mercredi 26 décembre 2012

மீண்டுமோர் ஆசை [பகுதி - 1]



மீண்டுமோர் ஆசை

கம்பன் கழகம் நடத்தும் திங்கள் கவியரங்கம்
தலைமைக் கவிதை


தாயே! தமிழே! உன்னுடைய
    தயவால் ஏதோ இருக்கின்றேன்!
நாயே என்று நானிருந்த
    நலிவை மாற்றி நலங்கொடுத்தாய்!
காயே என்று நான்கொடுத்த
    கவியைக் கன்னல் என்றுண்டாய்!
சேயே என்று எனைத்தாங்கிச்
    செய்த நன்மை மறப்பேனா?

இருபத் தொன்றாம் குறளரங்கம்!
    ஈடில் தமிழின் கலையரங்கம்!
அரும்முத் தொன்றை அடைந்ததுபோல்
    ஆடும் பாடும் நம்கழகம்!
பெரும்சொத் தென்று காத்திடுவோம்!
    பெருமை உரைத்துக் கூத்திடுவோம்!
வரும்சொத் தெல்லாம் ஒருபொருட்டா?
    வண்ணத் தமிழே உயிர்ச்சொத்து!

கம்பன் கழகம் கவிக்கோட்டை!
    கழகத் தலைவா் கவியரசா்!
நம்மின் தொண்டா் தமிழ்மலரின்
    நற்றேன் பருகும் கவி..ஈக்கள்!
செம்மண் சேரும் மழைநீா்போல்
    செழித்த தமிழில் உயிர்கலக்கும்!
கும்மென் றிருக்கும் பேரழகாய்க்
    கொஞ்சும் கவிதை அணிவகுக்கும்!

கம்பன் கழகக் கவியரங்கக்
    கதவை மெல்லத் திறக்கின்றேன்!
நம்மின் கம்பன் புகழ்போற்றி!
    நன்றே தமிழின் நலம்போற்றி!
இம்மென் றுரைக்கும் முன்னாலே
    இன்றேன் கவிதை மழைபொழியும்!
உம்மென் றிருந்தால் சுவையுண்டோ?
    உங்கள் கைகள் ஒலிக்கட்டும்!

                         (தொடரும்)

9 commentaires:

  1. இனிக்க இனிக்க-
    கவிதை...

    இன்னும் தாருங்கள்....

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்! நன்றி!

      இன்னும் தொடா்ந்துவரும் ஈரைந்து பாடல்கள்
      பொன்னும் இணையோ புகல்!

      Supprimer
  2. வரும்சொத் தெல்லாம் ஒருபொருட்டா?
    வண்ணத் தமிழே உயிர்ச்சொத்து!

    ஆம் அய்யா தமிழே நமக்குள்ள அடையாளம்.அதுவே மிகப் பெரும் சொத்தாகும். நன்றி

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்! நன்றி!

      நம்மின் அடையாளம் நற்றமிழ் என்பதனை
      இம்மண் உணர இயம்பு!

      Supprimer
  3. Réponses

    1. வணக்கம்! நன்றி!

      தலைமைக் கவியழகு! தண்டமி்ழ்த்தாய் தந்த
      வளமைக் கவியழகு! வாழ்த்து!

      Supprimer
  4. நலங்கொடுத்த நல்ல தமிழ்க் கவிதைக்குப் பாராட்டுக்கள்..

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்! நன்றி!

      நல்ல தமிழ்க்கவியை நன்குணா்ந்து பாராட்டும்
      வல்ல மனத்தை வணங்கு!

      Supprimer

  5. வணக்கம்

    அன்புடன் வந்து கருத்தளித்தீா்! நன்றியைப்
    பண்புடன் சொன்னேன் பணிந்து!

    RépondreSupprimer