mercredi 31 juillet 2019

இரத பந்தம்



தேர் ஓவியக் கவிதை
செய்யுள் 100 எழுத்து ஓவியம் 87
  
என்னாசிரியர்
பாவலர்மணி சித்தனார் தேரமர்ந்து வருகவே!
  
நேரிசை ஆசிரியப்பா
  
தேவே! கோவே! புகழ்திகழ் கவியே!
நாவே வாழ்த்தி வணங்கும்! பாட
லாக்கி யுலகை யாளுமென் குருவே!
பூக்கள் துாவி நான்புனை தேரில்
சித்தரே ஏறி வருக! சீரார்
வித்தின் மேன்மை தருக!வே யொலியே!
இன்பேறே! ஈடி லன்பே!
நன்றே யொன்றி நாளும் வாழ்கவே!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
31.07.2019

mardi 30 juillet 2019

இரத பந்தம்


தேர் ஓவியக் கவிதை
  
நாதவே பார்..வான்தேர் போலென்தேர் சீரடைய,
மாதவே பார்..தமிழ் மாண்தொகையின் - வேதவேர்
சேர்..காவே! உன்சேய்நான் பொன்சேர் தகைதர,
வார்..பாவே தண்சீர் வடித்து!
  
தேவனே! தேர்சேர்ந்து சீர்த்தமிழ் மேவுக!
காவலே உள்ள கருணையே! - ஆவ
லுறுங்கவி யோக வளமே..சேர்! தேனே!
வறுமை யழியவே வா!
  
படிக்கும் முறை:

முதல் வெண்பா, தேரின் 1 என்ற குறியிட்ட இடத்தில் நேரே படித்துக் கீழிறங்கி நேராகப் படித்து இவ்வாறு வலது இடதுமாக மாறி மாறிப் படித்து இறுதியில் தேரின் அச்சுக்குச் சென்று 'சே' அங்கிருந்து வலது சக்கரத்தைச் சுற்றிச் சக்கர மையம் அடைந்து, மீண்டும் அச்சுக்கு வந்து, அங்கிருந்து இடது சக்கரத்தைச் சுற்றிச் சக்கர மையம் அடைந்து மீண்டும் அச்சியின் மையம் 'சே' வந்து நேரே மேலேறி வெண்பா தொடங்கிப் பக்கம் சென்று அங்குள்ள துாணேறித் துாணின் உச்சியில் நிறைவடையும்.
  
இரண்டாம் வெண்பா 2 என்ற குறியிட்ட இடத்தில் தொடங்கி நேரே படித்து மேலேறி நேராகப் படித்து இவ்வாறு வலது இடதுமாக மாறி மாறிப் படித்துத் தேரின் உச்சியை அடைந்து நடுவே இறங்கி வெண்பா தொடங்கிப் பக்கம் சென்று துாணில் இறங்கி நிறைவடையும்.
  
பாடல் கருத்துரை:
  
வெண்பா 1
  
வானில் செல்லும் சூரியத் தேர்போன்று என்னுடைய தேரும் சிறப்படைய தலைவனே என்னைப் பாராய். தாயானவனே! என்னைப் பாராய்! தமிழின் தொன்மைான ஆழமான கருத்துக்களை என் பாடலில் சோலையாகச் சேர்த்திடுவாய்! உன் மகன் பொன்போல் உயர்வடைய பாடும் பாடலில் தண்மையுடைய சீர்களை அளித்திடுவாய்.
  
வெண்பா 2
  
இறைவனே! நான் பாடும் தேரில் அமர்ந்து சிறப்புடைய தமிழை விரும்புகவே. என்னைக் காவலுறும் கருணையே! ஆசையுடன் பாடும் செய்யுளில் உயர்ந்த வளங்களை அருளுகவே. இனிக்கின்ற தேனே. என் வறுமையை போக்க வருகவே.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
30.07.2019

dimanche 28 juillet 2019

மலைப் பந்தம்


மலை ஓவியக் கவிதை
  
இலக்கணமலை
முனைவர் இரா. திருமுருகனார் புகழ் ஓங்குகவே!
  
உலகே வியக்கு மொண்டமிழ்க் கோவே!
நலமே யளித்த நற்கலை யமுதே!
மொழியே தழைக்க மூண்ட சுடரே!
கழனிபோல் விளைந்த அருங்கவி வளமே!
முதுமதி போல நின்னுரு முந்தும்!
புதுமை நீயே! பொற்புடைக் கோ..வில்
கூர்மை கொண்ட வல்ல அறிவே!
சீரரும் சிந்தினைக் கனியென வுண்டு
கட்டிய நுாலைக் கற்றோர் நாளும்
கற்றே காத்திங் காழ்வர்! வீரா!
மொழிப்போர்க் களத்து வேழா!
பழிப்பா ருணரப் பாடிய தமிழிசை
வன்மை கோத்து வாரி யிடுமே!
திண்மழை யே!யா ழே!குழ லே!தினம்
மிகுமிகு கன்னல் மேவ வுழத
தகுநலங் காணத் தமிழ்க்குண மிகுகொண்டு
வண்ணத் தமிழை வழாங்க வருகவே!
    
