தினமும் திருநாளே!
வண்ணத் தைம்மகள்
வரவை வாழ்த்திடும்
மன்றம் வாழியவே!
எண்ணம் இனித்திடும்
எழிலார் கவிதையை
ஏற்போர் வாழியவே!
கண்கள் கமழ்ந்திடக்
கலைசேர் காட்சிகள்
கணித்தார் வாழியவே!
பெண்கள் மகிழ்ந்திடப்
பேணும் இவ்விழாப்
பெருமை வாழியவே!
அன்பே இறையவன்!
அமுதே தமிழ்மொழி!
ஆடி மகிழ்ந்திடுக!
இன்பே குறள்நெறி!
எழிலே அதன்வழி!
ஏத்தி உயர்ந்திடுக!
ஒன்றே குலமென
ஒருவன் திருவென
ஓதி உவந்திடுக!
நன்றே நடையுறு!
நல்லோர் மொழியுறு!
நாளும் திருநாளே!
அருளை அணிந்திடு!
அன்பை அளித்திடு!
அகமே அழகேந்தும்!
பெருளை உரைத்திடு!
புலமை படைத்திடு!
புவியே புகழேந்தும்!
தெருளைக் கொடுத்திடு!
திறனைப் புகுத்திடு!
சீரே நமையேந்தும்!
இருளை எரித்திடு!
இனிமை இசைத்திடு!
என்றும் திருநாளே!
நம்மின் செம்மொழி!
நல்கும் நன்னெறி!
நாடிப் பயின்றிடுக!
இம்மண் முன்மொழி!
ஈடில் தென்மொழி!
எங்கும் இயம்பிடுக!
செம்பொன் திருமுறை!
செந்தேன் நிறையடை!
சீர்மை முழங்கிடுக!
எம்மின் கவிநடை
இளைய பெண்ணடை!
என்றும் திருநாளே!
பாரோர் பயனுறப்
பண்பை விளைத்திடு!
பாடும் சீர்பெறுவாய்!
ஊரோர் உயர்வுற
ஓடி உழைத்திடு!
ஓங்கும் பேர்பெறுவாய்!
நேரோர் நெகிழ்வுற
நேயம் பொழிந்திடு!
நெஞ்சத் தார்பெறுவாய்!
ஏரோர் இனிப்புற
ஏற்றம் அளித்திடு!
என்றும் திருநாளே!
பாப்போல் சுவைமொழி
பண்போல் இசைமனம்
படைபோல் காத்திடுமே!
பூப்போல் கமழ்நெறி
பொன்போல் பொலிசெயல்
புகழ்மேல் புகழ்தருமே!
காப்போல் செழிப்புறும்
கனிபோல் இனிப்புறும்
கடமை கண்ணியமே!
ஆப்போல் பயனிடும்!
அணிபோல் அழகுறும்!
அமுதத் திருநாளே!
காக்கும் நல்லறம்!
கல்வி பெருவரம்!
கன்னல் ஊட்டிடுமே!
பூக்கும் இல்லறம்!
புனிதர் சொல்லுரம்!
புதையல் காட்டிடுமே!
ஊக்கும் தமிழ்மறம்
உயிர்சேர் மலர்ச்சரம்!
உலகே போற்றிடுமே!
ஆக்கும் தனித்திறம்!
அளிக்கும் சீரிடம்!
ஆடும் திருநாளே!
ஓங்கும் ஒற்றுமை!
உம்மின் நற்றுணை!
உற்றே அரணுறுவாய்!
தாங்கும் விழுதெனத்
தாயைத் தந்தையைச்
சார்ந்து வளமுறுவாய்!
ஏங்கும் ஏழையர்
இனிமை அடைந்திட
இயங்கி நலந்தருவாய்!
வீங்கும் பகையினை
வெல்லும் இசையினை
மீட்டல் திருநாளே!
உண்மை உயர்பொருள்!
உரிமை நம்முயிர்!
ஓதி உணர்த்திடுக!
தண்மைத் தமிழ்மொழி!
சாற்றும் நல்வழி!
தலைமேல் தரித்திடுக!
வண்மைக் குணமுற
வெண்மை மனமுற
வாழ்வை வடித்திடுக!
பெண்மை உயர்ந்திடப்
பீடும் நிறைந்திடப்
பெருகும் திருநாளே!
என்றும் மகிழ்வுடன்
இருக்கும் வழிகளை
எண்ணிக் கவிச்செய்தேன்!
நன்றும் நடையென
நாட்டோர் நவின்றிட
நற்றேன் மழைபெய்தேன்!
குன்றும் மனமெழக்
கோலத் தமிழினைக்
கூட்டிப் புகழ்நெய்தேன்!
இன்[று]உம் செவிகளில்
என்றன் நன்றியை
இட்டேன் திருநாளே!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
08.06.2019
Aucun commentaire:
Enregistrer un commentaire