பாவலர் வில்லூர்ப் பாரதி
ஆழி யளவுப்
பற்றுடையார்
பேசா துள்ள கருவாய்ந்து
பேணி யெழுதுந்
திறனுடையார்!
வாசா.. பாசா.. பெயர்சூடி
வாழும்
வில்லூர்ப் பாரதியார்!
ஈசா வுன்னை வேண்டுகிறேன்
இவர்க்கே யாவும்
நல்குகவே!
அஞ்சா நெஞ்சும் அகத்தெளிவும்
அமைந்த கவிஞர்!
வரும்பகையைப்
பஞ்சா பறக்க விடுகின்ற
பாட்டுக் கணையைச்
செய்மறவர்!
மஞ்சா போட்ட வன்மையென
வாழும் வில்லூர்ப் பாரதியார்!
துஞ்சா துலகுக்[கு] உணர்வூட்டித்
தொடர்ந்து பாடி
வெல்லுகவே!
வீட்டில் உள்ள அனைவர்க்கும்
வெற்றி வழியைக்
காட்டிடுவார்!
நாட்டில் உள்ள அனைவர்க்கும்
நல்ல தமிழை
யூட்டிடுவார்!
ஏட்டில் உள்ள அனைவர்க்கும்
இனியர் வில்லூர்ப் பாரதியார்!
காட்டில் உள்ள தேனடையாய்க்
கவிதை பாடி
ஓங்குகவே!
அருளும் அறனும்
உடையவராம்!
இன்பும் துன்பும் ஒன்றென்ற
ஈடில் குறளை
உரைப்பவராம்!
அன்றும் இன்றும் நன்னெறியை
ஆளும் வில்லூர்ப் பாரதியார்!
என்றும் வாழ்க புகழுடனே!
இளமைத் தமிழின்
அழகுடனே!
அகநூல் புறநூல் கற்றவராம்!
அருணூல் பொருணூல் பெற்றவராம்!
புகழ்நூல்
குறளின் வழியேற்றுப்
புதுநூல் புனைந்து களித்தவராம்!
முகநூல் வழியே
முத்தமிழை
முழங்கும் வில்லூர்ப் பாரதியார்!
தொகைநூல்
புலவர் திருமரபில்
தொடர்ந்து பாடி வாழியவே!
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம், பிரான்சு
தொல்காப்பியர் கழகம், பிரான்சு
உலகத் தமிழ்ச் சிறகம்
பாவலர் பயிலரங்கம், பிரான்சு
12.04.2025