samedi 15 août 2015

தொல்காப்பிய மன்றம்




உலகத் தொல்காப்பிய மன்றம்
தொடக்க விழாவும்
முதல் கலந்துரையாடல் கூட்டமும்



நாள்: 27.09.2015 இடம்: பாரிசு (பிரான்சு)

தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கண நூல் தொல்காப்பியமாகும். 1847 இல் மழவை மகாலிங்க ஐயர் அவர்கள் தொல்காப்பிய நூலை ஓலைச்சுவடியிலிருந்து அச்சுவடிவில் முதன்முதல் பதிப்பித்தார். எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களாக உள்ள இந்த நூலில் 1600 நூற்பாக்கள் இடம்பெற்றுள்ளன. தில் ள்ள இலக்கணச் செய்திகளும், மொழியியல் செய்திகளும் உலக மொழியியல் வல்லுநர்களால் பெரிதும் வியந்து பார்க்கும் தரத்தில் உள்ளன. இந்த நூல் குறித்துத் தமிழறிஞர்களும், அயலகத்து அறிஞர்களும் சிறந்த ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளனர். தொல்காப்பியத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழாய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தொல்காப்பியத்தின் உண்மைப் பொருளையும் நுண்மைப் பொருளையும் காட்டும் வகையில் உரையாசிரியர்கள் உரை வரைந்துள்ளனர். தொல்காப்பியத்தை வழிமொழிந்து பல இலக்கண நூல்கள் தமிழில் வந்துள்ளன. தொல்காப்பியம் பிறமொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தொல்காப்பியம் பாடநூலாகக் கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் வைக்கப்பட்டுள்ளது. தொல் காப்பியம் குறித்த ஆய்வுகள், பதிப்புகள் தொடர்ந்து வெளிவந்த  வண்ணம் உள்ளன.

தொல்காப்பிய ஆய்வுகளை உலக அளவில் நடத்தும் வகையிலும், உலகெங்கும் உள்ள தொல்காப்பிய ஆய்வறிஞர்கள், பற்றாளர்கள், இலக்கிய, இலக்கண ஆர்வலர்களை ஒன்றிணைக்கும் வகையிலும் உலகத் தொல்காப்பிய மன்றம் என்ற அமைப்புத் தொடங்கப்பட உள்ளது. இந்த அமைப்புத் தொல்காப்பியத்தைப் பரப்புவதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது. உலகத் தொல்காப்பிய மன்றத்தில் தமிழ் படித்தவர்கள் மட்டும் என்று இல்லாமல் தமிழார்வலர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், கணினி வல்லுநர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், அரசியல் ஈடுபாட்டாளர்கள், மாணவர்கள் எனத் தமிழறிந்த அனைவரும் இணைந்து பணிபுரியலாம்.

தொல்காப்பிய மன்றம் பிரான்சைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட உள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் தொல்காப்பிய மன்றத்திற்குரிய கிளைகள் தொடங்கப்பட்டுத் தக்க ஆய்வறிஞர்களால் வழிநடத்தப்பட உள்ளன.

தொல்காப்பியம் குறித்த மாநாடுகளை ஆண்டுதோறும் நடத்தித் தொல்காப்பிய ஆய்வினை வளர்த்தெடுப்பது தொல்காப்பிய மன்றத்தின் முதன்மை நோக்கமாகும். மேலும் தொல்காப்பியப் பதிப்புகள், தொல்காப்பிய ஆய்வறிஞர்கள், தொல்காப்பியம்  குறித்த கட்டுரைகள், தொல்காப்பிய மொழிபெயர்ப்புகள் என அனைத்து விவரங்களையும் ஒன்றுதிரட்டி உலகத் தமிழர்களின் பயன்பாட்டுக்கு இணையத்தில் வைப்பது என்னும் நோக்கிலும் செயல்பட உள்ளது. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தொல்காப்பியச் செய்திகள் எளிமையாக வெளிவர உள்ளன.

தொல்காப்பிய ஆய்வில் ஈடுபட்டவர்களையும், தொல்காப்பியப் பரவலில் துணைநின்றவர்களையும் அறிஞர்கள்குழு அடையாளம் கண்டு ஒவ்வொரு ஆண்டும் பரிந்துரைசெய்யும். அதன் அடிப்படையில், மலேசியாவில் வாழ்ந்த தொல்காப்பிய அறிஞர் சீனி நைனா முகமது அவர்களின் பெயரில் உலக அளவிலான விருது வழங்கித் தக்கவரைப் போற்ற உலகத் தொல்காப்பிய மன்றம் எண்ணியுள்ளது.

தமிழார்வமும் இலக்கண, இலக்கிய ஈடுபாடும் கொண்டு, செயலுக்கு முதன்மையளிக்கும் தமிழ்மக்கள் இம்மன்றத்தில் இணைந்து பணிபுரியலாம். தொல்காப்பிய நூலில் புலமையும், தமிழ்மொழி வளர்ச்சியில் ஆர்வமும்கொண்ட முனைவர் பொற்கோ (சென்னைப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர்), பேராசிரியர் அ.சண்முகதாஸ் (இலங்கை),  முனைவர் இ.பாலசுந்தரம் (கனடா), முனைவர் சுப. திண்ணப்பன்(சிங்கப்பூர்), சிங்கப்பூர் சித்தார்த்தன், ம. மன்னர் மன்னன் (மலேசியா) ஜீன் லாக் செவ்வியார் (பிரான்சு), பேராசிரியர் இ. மறைமலை, முனைவர் சு. அழகேசன், புலவர் பொ.வேல்சாமி, சிவச்சந்திரன்(இலண்டன்), உள்ளிட்டவர்கள் இந்த மன்றத்தின் மூதறிஞர் குழுவில் இடம்பெற்றுள்ளவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்

