mercredi 5 août 2026

கொள்கைநிறை பார்வதி தனகாந்தராசர்

 

கொள்கைநிறை பார்வதி தனகாந்தராசர்

குவலயம் போற்ற வாழியவே!

 

கலையோங்கும் திருநாடு வளமை பூக்கும்!

         கவியோங்கும் திருநாடு புலமை காக்கும்!

அலையோங்கும் திருநாடு செல்வஞ் சேர்க்கும்!

         அறயோங்கும் திருநாடு மகிழ்ச்சி கொள்ளும்!

மலையோங்கும் திருநாடு மாட்சி ஏற்கும்!

         மதியோங்கும் திருநாடு காட்சி யோங்கும்!

குலையோங்கும் திருநாடு கல்வி யாகும்!

         குணமோங்கும் பார்வதியார் வாழ்க! வாழ்க!

 

துணிவுடனே பணிபுரிந்தால் மேன்மை கிட்டும்!

         சுவையுடனே பணிபுரிந்தால் சீர்..கை தட்டும்!

பணிவுடனே பணிபுரிந்தால் புகழே ஓங்கும்!

         பண்புடனே பணிபுரிந்தால் அழகே தோன்றும்!

அணியுடனே பணிபுரிந்தால் அகிலம் போற்றும்!

         அருளுடனே பணிபுரிந்தால் அமைதி சூழும்!

திணிவுடனே பணிபுரிந்தால் திசைகள் ஓதும்!

         தீர்ப்புரைக்கும் பார்வதியார் வாழ்க! வாழ்க!

 

பெற்றோரின் சோலையிலே மகிழ்ந்தே யாடிப்

         பெரியோரின் சோலையிலே பிணைந்தே பாடிக்

கற்றோரின் சோலையிலே அறமே நாடிக்

         கவியோரின் சோலையிலே புகழே தேடி

உற்றோரின் சோலையிலே உயர்வே சூடி

         உறவோரின் சோலையிலே ஒன்றே கூடி

மற்றோரின் சோலையிலே மதிப்பே கோடி

         வாழ்கின்ற பார்வதியார் வாழ்க! வாழ்க!

 

நாட்டினிலே நன்னெறிகள் வளர வேண்டும்!

         நாவினிலே நன்னெறிகள் மலர வேண்டும்!

ஏட்டினிலே நன்னெறிகள் இனிக்க வேண்டும்!

         இளமையிலே நன்னெறிகள் தழைக்க வேண்டும்!

பாட்டினிலே நன்னெறிகள் பரவ வேண்டும்!

         பண்பினிலே நன்னெறிகள் குலவ வேண்டும்!

வேட்பினிலே நன்னெறிகள் விளைய வேண்டும்!

         விளம்புகின்ற பார்வதியார் வாழ்க! வாழ்க!

 

05.08.2026

Aucun commentaire:

Enregistrer un commentaire