vendredi 13 décembre 2019

மூவின வெண்பா - 2


வெண்பா மேடை - 151   
மூவின வெண்பா - 2
  
காதல் நலங்கூட்டும்! யாழின் களிப்பூட்டும்!
நாத வகைநாட்டும்! கண்கமழும் - மாதவமாய்
விந்தைச் சுவையூட்டும்! நற்கவிதை வாழ்வோங்கச்
சிந்தை மரபூட்டும் வார்த்து!
  
வெண்பாவின் முதல் சீர் தொடக்கம் வல்லினத்திலும், இரண்டாம் சீர் தொடக்கம் மெல்லினத்திலும், மூன்றாம் சீர் தொடக்கம் இடையினத்திலும், இவ்வாறே மாறி மாறி ஈற்றுச்சீர்வரை அமையவேண்டும்.
  
விரும்பிய பொருளில் 'மூவின வெண்பா' ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன். "பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிடுக.
  
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
நிறுவுநர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
13.12.2019


mercredi 11 décembre 2019

மூவின வெண்பா - 1




வெண்பா மேடை - 150
  
மூவின வெண்பா - 1
  
தண்பொழில் பூத்தொளிரும்! தங்குசுவைத் தேன்கனிகள்
கண்ணெழில் கோத்தொளிரும்! காப்பொளிரும்! - பண்ணெழில்
சந்தமொழிக் கூத்தொளிரும்! தண்டமிழே! பார்மணக்க
வந்தவழி மூத்தொளிரும் வாழ்ந்து!
  
வெண்பாவின் அனைத்துச் சீர்களிலும் தமிழின் மூவினம் பயின்று வரவேண்டும் [வல்லினம், மெல்லினம், இடையினம்]
  
விரும்பிய பொருளில் 'மூவின வெண்பா' ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன். "பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிடுக.
  
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
நிறுவுநர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
11.12.2019

dimanche 8 décembre 2019

ஈற்று விடைக் குறள்


வெண்பா மேடை - 149
    
ஈற்று விடைக் குறள்
  
தொடுக்கும் கேள்வியின் ஈற்றில் பதில் அமையும் வண்ணம் பாடப்படும் குறள்.
  
1.
நன்றே தரும்தாய்பால் என்னென்று நற்சபையில்
முன்னே உரைத்தாய் மொழி?
  
மொழிதல் - சொற்களைத் தெளிவாகச் சொல்லுதல்
  
விடை: தாய்மொழி
  
2.
தண்மலரே! சான்றநுால் காக்கும்! தகைகூறும்!
ஒண்மலரே என்ன உரை?
  
உரைத்தல் - பொருளுடன் சொல்லுதல்
  
விடை : நுாலைக் காப்பது - மேலுரை
தகைகூறுவது - விளக்கவுரை
  
3.
மாரனே! நாமாடும் மாண்பு விளையாட்டு
வீரனே! சொல்வாய் விடை?
  
விடை: காளைமாடு [ஏறுதழுவும் விளையாட்டு]
  
4.
கலையேற்கும்! மின்னும் கணியேற்கும்! கோவில்
சிலையேற்கும் தேர்ந்ததைச் செப்பு?
  
செப்புதல் - வினாவிற்கு விடை சொல்லுதல்
  
விடை: செப்புக்கம்பி
  
5.
ஆற்றுக் குளதாம்! அழகே! அணிமொழியாய்!
காற்றுக் கிலையாம் கரை?
  
கரைதல் - அழைத்துச் சொல்லுதல்
  
கரை: நீர்க்கரை, எல்லை
ஆற்றுக்கு கரையுண்டு,
காற்றுக்குக் கரையில்லை
  
6.
ஆட்டுக் கடைக்கே அதிகாலை செல்கின்றேன்
கூட்டிப் பொருள்களைக் கூறு?
  
கூறுதல் - கூறுபடுத்திச் சொல்லுதல்
  
விடை: ஆட்டுக்கறி ஒரு கூறு வேண்டும்
  
7.
உன்னுடை ஏற்கும்! உறங்க இடமிருக்கும்
அன்புடை நண்பா அறை!
  
அறைதல் - வன்மையைாய் மறுத்துச் சொல்லுதல்
  
விடை: வீட்டின் அறை
  
8.
போரேந்தும் அண்ணல் புகழேந்தும்! பேரழகாய்ச்
சீரேந்தும் வார்த்த சிலை!
  
