாட்சி சுந்தரனார்
பிறந்தநாள் வாழ்த்துப்பா!
வானாட்சி கதிரென்பேன்! வாழும் இந்த
மண்ணாட்சி அறமென்பேன்! ஈடே யில்லாத்
தேனாட்சி தமிழென்பேன்! ஈழங் கண்ட
தென்னாட்சி மறமென்பேன்! தழைத்தே ஓங்கும்
கானாட்சி அரியென்பேன்! யாப்பைக் காக்கும்
கவியாட்சி யானென்பேன்! கடமை நெஞ்சர்
மீனாட்சி சுந்தரனார் கொண்ட ஆட்சி
வியன்பெரியார் நெறியென்பேன்! வாழ்த்து கின்றேன்!
அன்பூறும் அகங்கண்டேன்! அறிவே ஓங்கி
அழகூறும் முகங்கண்டேன்! கற்றோர் போற்றும்
இன்பூறும் பணிகண்டேன்! பாடும் மன்றில்
எழிலுாறும் அணிகண்டேன்! இனத்தின் மேன்மை
என்பூறும் நிலைகண்டேன்! சந்தம் வண்ணம்
இசைந்துாறும் தலைகண்டேன்! ஒளியை நல்க
மின்னுாறும் விசையாக இயங்கும் ஆற்றல்
மீனாட்சி சுந்தரனார் வாழ்வில் கண்டேன்!
பகுத்தறிவுப் பாதையினைப் படைக்க வேண்டிப்
பகலிரவாய் உழைத்திடுவார்! நுால்கள் ஆய்ந்து
தொகுத்தறிவு மணந்திடவே நுண்மை சொல்வார்!
தோழரெனத் துணையிருப்பார்! உலகம் வாழ
வகுத்தறிவு நெறியுரைப்பார்! தமிழாம் அன்னை
வளமோங்க வாழ்வோங்க வழிகள் செய்வார்!
மிகுத்தறிவு மேதைகளை நெஞ்சுள் தாங்கும்
மீனாட்சி சுந்தரனார் வாழ்க! வாழ்க!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
பாலவர் பயிலரங்கம் பிரான்சு
26.08.2021
Aucun commentaire:
Enregistrer un commentaire