samedi 7 janvier 2017

அம்போதரங்க ஒத்தாழிசை


அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா
[ஒரு தரவு + மூன்று தாழிசை + அம்போதரங்கம் + தனிச்சொல் + சுரிதகம்]
  
கண்ணா வாராய்!
  
தரவு

சூடியணிந்த சுடர்க்கொடிபோல் சுவையொழுகப் படர்தமிழில்
பாடியணிந்த கவிகேட்டுப் பரமா..உன் விழிதிறவாய்!
கூடிமகிழ்ந் தெனைத்தழுவக் குதித்திங்கு வரவேண்டும்!
ஆடிமகிழ்ந் தெனையணைத்து அருளமுதைத் தரவேண்டும்!
கோடிமலர் குவித்தாலும் குளிர்முகத்துக் கிணையாமோ?
வாடிமனம் கிடக்கின்றேன்! வழிமூடித் தடுக்காதே!
ஓடிவரும் உணர்வலையை உசுப்பிவிடும் மணிமார்பா!
நாடிவரும் ஆசைகளை நானுரைக்க மொழியேது?
  
தாழிசை
கோதையவள் மயங்கிடவே குழலுாதி இசைத்தவனே!
சீதையவள் மயங்கிடவே சிவவில்லை ஒடித்தவனே!
போதை..இவள் அடைந்திடவே பொழுதெல்லாம் சிரிப்பவனே!
பேதையிவள் தவிக்கின்றேன் பெருங்கருணை புரிவாயே! [1]
  
பல்லாண்டு கவிகேட்டுப் பனிபோன்று குளிர்ந்தவனே!
வில்லாண்டு வினைமுடித்து வியன்புகழை அடைந்தவனே!
கல்லாண்டு கிடந்தவளைக் கழிந்தெழவே நடந்தவனே!
சொல்லாண்டு தொழுகின்றேன்! சுடர்க்கருணை அருள்வாயே! [2]
  
ஆழ்வாரின் தமிழமுதை அனுதினமும் சுவைப்பவனே!
வீழ்வாரின் குறைதீர்த்து விழிநீரைத் துடைப்பவனே!
தாழ்வாரின் தலைமீது தகையடியைப் பதிப்பவனே!
கூழ்போன்று கொதிக்கின்றேன்! குளிர்கருணை பொழிவாயே! [3]
  
அம்போதரங்கம் பேரெண் [நாற்சீர் ஈரடி இரண்டு]
தாயுரைத்த சொற்கேட்டுத் தந்தைவரம் காத்திட்ட
சேயுளத்துத் திருராமன் செயலெண்ணிப் போற்றுகிறேன்! [1]
கங்கையெனும் துறையடைந்து கருங்குகனின் அன்புண்டு
தங்கமனத் தம்பியெனத் தாங்கியதைச் சாற்றுகிறேன்! [2]
  
அம்போதரங்கம் அளவெண் [நாற்சீர் ஓரடி நான்கு]
வாலிக்கு வீடளித்த வள்ளல் நீயே! [1]
வண்வீடன் தனையணைத்த மல்லன் நீயே! [2]
மேலிருக்கும் வீட்டுக்கு வேந்தன் நீயே! [3]
வேண்டிவரும் அன்பருக்குத் தோழன் நீயே! [4]
  
அம்போதரங்கம் இடையெண் [முச்சீர் ஓரடி எட்டு]
அலைதுயிலும் பேரழகா போற்றி! [1]
இலைதுயிலும் ஓரழகா போற்றி! [2]
மலைதுாக்கி நிரைகாத்தாய் போற்றி! [3]
சிலைதுாக்கி அறங்காத்தாய் போற்றி! [4]
மண்ணளந்த மாயவனே போற்றி! [5]
பண்ணளந்த மாதவனே போற்றி! [6]
விண்ணளந்த வேங்கடனே போற்றி! [7]
தண்ணளந்த தயாநிதியே போற்றி! [8]
  
