dimanche 16 décembre 2012

உலகம் அழியட்டும் |பகுதி - 3]



உலகம் அழியட்டும்

இறைவன் பேசும் மொழியென்ன?
    எவா்தாம் அறிவார்? அனைத்துயிருள்
உறைவன் அவனே! உணராமல்
    ஓதும் வெறியால் பயனேது?
பிறையன்! அல்லா! அருள்யேசு!
    பெயா்கள் பலவாம்! எவ்விடத்தும்
நிறைவன் நிலையில் போர்புரியும்
    நிலமே துாளாய் அழியட்டும்!

மனித உயிரைக் பொசுவென்று
    நச்சு மழையைப் பொழிவதுவோ?
கனிய வைக்கும் பொருட்போட்டுக்
    காயைக் கனியச் செய்வதுவோ?
இனிய சொற்கள்! உயிர்நேயம்!
    எங்கே? எங்கே? பொய்க்கூட்டம்
புனித இடமா? புவிப்பந்து
    புடைத்துத் துாளாய் அழியட்டும்!

கற்றுக் களிக்கும் தாய்மொழியைக்
    கணக்குப் போட்டு மேடையிலே
விற்றுக் களிக்கும் வித்தகா்கள்!
    வெற்றுப் பேச்சு வாய்வீரா்
சுற்றும் கதைகள்! புராணங்கள்!
    சற்றும் உதவாத் துயா்க்குப்பை!
முற்றும் கலியின் துன்காலம்
    மோதி உலகம் அழியட்டும்!

இந்த மாதம் வருகின்ற
    இருபத் தொன்றாம் தேதியிலே
அந்தப் பழமை இனத்தவா்கள்
    ஆக்கி வைத்த நாளேட்டில்
தந்த தாள்கள் முடிந்தனவே!
    சாற்றல் மெய்யோ? பெரும்பொய்யோ?
எந்த நிலையோ? ஒருநொடியும்  
    எனக்கு வேண்டாம் இவ்வுலகே! 


2 commentaires:

  1. மனித உயிரைக் பொசுவென்று
    நச்சு மழையைப் பொழிவதுவோ?
    கனிய வைக்கும் பொருட்போட்டுக்
    காயைக் கனியச் செய்வதுவோ?
    இனிய சொற்கள்! உயிர்நேயம்!
    எங்கே? எங்கே? பொய்க்கூட்டம்
    புனித இடமா? புவிப்பந்து
    புடைத்துத் துாளாய் அழியட்டும்!

    மனதின் வலிகள் கவிதை வரிகளாகத்
    தவழும் விதம் அருமை ஐயா !...............

    RépondreSupprimer
  2. \\சுற்றும் கதைகள்! புராணங்கள்!
    சற்றும் உதவாத் துயா்க்குப்பை!
    முற்றும் கலியின் துன்காலம்//
    சரியான காரணம்தான்

    RépondreSupprimer