lundi 3 août 2026

முனைவர் ஆ. அச்முதீனார்

 


முனைவர் ஆ. அச்முதீனார் எழுதிய

பிரான்சு தமிழர்களின் உலகம் போற்றும்

தமிழ்ப்பணி நுாலுக்குச் சாற்றுகவி

 

உலக மெங்கும் தமிழ்மக்கள்

      உயர்ந்து வாழும் வரலாற்றைக்

குலவும் தமிழில் கொடுக்கின்ற

      கோல மிக்க இந்நுாலைப்

பலவும் கற்ற நுண்ணறிவால்

      படைத்த முனைவர் அச்முதீனார்

நலமும் வளமும் தாம்பெற்று

      நன்றே வாழ்க பல்லாண்டே!

 

பெருமை பெற்றுப் புகழ்வீசும்

      பிரான்சு நாட்டில் வாழ்தமிழர்

அருமை யுற்றுத் தமிழ்ப்பணியை

      ஆற்றும் வல்ல வரலாற்றைத்

திரு..மை கொண்டு வடித்துள்ள

      சீர்மை முனைவர் அச்முதீனார்

ஒருமை வள்ளல் பாட்டாக

      ஓங்கி வாழ்க பல்லாண்டே!

 

சாலை சோலை அழகொளிரும்

      சால்பு மிக்க பிரான்சினிலே

காலை மாலை பாராமல்

      கடமை யாற்றும் தமிழ்மக்கள்

மூளை கொண்ட மொழிப்பற்றை

      மொழிந்த முனைவர் அச்முதீனார்

மாலை யிட்டு வாழ்த்துகிறேன்

      மகிழ்ந்து வாழ்க பல்லாண்டே! 

  

ஒண்மைத் தமிழின் சீர்காக்க,

      உயிராய் இனத்தின் போ்காக்க,

தண்மை கொண்ட மேனாட்டில்

      தமிழர் அமைத்த சங்கங்கள்

உண்மைப் பணியை நன்காய்ந்தே

      உரைத்த முனைவர் அச்முதீனார்

வண்மை யிறைவன் திருவருளால்

      வாழ்க வாழ்க பல்லாண்டே!

 

புலமே பெயர்ந்த திருநாட்டில்

      புகழே யடைந்த தமிழ்மக்கள்

உளமே உவக்கும் வண்ணத்தில்

      உலகே போற்றும் இந்நுாலை

வலமே செல்லும் தேரழகாய்

      வடித்த முனைவர் அச்முதீனார்

கலமே கற்ற பாட்டரசன்

      கவிபோல் வாழ்க பல்லாண்டே!

 

அன்புடன்

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்

கம்பன் கழகம், பிரான்சு

தொல்காப்பியர் கழகம், பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

பாவலர் பயிலரங்கம், பிரான்சு

30.07.2026

 

Aucun commentaire:

Enregistrer un commentaire