samedi 29 octobre 2022

கலிவிருத்தம் - 13


 

விருத்த மேடை - 77

 

கலிவிருத்தம் - 13

மா + மா + மா + காய்   

 

கரையு லாவு கதிர்மா மணிமுத்தம்

திரையு லாவு வயல்சூழ் திருப்புன்கூர்

உரையி னல்ல பெருமான் அவர்போலும்

விரையி னல்ல மலர்ச்சே வடியாரே!

 

[திருஞான சம்பந்தர், தேவாரம் - 286]

 

பாலு நெய்யுந் தயிரும் பயின்றாடித்

தோலு நுாலுந் துதைந்த வரைமார்பர்

மாலுஞ் சோலை புடைசூழ் மடமஞ்ஞை

ஆலுஞ் சோற்றுத் துறைசென் றடைவோமே!

 

[திருஞான சம்பந்தர், தேவாரம் - 265]

 

புகழ் சேர்ப்போம்!

 

முன்னைத் தமிழர் மொழிந்த மறமேற்போம்!

அன்னை யள்ளி யளித்த அறமேற்றோம்!

பொன்னைப் போன்று பொலியும் அகமேற்போம்!

பின்னை யுலகம் பேணப் புகழ்சேர்ப்போம்!

 

[பாட்டரசர்] 21.06.2022

 

கலிவிருத்தம் ஓரடியில் நான்கு சீர்களைப் பெறும். நான்கடிகள் ஓரெதுகையில் அமையும். ஒன்று மூன்றாம் சீர்களில் மோனை வரும். காய் வரும் இடத்தில் அருகி விளம் வரும்.

 

மா + மா + மா + காய் என்ற வாய்பாட்டில் விரும்பிய தலைப்பில் கலிவிருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம், பிரான்சு
29.10.2022

Aucun commentaire:

Enregistrer un commentaire