விருத்த மேடை - 76
கலிவிருத்தம் - 12
மா + மா + மா + மா
தாந்தம் பெருமை யறியார் துாது
வேந்தர்க் காய வேந்த ரூர்போல்
காந்தள் விரல்மென் கலைநன் மடவார்
கூந்தல் கமழும் கூட லுாரே!
[திருமங்கையாழ்வார், பெரிய திருமொழி, திருக்கூடலுார் - 1]
கலைவாழ் பிணையோ டணையும், திருநீர்
மலைவாழ் எந்தை மருவு மூர்போல்
இலைதாழ் தெங்கின் மேல்நின்[று] இளநீர்க்
குலைதாழ் கிடங்கின் கூட லுாரே!
[திருமங்கையாழ்வார், பெரிய திருமொழி, திருக்கூடலுார் - 8]
தன்மேல் ஊடல் கொண்டான் தன்னை
இன்னும் தவிக்க விடுதல் இனிதா?
துன்பம் நாளும் தொடரு மானால்
அன்பன் வாழ்தல் அரிதாம் என்றாள்!
கலைமாமணி
கவிஞர் தே. சனார்த்தனனார், புதுவை - 4
கரும்பின் சுவையைக் கன்னல் கனியை
அரும்பின் மணத்தை அமுதின் குணத்தை
இரும்பின் உரத்தை இயற்கை வளத்தை
விருந்தின் மகிழ்வை விளைப்பாய் தமிழே!
[பாட்டரசர்]
கலிவிருத்தம் ஓரடியில் நான்கு சீர்களைப்
பெறும். நான்கடிகள் ஓரெதுகையில் அமையும். ஒன்று மூன்றாம் சீர்களில் மோனை வரும்.
மா + மா + மா + மா என்ற வாய்பாட்டில் விரும்பிய தலைப்பில் கலிவிருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம், பிரான்சு
15.06.2022
Aucun commentaire:
Enregistrer un commentaire