விருத்த மேடை - 59
எண்சீர் விருத்தம் - 12
விளம் + விளம் + மா + மா
கலைநிறை கணபதி சரணஞ் சரணம்
கசமுக குணபதி சரணஞ் சரணம்
தலைவநின் இணையடி சரணஞ் சரணம்
சரவண பவகுக சரணஞ் சரணம்
சிலைமலை யுடையவ சரணஞ் சரணம்
சிவசிவ சிவசிவ சரணஞ் சரணம்
உலைவறும் ஒருபரை சரணஞ் சரணம்
உமைசிவை அம்பிகை சரணஞ் சரணம்
[திருவருட்பா - 3146]
சுவைமிகு கவிதரும் அமுதே வருக!
தொடர்மழை வளமென எழிலே தருக!
அவைமிகு புகழ்தரும் அறமே வருக!
அணிமிகு அழகென அறிவே தருக!
புவிமிகு மணந்தரும் பொழிலே வருக!
புனல்மிகு நடையென நலமே தருக!
தவமிகு அருள்தரும் தமிழே வருக!
தலைமிகு புலமையின் ஒளியே தருக!
[பாட்டரசர்]
விளம் + விளம் + மா + மா என்ற வாய்பாட்டில் ஒவ்வோர் அரையடியும் அமையும்.
இவ்வாறு நான்கடிகள் ஓரெதுகை பெறும்.
முதல் சீரும் ஐந்தாம் சீரும் மோனையுறும். இவ்விருத்தம் வல்லொற்றின்றி இசையோட்டம் சிறப்புற்று
இருப்பதைப் பாடி மகிழவும்.
விரும்பிய தலைப்பில் இவ்வகை எண்சீர் விருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம், பிரான்சு
11.12.2021
Aucun commentaire:
Enregistrer un commentaire