jeudi 11 septembre 2025

ஓரொலி வெண்டுறை



ஓரொலி வெண்டுறை
 
அரசியலார்!
 

ஊழல் முதலைகளை உளமாரப் பாடி உவக்கும் புலவர்

சூழல் அனைத்தையும் சுருட்டுகின்ற தலைவ தம்மால்

ஏழை  துயர்நீங்க எள்ளளவும் வழியுண்டோ?

 

பூட்டியுள வீட்டைப் பொறிக்கிகள் தாம்கொண்டு சொந்த மாக்கி

நாட்டியுள சொத்து நாலிரு தலைமுறைக்கு வருமே! இவர்கள்

நாட்டிலுள வஞ்ச நரியெனச் சாற்றுகவே!

 

அடியாள் கொண்டாச்சி நடத்துவதா? அன்பின்றிக் கூர்மைக் கத்தி

தடியால் கொண்டாச்சி தள்ளுவதா? துடிதுடிக்க அழிவே நல்கும்

வெடியால் கொண்டாச்சி  மிரட்டுவதா? என்னாடே!

 

தலைவனின் இருதாள்கள் தழுவி நக்குகின்ற தொண்டன் தானே
கொலையனின் மிகுகொடியன்! கொள்ளை யிடுகின்ற கள்ளன்! பதவி
விலையனின் அடிவேரை வெட்டி வீழ்த்துகவே!


கால்நக்கிப் பதவி பெறுகின்ற கட்சித் தலைவன்! பத்தி

வேல்நக்கிப் பதவி பெறுகின்ற வெற்றுத் தொண்டன்! பணத்தில்

மேல்நக்கிப் பதவி விளைகின்ற என்னாடே!

 

மாடேயிலா நிலைமைக்கும்,  மனையேயிலா வீட்டுக்கும்

கடன்தருவார்! விளையும்

காடேயிலா உழவுக்கும், கடையேயிலாத் தொழிலிக்கும் 

கடன்தருவார்! சின்ன

ஏடேயிலாக் கணக்கெழுதி ஏப்பமிடும் என்னாடே!

 

நாட்டுப்பணம் என்ன? நல்லோர் பணமென்ன? நம்பித் தந்த  

காட்டுப்பணம் என்ன? கண்ணீர்ப் பணமென்ன? ஆட்டை போட்டு

வீட்டுப்பணம் ஆக்கும் விந்தை நாடிதுவே! 

 
முன்னே ஈரடிகள் ஆறு சீர்களையும் பின்னோர் அடி நான்கு சீர்களையும் பெற்றுச் சிறப்பில்லா  ஏழு தளையாலும் வந்த ஓரொலி வெண்டுறை.
 
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் - பிரான்சு
உலகத் தமிழ்ச் சிறகம்
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.
பாவலர் பயிலரங்கம், பிரான்சு.
11.09.2025

Aucun commentaire:

Enregistrer un commentaire