samedi 21 avril 2018

ஆசிரியப்பா மேடை - 4



ஆசிரியப்பா மேடை - 4

 அடிமறி மண்டில ஆசிரியப்பா

தீர்த்தம் என்பது சிவகங் கையே!
ஏத்த ருந்தலம் எழிற்புலி யூரே!
மூர்த்தி அம்பலக் கூத்தனது உருவே!

[சிதம்பரச் செய்யுட்கோவை]

தாய்மொழி வளர்த்தல் தமிழர்தம் கடனே!
வாய்மொழி புரத்தல் மற்றவர் கடனே!
காய்மொழி தவிர்த்தல் கற்றவர் கடனே!
ஆய்மொழி உரைத்தல் அறிஞர்தம் கடனே!

[புலவர் குழந்தை]

பண்ணே மணக்கும் பசுமைப் பொழிலே!
கண்ணே மணக்கும் கவிதைக் காடே!
விண்ணே மணக்கும் விந்தை ஒளியே!
மண்ணே மணக்கும் மாண்பார் தமிழே!

[பாட்டரசர் கி. பாரதிதாசன்]

நல்லார் நட்பை நாடிப் பெறுகவே!
வல்லார் நட்பை வளமாய் உறுகவே!
பொல்லார் நட்பைப் போக்கி உயர்கவே!
ஒல்லார் நட்பை உடனே அறுகவே!

[பாட்டரசர் கி. பாரதிதாசன்]

மேலுள்ள பாடல்களில் உள்ள எல்லா அடிகளையும் முதல் நடு இறுதியாக மாற்றி அமைத்துப் பாடினாலும் பொருள் மாறாது. அடியை  முன்னும் பின்னும் மாற்றிப் பொருள் கொள்ளுமாறு நிற்றலால் அடிமறி மண்டல ஆசிரியப்பா எனப் பெயர் பெற்றது.   

ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தைப் பெற்று, முதல், நடு, இறுதி என்ற எந்த அடியையும் எங்கு அமைத்துப் பாடினாலும் ஓசையும் பொருளும் சிதையாமல் இருக்க வேண்டும்.

நிலைமண்டில ஆசிரியப்பாவைப்போவே அனைத்து அடிகளும் நான்கு சீர்களை கொண்ட அளவடியாக அமைய வேண்டும்.

ஒவ்வோரடியும் பொருள் முற்றுப்பெற்று வரவேண்டும். அனைத்து அடிகளும் ஏகாரத்தைப் ஈற்றாகப் பெற்று முடியும்!

ஓரெதுகையைப் பெற்று இப்பாடல் வந்துள்ளதைப் பெரும்பான்மை காண்கிறோம். [ எதுகை பலவாகவும் இப்பாடல் அமையலாம்]

அடிமறி மண்டில ஆசிரியப்பாவின் நுாற்பாக்கள்

மனப்படும் அடிமுதலாய் இறின் மண்டிலம்
[யா.வி - 74]

நடு ஆதி அந்தத்து
அடைதரு பாதத்து அகவல் அடிமறி மண்டிலமே
[யா.கா. 29]

உரைப்போர் குறிப்பின் உணர்வகை யன்றி
இடைப்பால் முதல் ஈறு என்றிவை தம்முள்
மதிக்கப் படாதன மண்டில யாப்பே!
[சிறுகாக்கை பாடினியார்]

கொண்ட அடிமுதலாய் ஒத்திறுவது
மண்டிலம், ஒத்திறி னிலைமண் டிலமே!
[அவிநயனார்]

எவ்வடி யானும் முதல்நடு இறுதி
அவ்வடி பொருள்கொளின் மண்டில யாப்பே
[மயேச்சுரம்]

மனப்படும் அடிமுதல் இடைஈறு ஆயின்
அடிமறி மண்டில ஆசிரியம் ஆதலும்..
[இலக்கண விளக்கம் 734]

தலைநடுஈறு
ஆற்றிய பாதத்து அகவல் அடிமறி மண்டிலமே.
[வீரசோழியம் 115]

நிலைமண் டிலத்தெங்கும் நீங்கா அளவடி
அடிமறி மண்டிலம் அந்நடைத் தாகி
அடிமா றினும்தான் அழியா நிலைத்தே
[தொன்னுால் விளக்கம் 226]

மூன்றடி முதலா முடிந்தெலா அடியும்
இடைகடைமுதல் ஆயெடுத் தாலும்
ஓசையும் பொருளும் உலவாது வருவன
அடிமறி மண்டில அகவலா கும்மே
[மு.வீ. 26]

'விரும்பிய பொருளில் மூன்றடிகளை உடைய அடிமறி மண்டில ஆசிரியப்பா  ஒன்றைப்  பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
"பாவலர் பயிலரங்கம்" என்ற முகநுால் குழுவில் இணைந்து தங்கள் விருத்தத்தைப் பதிவிட வேண்டுகிறேன்!
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
25.03.2018

Aucun commentaire:

Enregistrer un commentaire