vendredi 31 décembre 2021

என் தோள் பையே!

 


என் தோள் பையே!

 

பிறப்பும் இறப்பும் யாரறிவார்?

   பீடாய் அமைந்த தோள்பையே!

சிறக்கும் என்றன் வாழ்வினிலே

   சேர்ந்தே இருந்து பயணித்தாய்!

மறுக்கும் மனமே இல்லாமல்

   வழங்கும் பொருளை ஏற்றிடுவாய்!

உறக்கம் தழுவும் சிலபொழுதில்

   உவந்து தலைக்கே அணையாவாய்!

 

தோளோ[டு] இணைந்த நட்பானாய்!

   தொண்டால் பழுத்த வாழ்வுற்றாய்!

வாலோ[டு] இருக்கும் குரங்கைப்போல்

   வடிவாய் என்மேல் ஆடிடுவாய்!

நுாலோ[டு] என்றும் இருந்திடுவாய்!

   நோக்கி மடிமேல் அமர்ந்திடுவாய்!

காலோ கையோ உனக்கில்லை!

   கடந்த துாரம் அளவில்லை!

 

தாயைப் போல உணவேந்தித்

   தந்த உன்னை மறப்பேனா?

வாயை மூடி அமைதியுடன்

   வானை நோக்கித் தவஞ்செய்வாய்!

நோயை ஏற்ற காலத்தில்

   நொடியும் என்னைப் பிரியலையே!

பாயைப் போட்டுப் படுத்தாலும்

   பக்கம் அமர்ந்தே இருந்தாயே!

 

பிள்ளை யாக உனைச்சுமர்ந்து

   பீடாய் நாளும் வலம்வந்தேன்!

கொள்ளை யழகாம் நீயென்று

   கூறிப் பல்லோர் சென்றிடுவார்!

வெள்ளைக் காரர் நிறத்தழகை

   விஞ்சும் உன்றன் உடல்வண்ணம்!

தொள்ளை ஏற்றும் வாடாமல்

   தொடர்ந்தே உழைத்த தோள்பையே!

 

ஆசை யாக என்மனைவி

   அணைத்தே உன்னை எடுத்திடுவாள்!

பாசை யுனக்குத் தெரியுமெனில்

   பாடி யிருப்பாய் அவளழகை!

காசை நன்றே காத்திடுவாய்!

   கழுதை யாகத் துாக்கிடுவாய்!

மாசை யுடனே நீக்கிடுவாய்!

   மதிப்பை எனக்குச் கூட்டிடுவாய்!

 

மூச்சுப் போகும் பொழுதினிலே

   முட்டி மோதும் நிலையைப்போல்

பேச்சுக் குன்றி நானின்றேன்

   பெரிதும் உழைத்த என்..பையே!

ஆட்சி முடித்தே உன்னங்கம்

   ஆட மறுத்து முடங்கியதே!

மாட்சி வீழ்ச்சி வாழ்வினிலே

   வந்து போகும் உணர்கின்றேன்!

 

வன்மை யாகும் இணைவதுவே,

   வாயை வீணே திறக்காமல்

நன்மை யறிந்து வாழ்வதுவே!

   நண்ணும் சுமையைத் தாங்குவதே!

தொன்மைப் பைகள் பலவுற்றேன்!

   தோழி யாக உனைப்பெற்றேன்!

மென்மை யாக எனைத்தழுவி

   விளைத்தாய் இன்பம் மறப்பேனா?

 

விதியைச் சுமக்க வேண்டுமென

   வெல்லும் வழியை உரைத்தனையே!

ததியை, மதியைச் சுமர்ந்திங்குத்

   தந்த பாடம் நீதிசெலும்!

சதியைச் சுமக்க வேண்டாமே!

   எதியைச் சுமக்க வேண்டாமே!

நொதியைச் சுமர்ந்த தோள்..பையே!

   மதியைச் சுமக்க வைத்தனையே!

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               

உழைத்தே உழைத்தே ஓய்தனையோ?

   உலகைக் கண்டு வெறுத்தனையோ?

அழைத்தே வஞ்சம் புரிகின்ற

   அவலங் கண்டு கொதித்தனையோ?

குழைத்தே பேசும் நரிச்செயலால்

   கோபங் கொண்டு வெடித்தனையோ?

கழைத்தேன் கவிதை யடிகளிலே

   கட்டி வைத்தேன் உன்..நினைவே!

 

எல்லாம் ஒருநாள் முடியுமென

   இயற்கை யுண்மை தெளியுற்றேன்!

பொல்லா வினைகள் புரியாமல்

   புவியில் வாழத் தலைப்பட்டேன்!

கல்லாய் இருக்கும் மனத்தினிலே

   கருணை தோன்ற இடமில்லை!

நல்லார் நடையைப் பின்பற்றி

   நாளும் வாழ்தல் வாழ்வாகும்!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

31.12.2021

Aucun commentaire:

Enregistrer un commentaire