கலிவிருத்தம் - 17
விளம் + விளம் + விளம் + மா
மல்லொடு மலைமலைத் தோளரை வளைவாய்ப்
பல்லொடும் நெடுங்கரப் பகட்டொடும் பருந்தாள்
வில்லொடும் அயிலொடும் விறலொடும் விளிக்கும்
சொல்லொடும் உயிரொடும் நிலத்தொடும் துகைத்தான்
[கம்பன், சுந்தர. சம்புமாலிவதைப் படலம் - 32]
கடமையை ஊக்கிடும் கதிரினைத் துதித்தேன்!
மடமையைத் தாக்கிடும் மதியினை விளைத்தேன்!
கொடுமையை நீக்கிடும் குணத்தினைப் பதித்தேன்!
கடுமையைப் போக்கிடும் களத்தினைப் படைத்தேன்!
[பாட்டரசர்]
கலிவிருத்தம் ஓரடியில் நான்கு சீர்களைப் பெறும். நான்கடிகள் ஓரெதுகையில் அமையும். ஒன்று மூன்றாம் சீர்களில் மோனை வரும்.
விளம் + விளம் + விளம் + மா என்ற வாய்பாட்டில் விரும்பிய தலைப்பில் கலிவிருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம், பிரான்சு
25.11.2022
Aucun commentaire:
Enregistrer un commentaire