மலையின் அடியில் 'உலகே' என்று பாடல் தொடங்கி இடம்வலம், வலம்இடம் என மாறிமாறிப் படித்துக் கொண்டே மலையின் உச்சிவரை சென்று, அங்கிருந்து நேரே சீழிறங்க முதல் செய்யுள் நிறைவடையும்.
      
நிலவண்ணக் கட்டங்களில் உள்ள எழுத்துக்களை, மலையின் கீழிருந்து மேலலேறிக் கீழே யிறங்கினால் ஒரு குறள் வெண்பா வரும். குறளில் பாட்டுடைத் தலைவன் பெயரும் எனது வேண்டுதலும் உள்ளன.
  
குறள் வெண்பா
  
திருமுருக ராகத் திகழத் தமிழே
தருக கவியே தலை!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
27.08.2019

samedi 27 juillet 2019

தேர்ப் பந்தம்


தேர் ஓவியக் கவிதை

பார்வேண்டும் கல்வியே! நல்லுறவே! பைந்தமிழால்
சீர்வேண்டும் சிந்தை சொலிப்புறவே! - ஊர்ப்பச்சைக்
காரோங்கக் கட்டுகவே! தங்கமே! வேரோடு
பாரோங்கச் சொல்லுகவே பா!

பார்..சேர் பலகலையே! உன்னுடைய சேண்மாகண்
சீர்சேர் தமிழே!தண் சேர்பார்..சேர் - தார்..சேர்
புகழே! பொலிவேசேர்! தாயே தருக
பகையே ஒழிதேர்சேர் பா!

விளக்கவுரை:
    
உலகம் கற்றவர்களின் நல்லுறவை வேண்டும். சிந்தை செழிப்படைய பைந்தமிழின் சீரினை வேண்டும். ஊரில் பச்சைவயல்களின் அழகோங்கச் செய்வாய்! தங்கத்தமிழே நிலைத்து நிற்கும் வண்ணம் பாரோங்கச் சொல்லுவாய் பாட்டு.

தமிழே! என்னைப் பார்த்திடுவாய். பல்கலையே சேர்த்திடுவாய்! உன்னுடைய நீள்கயல் கண்களால் எனக்குச் சீரினைச் சேர்த்திடுவாய். குளிர்ச்சியைச் சேர்த்திடுவாய்! உறவாக இப்புவியைச் சேர்த்திடுவாய்! வெற்றி மாலையைச் சேர்த்திடுவாய்! புகழையும் பொலிவையும் சேர்த்திடுவாய்! என் தாயே! பகையை ஒழிக்கின்ற தேரைச் சேர்கின்ற பாடலைத் தந்திடுவாய்.

சித்திரத்தில் 1வது எண்ணிருக்கும் இடத்தில் முதல் வெண்பாவைத் தொடங்கி இடம்வலம், வலம்இடம் என மாறிமாறிப் படித்துக் கொண்டே தேரின் உச்சிவரை சென்று, அங்கிருந்து நேரே சீழிறங்க முதல் வெண்பா நிறைவடையும்.

நிறைவடைந்த 'பா' எழுத்தில் தொடங்கி வலது சக்கரத்திலிறங்கிச் சுற்றிப் படித்து உள்வட்டத்தையும் அவ்வாறே படித்து வந்த வழியே 'பா' வந்து, இடது சக்கரத்திலிறங்கிச் சுற்றிப் படித்து, உள்வட்டத்தையும் அவ்வாறே படித்து வந்த வழியே 'பா' வந்து இரண்டாம் வெண்பா நிறைவடையும்.

பாட்டரசர் கி. பாரதிதாசன்
26.07.2019

jeudi 25 juillet 2019

சிவலிங்கப் பந்தம்



சிவலிங்க ஓவியக் கவிதை - 3
[பாடல் 143 எழுத்து, ஓவியம் 128 எழுத்து]
  
என்னாசிரியர்
அந்தாதி அரசர் பா.சு. அரியபுத்தரனார்
செழிப்பை யருள்கவே!
  
விந்தைத் தமிழை வேண்டித் தொழுதார்!
சிந்தை யினிக்கத் தேன்கவி வடித்தார்!
நாள்கள் யாவும் நலமே பெருகத்
தாள்கள் துாய வழியை யன்பையே
நாடிப் பொழிலே செல்ல, நெஞ்ச
மோடி மேவு முயர்வை! வாழ்வு
மேன்மை யூட்டும்! நாட்டும் வெற்றியை!
கோன்மை நல்கி மேலாங் கோலிடும்!
பேரார் சற்குரு பாரெலாம் வாழ்த்தவே
சீரெலாம் மேவுஞ் செழிப்பை யருள்கவே!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
24.07.2019