விருத்த மேடை - 60
எண்சீர் விருத்தம் - 13
மா + மா + மா + காய்
திங்க ணம்பி முடிமேல் அடியார்பால்
சிறந்த நம்பி பிறந்த உயிர்க்கெல்லாம்
அங்க ணம்பி அருள்மால் விசும்பாளும்
அமரர் நம்பி குமரன் முதற்றேவன்
தங்க ணம்பி தவத்துக் கொருநம்பி
தாதை யென்றுன் சரணம் பணிந்தேத்தும்
எங்க ணம்பி எனையா ளுடைநம்பி
எழுபி றப்பும் எங்கள் நம்பிகண்டாயே!
[முன்னோர் பாடல்]
கற்ற கல்வி கமழும் அறிவாக,
காக்கும் அறிவு கனிந்து பண்பாக,
பெற்ற பண்பு பெருகி அன்பாக,
பேறாம் அன்பு பெரியோன் அருளாக,
உற்ற அருளே ஓதித் துறவாக,
உயர்ந்த துறவே உயிர்க்கு வீடாக,
சுற்ற மாகச் சூழ்ந்த என்னிறையே!
சொன்ன கவியுள் என்னை நடத்துகவே!
[பாட்டரசர்]
மா + மா + காய் என வரும் அறுசீர் விருத்தம் உண்டு. மா + மா + மா + காய் என வரும் எண்சீர் விருத்தம் இது. மா + மா + மா + காய் என்ற வாய்பாட்டில் ஒவ்வோர் அரையடியும் அமையும். நான்கடிகள் ஓரெதுகை பெறும். முதல் சீரும் ஐந்தாம் சீரும் மோனையுறும்.
விரும்பிய தலைப்பில் இவ்வகை எண்சீர் விருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம், பிரான்சு
16.12.2021
Aucun commentaire:
Enregistrer un commentaire