lundi 4 juillet 2022

நன்றி..நன்றி..நன்றி..

நன்றி..நன்றி..நன்றி..


ஏன்பிறந்தேன் என்றெண்ணி வாடும் வேளை

        இவ்வரங்கின் பாவலர்காள்  ஒன்றாய்க் கூடி

நான்பிறந்தேன் தமிழ்காக்க, உரிமை காக்க,

        நற்றமிழர் மாண்பியலை நன்றே காக்க,

வான்பிறந்தேன் மழையாக, கம்பன், கீரன்,

        வழிபிறந்தேன்! மறவரணி பிறந்தேன்! சந்தத்

தேன்பிறந்தேன் என்றழகாய்ப் போற்றிப் பாடிச்

        சீருரைத்தீர்! மகிழ்வுற்றேன்! நன்றி! நன்றி!!

 

முன்வினையின் செயலென்று மூளை சோர்ந்து

        மூலையிலே முடங்கியுயிர் கிடக்கும் வேளை

என்வினையின் செயல்யாவும் தமிழர் ஏற்றம்!

        எண்டிசையும் புகழ்பாடி நாளும் போற்றும்!

பொன்வினையின் அணியாகப் பாக்கள் மின்னும்!

        புலவர்தம் உள்ளத்தைச் சேர்த்தே பின்னும்!

இன்வினையின் நலமாக வாழ்த்துப் பாடி

        என்னுயிரை மகிழ்வித்தீர்! நன்றி! நன்றி!!

 

என்னென்றும் ஏதென்றும் அறியா வண்ணம்

        என்றலையைத் துயர்கூடி அழுத்தும் வேளை

துன்பென்னும் கடலுக்குள் முழுகா வண்ணம்

        தேணியெனக் கவியளித்தீர்! கரையைக் கண்டேன்!

வென்றென்றும் வாழ்கின்ற புலமை போற்றி,

        விழியிரண்டில் கமழ்கின்ற கருணை சாற்றி,

அன்பென்னும் ஆரமுதை யள்ளி யூட்டி

        அகங்குளிரச் செய்வித்தீர்! நன்றி! நன்றி!!

 

நாளெல்லாம் நற்பணிகள் செய்த போதும்

        நலிவுற்ற காரணத்தை அறியா வேளை

தோளெல்லாம் கவிமாலை சுமக்கச் செய்தீர்!

        துணையில்லா வாழ்க்கைக்குத் துணிவைத் தந்தீர்!

தாளெல்லாம் கிறுக்குகின்ற குழந்தை போன்று

        தத்தளித்து மகிழ்வுற்றேன்! தமிழே யுண்டேன்!

கோளெல்லாம் என்செய்யும்? உங்கள் வாழ்த்துக்

        குன்றெனவே எனைக்காக்கும்! நன்றி! நன்றி!!

 

விதிசெய்த சூழ்ச்சியிலே சிக்கிச் சிக்கி

        வீழ்வுற்றுத் துயரடியில் சுருண்ட வேளை

மதிசெய்த செந்தமிழால் விடிவைக் காட்டி,

        மதுச்செய்த விருத்தத்தால் இனிமை கூட்டி,

நதிசெய்த இருகரையாய்க் காவல் நாட்டி,

        நரம்புக்குள் புத்துணர்வை நன்றே ஏற்றி,

துதிசெய்த அருட்பாவாய் வாழ்த்தைத் தந்தீர்!

        தொடர்கின்றேன் தமிழ்ப்பணியை! நன்றி! நன்றி!!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

02.07.2022

samedi 2 juillet 2022

கலிவிருத்தம் - 3

 

கலிவிருத்தம் - 3 [இழைபு அமைந்தது]

 

குறிலீற்றுமா + கூவிளம் + கூவிளம்+ கூவிளம் 

 

மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

ஈசன் எந்தை யிணையடி நீழலே!

[திருநாவுக்கரசர் தேவாரம்]

 

சிந்தை இன்புறும்! செவ்வுரை சீர்தரும்!

முந்தை நன்னெறி முன்வரும் பேர்தரும்!

