mercredi 4 septembre 2019

தமிழ்த்திருமணம்





நம்முடைய பயிலரங்கப் பாவலர் நெய்தல் நாடன் அவர்களுக்கும் திருமிகு அபராசிதா அவர்களுக்கும் 01.09.2019 அன்று பிரான்சில் தமிழ்த் திருமுறை நெறியில் திருமணம் நடைபெற்றது. திருமுறைப் பாடல்களை ஓதி அடியோன் இத்திருமணத்தை நடத்திவைத்தேன். என்றன் தலைமாணாக்கர் பாவலர் கவிப்பாவையும், பாவலர் மணியன் செல்வியும் எனக்குத் துணையாக இருந்து திருமணத்தை நடத்திவைத்தனர்.
  
மணமக்கள்
குகதாசனும் அபராசிதாவும்
தமிழாக வாழியவே!
  
நேரிசை வெண்பா
  
நம்பி குகதாசன் நங்கை அபராசிதா
அம்மி படைத்தே அருந்ததியைக் - கும்மிட்டே
இல்லறம் ஏற்றார்! இனிய தமிழ்மணக்கும்
சொல்லறம் ஏற்றார் சுவைத்து!
  
வியப்பகவல்
  
பூமணங் காணும் பாமண அன்பர்!
காமண வாழ்வில் களிக்கச் சேர்ந்தார்!
இல்லறம் ஏற்கும் இன்மண மக்கள்
நல்லறம் யாவும் நலமுறக் கொள்க!
அருங்குக தாசனும் அபராசிதாவும்
பெருங்குணப் பேறுகள் பெற்று வாழ்க!
தங்க மாட்சி தழைத்து வெல்க!
பொங்கும் புகழே மின்னச் செய்க!
அன்பே அகமா ழாட்சி கொண்டு
கன்னல் கவிகள் கமழக் காண்க!
வண்ண நலமும் வாழை வளமும்
எண்ணம் தேனா ழினிப்பும் பெறுக!
அறமே உயிரா யணைத்துக் காக்கும்
திறமே திகழ்க! வேண்டும் வரங்கள்
மேவ வேண்டும்! காதல் குயில்கள்
கூவ வேண்டும்! கொஞ்சும் செல்வம்
நெஞ்சம் நிறைந்து நெகிழ வேண்டும்!
தஞ்சம் தமிழே! தவமாம் குறளே!
பாட்டின் அரசன் கூட்டிய கவிதை
சூட்டும் நெறியைச் சுவைத்து வாழ்கவே!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
நிறுவுநர்
கம்பன் கழகம், பிரான்சு
தலைவர்
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
01.09.2019

Aucun commentaire:

Enregistrer un commentaire