lundi 1 janvier 2018

பொலிக.. பொலிக.. புத்தாண்டு!

பொலிக.. பொலிக.. புத்தாண்டு!
  
1.
காலம்
கவியெழுதப் புதிய
பக்கத்தைத் திறக்கிறது!
காதல் கவிகள் கமழட்டும்!
கன்னல் கவிகள் கனியட்டும்!
  
2.
காலம்
புதிய ஆடை அணிகிறது!
ஆடையின் வண்ணம்
கண்களைக் கவரட்டும் - இன்பப்
பண்களைப் பகரட்டும்!
  
3.
காலம்
புதிய கணக்ககை எழுதுகிறது!
வரவுகள் மலரட்டும்!
உறவுகள் வளரட்டும்!
  
4.
காலம்
நுாலைத் திறக்கிறது - எழுது
கோலை எடுக்கிறது!
கொஞ்சிக் களிக்க
நெஞ்சி இனிக்க
வழிகளைக் குறிக்கட்டும்!
நன்னெறிகளை அளிக்கட்டும்!
  
5.
காலம்
புதிய இசையை இசைக்கிறது!
காதுக்குள்
தேன்வந்து பாயட்டும்!
புகழென்னும்
வான்வந்து சேரட்டும்!
  
6.
காலம்
புதிய அணியை அணிகிறது!
பேரழகில் நாள்கள் மிளிரட்டும்!
பாரழகில் என்றும் ஒளிரட்டும்!
  
7.
காலம்
புதிய நடனம் தொடர்கிறது!
கலைகள் ஓங்கட்டும் - தமிழைத்
தலைகள் தாங்கட்டும்!
  
8.
காலம்
புதிய இல்லம் புகுகிறது!
செல்வம் கொழிக்கட்டும்!
செம்மை செழிக்கட்டும்!
  
9.
காலம்
புதிய ஓவியம் தீட்டுகிறது!
காவியம் ஆகட்டும்! - சீர்கள்
மேவி..அகம் ஆளட்டும்!
  
10.
காலம்
புதிய கடையைத் திறக்கிறது!
தேனடையை வழங்கட்டும்!
தென்மொழியை முழங்கட்டும்!
  
11.
காலம்
புதிய பாதை படைக்கிறது!
உலகம் இணையட்டும்!
அன்பு மழையில்
உயிர்கள் நனையட்டும்!
  
12.
காலம்
புதிய ஆக்கம் புனைகிறது!
பூந்தமிழ் மணக்கட்டும்! - புவியே
பொற்றமிழை வணங்கட்டும்!
  
காலமே!
உன்னைத் தொழுகின்றேன்!
என்னை ஏந்திடுவாய்! - கவியுள்
பொன்னை ஈந்திடுவாய்!
  
காலமே!
உன்னைத் தொழுகின்றேன்!
எத்திசையும்
புகழைப் பரப்பிடுவாய்!
முத்தமிழை
என்னுள் நிரப்பிடுவாய்!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
01.01.2018

2 commentaires:

  1. ஆங்கிலப் பத்தாண்டு வாழ்த்துகள்

    RépondreSupprimer
  2. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    RépondreSupprimer