விருத்த மேடை - 80
கலிவிருத்தம் - 16
நெடிலீற்றுமா + கூவிளம் + கூவிளம் + கூவிளம்
பூத்தார் கொன்றையி னாய்புலி யின்னதன்
ஆர்த்தா யாடர வோடன லாடிய
கூத்தா நின்குரை யார்கழ லேயல
தேத்தா நாவெனக் கெந்தை பிரானிரே!
[திருநாவுக்கரசர், தேவாரம் - 6178]
பனியாய் வெங்கதிர் பாய்படர் புன்சடை
முனியாய் நீயுல கம்முழு தாளினும்
தனியாய் நீசரண் நீசல மேபெரி
தினியாய் நீயெனக் கெந்தை பிரானிரே
[திருநாவுக்கரசர், தேவாரம் - 6176]
மானே வாராய்
1.
மானே உன்விழி மன்னனை வாட்டுதே!
தேனே உன்மொழி செந்தமிழ் ஊட்டுதே!
வானே உன்னெழில் வன்வெறி மூட்டுதே!
கானே உன்மணம் காதலைக் கூட்டுதே!
[பாட்டரசர்]
கலிவிருத்தம் ஓரடியில் நான்கு சீர்களைப் பெறும். நான்கடிகள் ஓரெதுகையில் அமையும். ஒன்று மூன்றாம் சீர்களில் மோனை வரும்.
விருத்த மேடை கலிவிருத்தம் 1 இல் முதல்
சீர், குறிலீற்றுமா வாகும். இதில் முதல் சீர் நெடிலீற்றுமா வாகும்.
நெடிலீற்றுமா + கூவிளம் + கூவிளம் + கூவிளம் என்ற வாய்பாட்டில் விரும்பிய தலைப்பில் கலிவிருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம், பிரான்சு
15.06.2022
Aucun commentaire:
Enregistrer un commentaire