திருவாவடுதுறை ஆதீனப் புலவர்
முனைவர் கி. சிவகுமார் வாழியவே!
செஞ்சொல் வேண்டும் பாட்டுக்குச்
சீர்ச்சொல்
தந்த நம்முனைவர்
வெஞ்சொல் வேண்டாம் பாட்டுக்கு
வேர்ச்சொல்
கண்டு பாடுகவே!
தஞ்சொல் யாவும் அமுதுாறிச்
சாற்றும் ஆற்றல்
வாழியவே!
அஞ்சொல் தாசன் வியக்கின்றேன்
ஆகா வென்று
புகழ்கின்றேன்!
முல்லை எங்கள் ஊரில்லை!
முத்தாய் மின்னும்
அருஞ்சொல்லை
எல்லை யில்லா வண்ணத்தில்
எடுத்தே உரைத்த
நம்முனைவர்!
கொல்லைப் புறத்துக் கிளிக்கூட்டம்
கொறித்தே உண்ணுஞ்
சுவையாக
நெல்லை யப்பன் திருவருளால்
நேயத் தமிழை
யாமுண்டோம்!
சேல்கொள் வாணன் நற்சீரைச்
சீர்கொள் வண்ணம்
நம்முனைவர்
பால்கொள் சுவையாய்ப் படைத்திட்டார்!
பண்கொள் இனிமை
யாமுற்றோம்!
வேல்கொள் வேந்தன் அருளென்பேன்!
வேர்கொள் தமிழின்
புகழென்பேன்!
மால்கொள் மங்கை யழகாக
மனங்கொள் தமிழைக்
கற்றோமே!
நம்பி தந்த அகப்பொருளை
நம்பி நமக்குக்
கொடுத்திட்டார்!
தும்பி போன்று பன்மலரில்
துய்த்துத்
தேனை அளித்திட்டார்!
தம்பி தங்கை அனைவருமே
தண்மைத் தமிழைச்
சுவைத்திட்டோம்!
எம்பி நின்று கவிகேட்டேன்!
ஏற்றங் கண்டு
புகழ்ந்திட்டேன்!
தஞ்சை வாணன் கோவையினை
நெஞ்சம் மகிழ
உரைத்திட்டார்!
நஞ்சை வயலின் விளைவாக
நல்ல தமிழைப்
படைத்திட்டார்!
பஞ்சை ஊதிப் விடுவதுபோல்
பாட்டின் அரசன்
பறக்கின்றேன்!
மஞ்சை உலவும் வானளவு
வாழ்த்தை வழங்கி
வணங்குகிறேன்!
சொல்லின் சந்தம் விளையாடத்
துாய புலமை
விளையாட
இல்லின் இன்பம் விளையாட
இதயக் காதல்
விளையாடக்
கல்லின் உடலில் நற்சிற்பி
கலையைத் தந்து
விளையாட
வில்லின் கூர்மைப் பாட்டரசன்
வெற்றி பாடி
வாழ்த்துகிறேன்!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
06.09.2025
Aucun commentaire:
Enregistrer un commentaire