விந்தை மின்னிட மேன்மையின் தார்தரும்!

எந்தை பாடிய இன்றமிழ் வண்ணமே!  

 [பாட்டரசர்]

 

கன்னல் ஊறிடும்! காதலை ஏந்திடும்!

இன்னல் மாறிடும்! இன்னிலை ஓங்கிடும்!

தென்றல் வீசிடும்! தேன்கவி பேசிடும்!

என்னுள் வந்தவள் என்னவோ செய்கிறாள்!

[பாட்டரசர்]

 

வல்லொற்றே வாராமல் நெடிலும் மெல்லொற்றும் மிகுதியாக வரும் பாடல் இசைக்கு ஏற்றதாயிருக்கும். அதனை இழைபு என்னும் வனப்பு என்பர். மேற்கண்ட பாடல்களில் இவ்வியல்புகளைக் காண்க.

 

கலிவிருத்தம் ஓரடியில் நான்கு சீர்களைப் பெறும். நான்கடிகள் ஓரெதுகையில் அமையும். ஒன்று மூன்றாம் சீர்களில் மோனை வரும்.

 

மேலுள்ள இழைபு கலிவிருத்தம்  குறிலீற்றுமா + கூவிளம் + கூவிளம்+ கூவிளம் என்ற வாய்பாட்டில் அமைந்தது.

 

இவ்வகைக் கலிவிருத்தத்தில் கூவிளம் வரும் இடங்களில் மாங்காய் அருகி வரும்.

விளம்வரும் இடத்தில் மாச்சீர் வந்து அடுத்து வரும்சீர்  நிரை முதலால் அமையும்!

 

இவ்வகையில் நேரசையில் தொடங்கினால் 11 எழுத்தும், நிரையசையில் தொடங்கினால் 12 எழுத்தும்  இருக்கும்.

குறிலீற்றுமா + கூவிளம் + கூவிளம்+ கூவிளம் என்ற வாய்பாட்டில் விரும்பிய தலைப்பில் இழைபு கலிவிருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம், பிரான்சு
25.06.2022

கலிவிருத்தம் - 2

 

கலிவிருத்தம் - 2

 

விளம் + விளம் + குறிலீற்றுமா + கூவிளம்

 

சொற்றுணை வேதியன் சோதி வானவன்!

பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்

கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்

நற்றுணை யாவது நமச்சி வாயவே!

 

பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை!

ஆவினுக் கருங்கலம் அரனஞ் சாடுதல்!

கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது!

நாவினுக் கருங்கலம் நமச்சி வாயவே!

 

இல்லக விளக்கது இருள்கெ டுப்பது!

சொல்லக விளக்கது சோதி யுள்ளது!

பல்லக விளக்கது பலருங் காண்பது!

நல்லக விளக்கது நமச்சி வாயவே!

 

[திருநாவுக்கரசர் தேவாரம்]

 

வயிரவான் பூணணி மடங்கல் மொய்ம்பினான்

உயிரெலாம் தன்னுயிர் ஒக்க ஓம்பலால்

செயிரிலா உலகினில் சென்று நின்றுவாழ்

உயிரெலாம் உறைவதோர் உடம்பும் ஆயினான்!

 

[கம்பன், பால. அரசியல் - 10]

 

அன்பெனும் தேனதி அகத்தில் பாய்ந்திடும்!

துன்பெனும் வல்வினை துார ஓடிடும்!

நன்பெனும் பண்பினை நாளும் நல்கிடும்!

இன்பெனும் தமிழினை என்றும் ஏத்துவோம்!

 

[பாட்டரசர்]

 

கலிவிருத்தம் ஓரடியில் நான்கு சீர்களைப் பெறும். நான்கடிகள் ஓரெதுகையில் அமையும். ஒன்று மூன்றாம் சீர்களில் மோனை வரும். விளம் வரும் இடங்களில் மாங்காய்ச்சீர் அருகி வரும்.