அம்போதரங்கம் சிற்றெண் [இருசீர் ஓரடி பதினாறு]
கண்ணா போற்றி! [1]
வண்ணா போற்றி! [2]
மன்னா போற்றி! [3]
பொன்னா போற்றி! [4]
அன்பே போற்றி! [5]
அமுதே போற்றி! [6]
இன்பே போற்றி! [7]
எழிலே போற்றி! [8]
அருளே போற்றி! [9]
அறமே போற்றி! [10]
திருவே போற்றி! [11]
திறமே போற்றி! [12]
கடலே போற்றி! [13]
கதிரே போற்றி! [14]
உடலே போற்றி! [15]
உயிரே போற்றி! [16]
  
என்றுரைத்து [தனிச்சொல்]
  
சுரிதகம்
  
உன்னைத் தொழுதே உவந்து கிடக்கும்
என்னை அணைத்தே இன்புற வாராய்!
திருமலைச் செல்வா! அருங்கலை வாணா!
பெருநிலை தந்து பேணிட வாராய்!
கன்னி பாடும் கவிகளைக் கேட்டுப்
பின்னிப் பிணைந்து பேசிட வாராய்!
யானை குரல்கேட் டெழுந்தாய்!
தேனை நிகர்குரல் தேவிக்கு அருள்கவே
  
பாட்டரசன் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
07.01.2017

lundi 2 janvier 2017

வெண்பா மேடை

வெண்பா மேடை - 34
    
வழிமோனை வெண்பா!
  
கன்னல் கவிக்குயிலே! கண்கவரும் காரிகையே!
கன்னம் கமழ்மலரோ? கற்கண்டோ? - கன்னியுன்
காதாடும் கன்மணியைக் காற்றாடும் கார்க்குழலைக்
காதல் கவியெழுதக் காட்டு!
  
வெண்பாவின் அனைத்துச் சீர்களிலும் மோனை ஒன்றி வருவது வழிமோனை வெண்பா எனப்படும்.
  
வழிமோனை வெண்பா ஒன்றை விரும்பிய பொருளில் பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் வெண்பாவைப் பதிவிட வேண்டுகிறேன்!
   
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
02.01.2017

dimanche 1 janvier 2017

கேட்டலும் கிளத்தலும்

கேட்டலும் கிளத்தலும்
  
உரிச்சொல் முன் வல்லினம் மிகும் என்று படித்துள்ளேன். நனி என்ற உரிச்சொல் முன் மிகாது என்பதை இலக்கியச் சான்றுடன் விளக்கம் தருக.
  
இளமதி, சர்மனி
  
-----------------------------------------------------------------------------------------------------------------------
  
உயிரீற்று உரிச்சொல் முன் வல்லினம் மிகும் என்பது பொதுவிதியாம். அதில் நனி மிகாது என்பது தனி விதியாம்.
  
சால, தட, தவ என்னும் உரிச்சொற்களுக்குப் பின் வல்லினம் மிகும்.

பால்நினைந்து ஊட்டும் தாயினும்
சாலப் பரிந்து [திருவாசகம்]
  
பொருதடக்கை வாளெங்கே? மணிமார் பெங்கே? [கலிங்கத்துப்பரணி]
  
தவச்சிறிது ஆயினும் மிகப்பலர் என்னாள் [ புறநானுாறு]
  
உறு, நனி, கழி, என்னும் உரிச்சொற்களுக்குப்பின் வல்லினம் மிகாது.
  
உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் [ புறநானுாறு]
  
நனிபசு பொழியும் பாலும் [பாவேந்தர்]
  
கழிபெருவகை
  
மா என்ற சொல்முன் வல்லினம் மிகுதலும் உண்டு, மிகாமையும் உண்டு.
  
மாபழிக்கு மனநடுக்கம் கொள்ளுகின்றேன் [ பாவேந்தர்]
  
மாகடல் [கம்பன் 1034 ] மாதவம்[ கம்பன் 1343] மா கிழங்கு [கம்பன் 2078] கம்பனில் மா முன் வல்லினம் மிகாமல் வந்துள்ளது.
  
