என்னவள்
கண்ணுள் இருக்கின்றாள் - மீட்டும்
பண்ணுள் இனிக்கின்றாள்!
விண்ணில் பிறந்தவளோ? - இந்த
மண்ணில் சிறந்தவளோ?
வஞ்சி பாடுகிறாள் - கனவில்
கொஞ்சி யாடுகிறாள்!
பஞ்சின் இனத்தவளோ? - இளம்
பிஞ்சின் மனத்தவளோ?
எண்ணங் கூட்டுகிறாள் - சுக
வண்ணங் காட்டுகிறாள்!
தண்ணந் தருங்கடலோ? - தேன்
கிண்ணம் இவள்உடலோ?
நாவில் களிக்கின்றாள் - தமிழ்ப்
பாவில் குளிக்கின்றாள்!
பூவில் வளர்ந்தவளோ? - என்
ஆவி கலந்தவளோ?
கொல்லை உழுகின்றாள் - காதல்
எல்லை தொழுகின்றாள்!
முல்லைக் கொடியவளோ - எனைக்
கொள்ளை யடித்தவளோ?
சிந்தை ஒளிர்கின்றாள் - பல
விந்தை புரிகின்றாள்!
முந்து நலத்தவளோ - பாடும்
சிந்து வளத்தவளோ?
நெஞ்சம் படருகிறாள் - மலர்
மஞ்சம் தொடருகிறாள்!
கெஞ்சி மயக்குவதேன் - எழில்
விஞ்சி இயக்குவதேன்?
நாற்று நடுகின்றாள் - மடை
மாற்றி விடுகின்றாள்!
காற்றின் திருமகளோ - தண்
ணாற்றின் ஒருமகளோ?
எங்கும் அவள்..முகமே - சுவை
பொங்கும் அவள்..அகமே!
தங்கத் தேரவளோ - தமிழ்ச்
சங்கச் சீரவளோ?
துள்ளிக் குதித்திடுவாள் - மார்பில்
அள்ளிப் பதித்திடுவாள்!
பள்ளி தொடுத்திடுவாள் - என்னைத்
தள்ளித் தடுத்திடுவாள்!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
01.11.2022
Aucun commentaire:
Enregistrer un commentaire