கவியரசு கண்ணதாசன் விழாப் பாட்டரங்கம்
[தலைமைக் கவிதை]
தமிழ் வணக்கம்!
அன்னைத் தமிழே!
அன்பாம் அமுதே!
அடியவன் நாமலர் வந்துாறு! - நல்
அணியொளிர் பாக்களைத் தந்தாடு!
முன்னை மொழியே!
முல்லைப் பொழிலே!
மூளையுள் ஏறி அமர்ந்திடுவாய்! - என்
மூச்சுள் இருந்து தவம்புரிவாய்!
இன்பொளிர் சீரே!
எழிலொளிர் தேரே!
என்மனம் மேவி ஒளியேற்று! - இங்கு
இன்மணம் துாவிக் களியூட்டு!
வன்மைப் படையே!
வள்ளல் கொடையே!
வணங்கி மகிழ்ந்தேன் அருள்தருவாய்! - நான்
வடிக்கும் கவியுள் பொருள்தருவாய்!
இறை வணக்கம்!
திருமலை மன்னா!
செந்தமிழ்க் கண்ணா!
தீட்டிடும் பாட்டினைக் கேட்டிடுவாய்! - சீர்
செழித்திடும் சந்தமே கூட்டிடுவாய்!
அருங்கடல் நாதா!
அருமறை தேவா!
அழ்வார் தமிழணி சூட்டிடுவாய்! - என்
அகத்துள் அமர்ந்திசை மீட்டிடுவாய்!
பெரும்புகழ் செல்வா!
பெயரொளிர் கள்வா!
பேணிடும் நற்கவி நாட்டிடுவாய்! - கவிப்
பெரியவர் செல்வழி காட்டிடுவாய்!
வரும்போ் அழகா!
வன்போர் மறவா!
மன்றில் புகழினை ஈட்டிடுவாய்! - இங்கு
வந்துறும் இன்னலை ஓட்டிடுவாய்!
அவை வணக்கம்!
தாசன் கவிகேட்கத்
தவமாய் இருப்போரே!
தங்க வணக்கத்தை ஏற்றிடுவீர்! - தமிழ்
தந்த புகழினைச் சாற்றிடுவீர்!
வாசன் திருவருளால்
வண்ணத் தமிழருளால்
வார்க்கும் கவிதையைப் போற்றிடுவீர்! - இங்கு
வாடும் மனத்தினை மாற்றிடுவீர்!
நேசம் விளைந்திட
நெஞ்சம் கனிந்திட
நெய்யும் கவியுடை சூடிடுவீர்! - தமிழ்
பெய்யும் மழைதனில் ஆடிடுவீர்!
பாசம் பொழிந்திட,
பண்பு வழிந்திட,
பாடிடும் பாக்களைப் பற்றிடுவீர்! - நீவீர்
பாங்குடன் கைகளைத் தட்டிடுவீர்!
தொடரும்.....
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
Aucun commentaire:
Enregistrer un commentaire