vendredi 6 septembre 2019

வெண்பா மேடை 141


வெண்பா மேடை - 141

26 எழுத்துக்களில் அமைந்த குறள்
  
வா..தமிழே! பாவளமே தா..தமிழே! நானுயர
மா..தமிழே! நீ..பொழிக வாகு!
  
ஒற்றே இன்றி இக்குறள் அமையவேண்டும். ஈற்றுச் சீரைத் தவிர மற்றச் சீர்கள் கூவிளங்காயாக வரவேண்டும்! ஈற்றுச்சீர் 'காசு' என்ற வாய்பாட்டில் அமையவேண்டும். இவ்வகையில் அமையும் குறள் 26 எழுத்துக்களைப் பெறும்.
  
25 எழுத்துக்களில் அமைந்த குறள்
  
நிறைதமிழே! நானுயர நீயருள வா..வா!
இறைமொழிழே! ஈடிணையே ஏது?
  
நிரையசையில் தொடங்கும் இக்குறள் 25 எழுத்துக்களைப் பெற்றுள்ளதைக் காண்க. அடியின் தொடக்கத்தில் கருவிளங்காயும், 2, 3, 6 ஆகிய இடங்களில் கூவிளங்காயும், நான்காம் சீர் தேமாவாகவும், ஈற்றுச்சீர் 'காசு' என்ற வாய்பாட்டிலும் அமைந்தன.
  
இக்குறளில் ஒற்றுகள் சேரச் சேர எழுத்தெண்ணிக்கை கூடும்.
  
விரும்பிய பொருளில் 26 எழுத்துக்களில் அமைந்த குறளும், 25 எழுத்துக்களைப் பெற்ற குறளும் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து குறள்வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
நிறுவுநர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
06.09.2019

Aucun commentaire:

Enregistrer un commentaire