dimanche 16 octobre 2022

கலிவிருத்தம் - 11

 


விருத்த மேடை - 75

 

கலிவிருத்தம் - 11

 

காய் + காய் + காய் + மா 

 

தண்ணீரும் நிழற்பாங்கில் சார்ந்திருக்கு மானால்

தண்ணென்னும் குளிர்ச்சியினைத் தான்தாங்கு மன்றோ!

கண்மணியாள் என்மனையாள் கலந்திருக்கும் காலம்

மண்ணுலக இனிமைகளின் மாமலையின் உச்சம்!

 

கலைமாமணி

கவிஞர் தே. சனார்த்தனனார், புதுவை - 4

 

வடலுார் வள்ளல்!

 

வாடுகின்ற பயிர்கண்டு வாடியுளம் நின்றார்!

ஓடுகின்ற உள்ளத்தை உள்ளடக்கி வென்றார்!

பாடுகின்ற அருட்பாவைப் பற்றுடனே தந்தார்!

கூடுகின்ற ஞானவொளி குருவாக வந்தார்!

 

[பாட்டரசர்]

 

எண்சீர் விருத்தத்தின் அரையடி, கலிவிருத்தத்தின் ஓரடியாக அமைவதுண்டு.

காய் + காய் + காய் + மா என்ற வாய்பாட்டில்  நான்கடிகள் ஓரெதுகையில் அமைய வேண்டும். ஒன்று மூன்றாம் சீர்களில் மோனை வரும்.

காய் + காய் + காய்+ மா என்ற வாய்பாட்டில் விரும்பிய தலைப்பில் கலிவிருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம், பிரான்சு
16.10.2022

Aucun commentaire:

Enregistrer un commentaire