விடை: சிலை - வில்
அண்ணல் இராமனின் புகழேந்தும் வில்லுடையவன்.
  
9.
வெண்மதி காண்பிறையைத் தாங்கும் முகத்தழகை
நுண்மதி யாளே நுதல்
  
நுதலுதல் - ஒன்றைச் சொல்லித் தொடங்குதல்
  
விடை: நுதல் [பெண்ணின் நெற்றி]
  
10.
தேருணர முன்னொளிக்கும்! ஈற்றொளிக்கும்! தேவியே
பாருணரப் பாடிப் பறை
  
பறைதல் - அனைவரும் அறிய வெளிப்படுத்துதல்
  
விடை: பறைமேளம்
  
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
நிறுவுநர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
08.12.2019

jeudi 5 décembre 2019

குறில் நெடில் வெண்பா


வெண்பா மேடை - 148
  
குறில் நெடில் வெண்பா
  
பொன்மேவு பூஞ்சிட்டே! மின்மேவு சீர்ப்பட்டே!
இன்மேவு தேன்கட்டே! எந்நாளும் மோகமே
உள்ளூற, ஆசையால் சொல்லுாற, தேவியே!
கள்ளூறக் காட்டுவாய் கண்!
    
நெடில் குறில் வெண்பா
    
பாடவே கண்காட்டு! பாவையே பண்மாலை
சூடவே இன்பூட்டு! தோழியே எந்நாளும்
ஆடியே அன்பூட்டு! ஆசையே! என்மார்பில்
கூடியே நன்காடும் கூத்து!
  
கட்டளைக் கலித்துறைபோல் ஒற்றுகளை நீக்கி இவ்வெண்பாவைக் கணக்கிடவேண்டும். குறில் பின்னே நெடில் வரவேண்டும். நெடில் பின்னே குறில் வரவேண்டும் [இடையில் ஒற்று வரலாம். வராமலும் இருக்கலாம்] வெண்பா குற்றெழுத்தில் தொடங்கினால் குறில் நெடில்.. குறில் நெடில் என வரவேண்டும். நெட்டெழுத்தில் தொடங்கினால் நெடில் குறில்.. நெடில் குறில் என வரவேண்டும்.
  
விரும்பிய பொருளில் 'குறில் நெடில் வெண்பா' அல்லது 'நெடில் குறில் வெண்பா' ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன். "பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிடுக.
  
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
நிறுவுநர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
05.12.2019

mardi 3 décembre 2019

முதற்சீர் பிறழடி வெண்பா


வெண்பா மேடை - 147
  
முதற்சீர் பிறழடி வெண்பா
  
வானே யெனப்புகழ் வார்க்கின்ற வண்டமிழே!
மானே யெனத்துள்ளும் என்மனமே! - கானே..நீ
வேய்நீந்தி மேவும் வியனிசையாய், என்னுடைய
வாய்நீந்திச் செந்தேனே வா!
  
கான் - மணம்
வேய் - புல்லாங்குழல்
  
தாதுருவி வாசமிகு சாந்திழைத்து, தேன்கலந்து
வா..துருவிச் சீரேந்தி! வண்டமிழே! - மாதுருவில்
கொண்ட இறைவன் குணமொழியே! நான்மகிழத்
தண்டமிழே பாவிருது தா!
  
தாது - பூவிதழ்
உருவி - உருவுதல்
துருவி - ஆராய்தல்
மாதுருவில் - மாதை உருவில் கொண்ட
  
பிறழ்தல் - மாறுதல்
  
வெண்பாவின் முதற்சீரில் உள்ள எழுத்துக்கள் தலைகீழாய், வெண்பாவின் ஈற்றில் அமையவேண்டும். மேலுள்ள முதல் வெண்பாவில் 'வானே' என்று வந்த முதல் சீர் ஈற்றில் 'னே..வா' என்று வந்தது. இரண்டாம் வெண்பாவில் 'தாதுருவி' என்று வந்த முதல்சீர் 'விருது..தா' என்று வந்தது.
  
விரும்பிய பொருளில் முதற்சீர் பிறழடி வெண்பா ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன். "பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிடுக.
  
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
நிறுவுநர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
12.12.2019