 

விளம் + விளம் + குறிலீற்றுமா + கூவிளம் என்ற வாய்பாட்டில் விரும்பிய தலைப்பில் கலிவிருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம், பிரான்சு
18.06.2022

கலிவிருத்தம் - 1

கலிவிருத்தம் - 1

 

குறிலீற்று மா + கூளம் + கூளம்+ கூளம்

 

உலகம் யாவையும் தாமுள ஆக்கலும்

நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா

அலகி லாவிளை யாட்டுடை யார்அவர்

தலைவர் அன்னவர்க் கேசரண் நாங்களே!

 

[கம்பம், கடவுள் வணக்கம்]

 

உலகெ லாமுணர்ந் தோதற் கரியவன்!

நிலவு லாவிய நீர்மலி வேணியன்!

அலகில் சோதியன்! அம்பலத் தாடுவான்!

மலா்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்!

 

[சேக்கிழார். பெரிய புராணம் - 1]

 

ஓசை பெற்றுயர் பாற்கடல் உற்றொரு

பூசை முற்றவும் நக்குபு புக்கென

ஆசை பற்றி அறையலுற் றேன்மற்றிக்

காசில் கொற்றத் திராமன் கதையரோ!

 

[கம்பன். பாயிரம் - 4]

 

ஒற்றி மேவிய உத்தம னே!மணி

தெற்றி மேவிய தில்லையப் பா!விழி

நெற்றி மேவிய நின்மல னே!உனைப்

பற்றி மேவிய நெஞ்சமுன் பாலதே!

 

[வள்ளலார். திருவருட்பா - 1098]

 

உலகு நின்னருள்! ஒள்ளொளி நல்கிடும்

நிலவு நின்னருள்! நீர்,வளி, தீ,வெளி

பொலிவு நின்னருள்! பொற்கவி நற்றிற

வலிவு நின்னருள்! வந்தருள் செய்கவே!

 

[பாட்டரசர்]

 

கண்ணன் நல்லடி கண்மலர் மேவிட

மண்ணில் வந்துறும் வல்வினை மாய்ந்திடும்!

எண்ணம் சீர்பெற இன்றமிழ் கற்றிட

விண்ணின் வீடென மேதினி மின்னிடும்!

 

[பாட்டரசர்]

 

கலிவிருத்தம் ஓரடியில் நான்கு சீர்களைப் பெறும். நான்கடிகள் ஓரெதுகையில் அமையும். ஒன்று மூன்றாம் சீர்களில் மோனை வரும்.

 

மேலுள்ள கலிவிருத்தம்  குறிலீற்று மா + கூளம் + கூளம்+ கூளம் என்ற வாய்பாட்டில் அமைந்தது.

 

குறிலீற்று மா என்றால் என்ன?

 'உலகம்' என்ற மாச்சீர் இறுதியில் கம் குறிலொற்று வந்தது. 'நிலவு' என்ற மாச்சீர் இறுதியில் வு குறில் வந்தது. குறிலையோ, குறிலொற்றையோ இறுதியாகப் பெற்றுவரும் மாச்சீர், குறிலீற்று மாச்சீர் எனப்படும்.

 

இவ்வகைக் கலிவிருத்தத்தில் கூவிளம் வரும் இடங்களில் மாங்காய் அருகி வரும். மேலுள்ள முன்றாம் பாடலில் 'றேன்மற்றிக்' என விளம் வரும் இடத்தில் மாங்காய் வந்தது.

 

மேலும் 2, 3, ஆம் இடங்களில் மாச்சீர்வரின் அடுத்தசீர் நிரை முதலாகும், மேலுள்ள  மூன்றாம் பாடலில் பற்றி, இராமன் என விளம்வரும் இடத்தில் மாச்சீர் வந்து அடுத்து வரும்சீர்  நிரை முதலால் அமைந்தது!

 

இவ்வகையில் நேரசையில் தொடங்கினால் 11 எழுத்தும், நிரையசையில் தொடங்கினால் 12 எழுத்தும்  இருக்கும்.

குறிலீற்று மா + கூளம் + கூளம்+ கூளம் என்ற வாய்பாட்டில் விரும்பிய தலைப்பில் கலிவிருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம், பிரான்சு
11.06.2022