வணக்கம்!
கனடா நாட்டின் விழுத்தெழு பெண்ணே என்ற
அமைப்பின்
உலகத் தமிழ்ப்பெண் ஆளுமை விருது பெற்ற
பாவலர் கலைப்புட்பா அவர்களை வாழ்த்தும்
ஐந்து மணி வெண்பா!
வைரம்
கனிந்த மனமும் கமழ்கின்ற தொண்டும்
நனைந்த மழைமண் நலமும் - புனைந்தகவி
அத்தணையும் மின்வைரம்! அன்புக் கலைப்புட்பா
சித்தணையும் செந்தமிழ்ச் சீர்!
நீலம்
சீரோங்கி வாழ்க! சிறப்போங்கி வாழ்க!நற்
பேரோங்கி வாழ்க! பெருமையெலாம் - வேரோங்கித்
வாழ்க! எழில்நீல வண்ணக் கலைப்புட்பா
வாழ்க தமிழ்போல் மணந்து!
முத்து
மணமளிக்கும் தாழை! வளமளிக்கும் வாழை!
குணமளிக்கும் கூர்மதி கொள்கை - உணர்வளிக்கும்
ஈழ அணிமுத்[து] எழுதும் கலைப்புட்பா
சோழ மரபெனச் சொல்லு!
பவளம்
சொல்லும் சுவையளிக்கும்! சொக்கும் மதுவளிக்கும்!
சொல்லும் இடத்தில் செயல்மணக்கும்! - வெல்லுமெழில்
நற்பவள வான்விடியல் நல்கும் கலைப்புட்பா
பொற்கவிதை பூக்கும் பொழில்!
மாணிக்கம்
பூத்த பொழிலழகும், பொங்கும் அலையழகும்,
மூத்த தமிழழகும் முன்னேந்திக் - காத்த
மலைப்பொற்பா கொண்டொளிரும் மாணிக்கம் மங்கை
கலைப்புட்பா வாழ்க கனிந்து!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
13.10.2022
தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள் ஐயா
RépondreSupprimer