பிரான்சு நாட்டின் தலைநகர் பாரிசில் 2015 செப்ம்பர் மாதம் 27 இல் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் தொடக்க விழாவும், முதல் கலந்துரையாடல் கூட்டமும் நடைபெற உள்ளன. இக்கூட்டத்தில் இந்தியா, இலங்கை, கனடா, சிங்கப்பூர், மலேசியா, பிரான்சு, இங்கிலாந்து, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பேராளர்கள் கலந்துகொண்டு கலந்துரையாட உள்ளனர். தொல்காப்பியத்தைப் பரப்பவும், தொல்காப்பிய ஆய்வுகளை முன்னெடுக்கவும், தொல்காப்பியம் குறித்த செய்திகளைத் திரட்டவும் ஆர்வமுடையவர்கள் உலகத் தொல்காப்பிய மன்றத்தினரை tolkappiyam@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம்.

தொல்காப்பிய மன்றத்தின் உலக அளவிலான பொறுப்பாளர்களாகப் பிரான்சில் வாழும் கி.பாரதிதாசன் (பிரான்சு), மு.இளங்கோவன் (இந்தியா), ஆம்பூர் மணியரசன் (செர்மனி), ஹரிஷ் (இலண்டன்), சந்தன்ராஜ் (சிங்கப்பூர்), வாணன் மாரியப்பன்(மலேசியா), அரவணைப்பு கு.இளங்கோவன் (குவைத்து), பழமலை கிருட்டினமூர்த்தி (குவைத்), த.சிவ பாலு(கனடா), சுரேஷ் பாரதி (சவுதி), அருள் பாலாசி வேலு(தைவான்), அன்பு ஜெயா (ஆத்திரேலியா), கிருட்டினமூர்த்தி (அந்தமான்), ஆகியோர் இணைந்து பணிசெய்ய உள்ளனர்.

தமிழ்ப்புலவர்களின் கையில் இருந்த தொல்காப்பியம் உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழர்களின் கவனத்திற்குச் செல்ல உள்ளமை மொழியார்வலர்களுக்கு இனிப்பான செய்தியாகும்.

தொடர்புக்கு:
கவிஞர் கி. பாரதிதாசன் 0033 139931706 kambane2007@yahoo.fr
முனைவர் மு.இளங்கோவன் 9442029053 muelangovan@gmail.com
 

15 commentaires:

  1. நல்ல முயற்சி. பாராட்டுகள்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      நல்ல செயல்யாவும் நன்மை விளைத்திடுமே!
      வல்ல அறிவை வளர்த்து!

      Supprimer
  2. பண்டையத் தமிழரின் இலக்கண இலக்கிய மொழி ஆர்வம் பற்றிய தகவல்களை உலகம் முழுவதும் பரவ வழிகாணும் உங்கள் முயற்சிக்கு எனது பணிவான வணக்கம் ஐயா.
    தித்திக்கும் தொல்லாய்வை தன்னார்வத் தோடேதான்
    எத்திக்கும் ஏந்தும் எழில்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்

      தித்திக்கும் செந்தமிழை எத்திக்கும் போற்றிடவே
      வித்திட்டேன் ஆசை மிகுத்து!

      Supprimer

  3. தொல்காப் பியச்சீரைத் தோள்மீது தான்ஏந்திப்
    பல்காப் பியம்பேணும் பாவலரே! - ஒல்காப்
    புகழேந்தும் நுாலைப் புவியேந்தச் செய்தால்
    சுகமேந்தும் வாழ்க்கை சுவைத்து!

    RépondreSupprimer
    Réponses

    1. ஒல்காப் புகழுடைய தொல்காப் பியத்தை..நாம்
      எல்லாத் திசைகளுக்கும் ஈந்திடுவோம்! - பல்லாண்டு
      காத்த பெருமையைக் கற்ற வழிசெய்வோம்
      மூத்த தமிழை மொழிந்து!

      Supprimer
  4. வணக்கம்
    ஐயா.

    தமிழனின் புகழ் தரணியில் உணர்த்திட
    தார்மீக உணர்வுடன் தளராத துணிவுடன்
    வையகம் போற்றிடும் வாழ்க எம் தமிழ்
    ஏற்றிய பணிகள் ஏணி போல் உயர.வாழ்த்துக்கள்
    த.ம 5

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      ஏற்ற பணிசிறக்கப் போற்றும் மனங்கண்டேன்!
      ஊற்றாய் இனிமை உளத்து!

      Supprimer
  5. வணக்கம் ஐயா!

    மிக அரிதான அருமையான முயற்சி ஐயா!
    தங்களின் பணியும் இம்மன்றில் இணைந்துள்ளது இரட்டிப்பு மகிழ்ச்சி!
    யாவும் சிறப்பாக அமைய என் வாழ்த்துக்களும்!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      இனிய இளமதியார் ஈந்த கருத்துக்
      கனிபோல் இனிக்கும் கமழ்ந்து!

      Supprimer
  6. நிகழ்ச்சி சிறப்புறவும்.
    தமிழ்தாயின் அன்பினை தாங்கி வாழவும் வாழ்த்துக்கள் ...!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      இனியா வருகை எழிற்றமிழை ஏந்தும்!
      கனியாய் இனிக்கும் கருத்து!

      Supprimer
  7. வணக்கம் ஐயா.
    தொல்காப்பியர் மன்றம் சிறப்புடன் நடந்தேற என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்ய கடமைப்பட்டுள்ளேன்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வருகைக்கு நன்றி! வளர்தமிழ் காக்கக்
      தரும்சொல் இனிக்கும் எனக்கு!

      Supprimer
  8. மிகவும் நல்ல செயல் அய்யா.....வாழ்த்துகள்

    RépondreSupprimer