மாத்துயர் [கம்பன் 1418] மாக்கரி [கம்பன் 1359] மாக்கனி [கம்பன் 2078] மாத்தலை [கம்பன் 2956] கம்பனில் மா முன் வல்லினம் மிகுத்து வந்துள்ளது.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
01.01.2017

கேட்டலும் கிளத்தலும்

கேட்டலும் கிளத்தலும்
  
இங்குச் சென்றான், இங்கு சென்றான் எது சரியென்பதை இலக்கியச் சான்றுடன் விளக்கம் தருக
  
இளமதி, சர்மனி
-----------------------------------------------------------------------------------
  
இங்குச் சென்றான் என்பதே சரி. ஏழாம் வேற்றுமையிடப் பொருள் உணர நின்ற அங்கு, ஆங்கு, இங்கு, ஈங்கு, உங்கு, ஊங்கு, எங்கு, யாங்கு, யாண்டு என்னும் இடைச்சொற்களின் முன் வல்லினம் மிகும்.
  
அங்குக் கண்டேன்
ஆங்குக்கண்டேன்
இங்குச்சென்றேன்
ஈங்குச்சென்றேன்
உங்குத்தந்தான்
ஊங்குத்தந்தான்
எங்குப் பெற்றான்
யாங்குப்பெற்றான்
யாண்டுப்பெற்றான்
    
வெங்கண்திண் களிறடர்த்தாய்
   விற்றுவக்கோட் டம்மானே!
எங்குப்போய் உய்கேனுன்
   இணையடியே அடையலல்லால்
எங்கும்போய்க் கரைகாணா
   தெறிகடல்வாய் மீண்டேயும்
வங்கத்தின் கூம்பேறும்
   மாப்பறவை போன்றேனே!
         [நாலாயிரம். பெருமாள் திருமொழி, 692]
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
01.01.2017

அருளோங்கும் ஆண்டே வா..வா!




அருளோங்கும் ஆண்டே வா..வா!  

ஐந்து கரத்தவனை - மனம்
ஆழ்ந்து தொழுதிடுவோம்!
ஐந்து பொறியடங்கும்! - என்றும்
அன்பு நெறிதுலங்கும்!

அத்தி முகத்தானை - நம்
புத்தி பதித்திடுவோம்!
பக்தி மிகுந்துவரும் - அருஞ்
சக்தி மிளிர்ந்துவரும்!

தொந்தி கணபதியை - கால்
தொட்டு வணங்கிடுவோம்!
சிந்தை தெளிந்திடவே - பல
விந்தை புரிந்திடவே!

யானை முகத்தவனை - எங்கும்
ஏத்திப் பணிந்திடுவோம்!
தேனை நிகர்த்ததமிழ் - தினம்
தீட்டி அணிந்திடுவோம்!

பானை வயிற்றானை - நாளும்
பாடி மகிழ்ந்திடுவோம்!
மோனை கொழித்தோங்கும் - நம்
மூளை விழித்தோங்கும்!

சின்ன விழியுடையான் - நற்
சீரடி பற்றிடுவோம்!
பொன்னும் பொருளோங்கும் - எப்
பொழுதும் அருளோங்கும்!

மின்னும் முடியானை - போற்றி
வித்தை பயின்றிடுவோம்!
மன்னும் நலங்கோடி - கலை
வளரும் உளங்கூடி!

ஓங்கார நாயகனை - மனம்
ஓதி உணர்ந்திடுவோம்!
பூங்கொடி போலுள்ளம் - நனி
பூத்து மணந்திடுவோம்!

பெருங்கா[து] அடைந்தவனின்  - புகழ்
பேணித் துதித்திடுவோம்!
வருமாண்[டு] ஒளிர்ந்தோங்கும் - வாழ்வின்
வளங்கள் வளர்ந்தோங்கும்!

தந்தம் தரித்தவனை - மெய்
தாழ்ந்து இறைஞ்சிடுவோம்!
வந்துள ஆண்டோங்கும் - உயர்
மாண்பினைப் பூண்டோங்கும்!

கும்பம் உடையவனைக் - கைக்
கூப்பிக் குனிந்திடுவோம்!
கம்பன் தமிழ்கற்று - நற்
கவிகள் புனைந்திடுவோம்!

தும்பிக்கை கொண்டவனை - நாம்
நம்பிக்..கைக் குவித்திடுவோம்!
எம்பிவரும் ஆண்டோங்கும் - தமிழ்
எங்குமினி ஆண்டோங்கும்!

பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
01.01.2017