dimanche 1 janvier 2017

அருளோங்கும் ஆண்டே வா..வா!




அருளோங்கும் ஆண்டே வா..வா!  

ஐந்து கரத்தவனை - மனம்
ஆழ்ந்து தொழுதிடுவோம்!
ஐந்து பொறியடங்கும்! - என்றும்
அன்பு நெறிதுலங்கும்!

அத்தி முகத்தானை - நம்
புத்தி பதித்திடுவோம்!
பக்தி மிகுந்துவரும் - அருஞ்
சக்தி மிளிர்ந்துவரும்!

தொந்தி கணபதியை - கால்
தொட்டு வணங்கிடுவோம்!
சிந்தை தெளிந்திடவே - பல
விந்தை புரிந்திடவே!

யானை முகத்தவனை - எங்கும்
ஏத்திப் பணிந்திடுவோம்!
தேனை நிகர்த்ததமிழ் - தினம்
தீட்டி அணிந்திடுவோம்!

பானை வயிற்றானை - நாளும்
பாடி மகிழ்ந்திடுவோம்!
மோனை கொழித்தோங்கும் - நம்
மூளை விழித்தோங்கும்!

சின்ன விழியுடையான் - நற்
சீரடி பற்றிடுவோம்!
பொன்னும் பொருளோங்கும் - எப்
பொழுதும் அருளோங்கும்!

மின்னும் முடியானை - போற்றி
வித்தை பயின்றிடுவோம்!
மன்னும் நலங்கோடி - கலை
வளரும் உளங்கூடி!

ஓங்கார நாயகனை - மனம்
ஓதி உணர்ந்திடுவோம்!
பூங்கொடி போலுள்ளம் - நனி
பூத்து மணந்திடுவோம்!

பெருங்கா[து] அடைந்தவனின்  - புகழ்
பேணித் துதித்திடுவோம்!
வருமாண்[டு] ஒளிர்ந்தோங்கும் - வாழ்வின்
வளங்கள் வளர்ந்தோங்கும்!

தந்தம் தரித்தவனை - மெய்
தாழ்ந்து இறைஞ்சிடுவோம்!
வந்துள ஆண்டோங்கும் - உயர்
மாண்பினைப் பூண்டோங்கும்!

கும்பம் உடையவனைக் - கைக்
கூப்பிக் குனிந்திடுவோம்!
கம்பன் தமிழ்கற்று - நற்
கவிகள் புனைந்திடுவோம்!

தும்பிக்கை கொண்டவனை - நாம்
நம்பிக்..கைக் குவித்திடுவோம்!
எம்பிவரும் ஆண்டோங்கும் - தமிழ்
எங்குமினி ஆண்டோங்கும்!

பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
01.01.2017

4 commentaires:

  1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    RépondreSupprimer
  2. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா...

    RépondreSupprimer
  3. அருமையான பதிவு

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

    RépondreSupprimer
  4. இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

    RépondreSupprimer