வெண்பா மேடை - 142
44 எழுத்துக்களில் அமைந்த நேரிசை வெண்பா
தமிழே! அமுதே! தகைமிகு தாயே!
குமுதே! குணமிகு மாதே! - இமையென
நீயே இரு!எனை நீடு பெறவே..கா!
வேயே இசைய விளை!
ஒற்றே இன்றி இவ்வெண்பா அமையவேண்டும். வெண்பாவின் தொடக்கம் நிரையசையில் அமையவேண்டும். கூவிளங்காய் வரக்கூடாது. ஒரு நெடிலெழுத்தும் அல்லது இரு குறிலெழுத்தும் ஈற்றில் வாய்பாட்டில் வரலாம். இவ்வகையில் அமையும் வெண்பா 44 எழுத்துக்களைப் பெறும்.
43 எழுத்துக்களில் அமைந்த நேரிசை வெண்பா
மாயவா! மாதவா! மாமரை மாதுறை
துாயவா! நுாலே சுடர..வா! - தாயவா!
தேனே யருள..வா! தேரே யமர..வா!
வானே விடியவே வா!
நேரசையில் தொடங்கும் இவ்வெண்பா 43 எழுத்துக்களைப் பெற்றுள்ளதைக் காண்க. நேரசையில் தொடங்கும் இவ்வெண்பாவில் விளங்காய் வரக்கூடாது. ஒரு நெடிலெழுத்தை அல்லது இரு குறிலெழுத்தை ஈற்று வாய்பாடு ஏற்கும்.
43 எழுத்துக்களுக்குக் குறைவாக வெண்பா அமையாது என்பதை உணரலாம்.
விரும்பிய பொருளில் 44 எழுத்துக்களில் அமைந்த வெண்பாவும், 43 எழுத்துக்களைப் பெற்ற வெண்பாவும் பாடுக.
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து கவெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிடுக.
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
நிறுவுநர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
06.09.2019
Aucun commentaire:
Enregistrer un commentaire