கேட்டலும் கிளத்தலும்
பாட்டரசர் கி. பாரதிதாசன் ஐயா வணக்கம்!
கலைகள் வளர்க்கும் கனித்தமிழே! ஓங்கும்
மலைபோல் உயர்ந்த வடிவே! -அலையாகி
வந்தென் அகமுழுதும் சந்தம் இசைத்திடுவாய்!
செந்தேன் சுவையாய்ச் செழித்து!
மேலுள்ள வெண்பாவில் மூன்றாம் அடியில் வ - ச மோனையாக உள்ளது. விளக்கம் தருமாறு அன்புடன் வேண்டுகிறேன்
நெய்தல் நாடன். பிரான்சு
----------------------------------------------------------------------------------------
வணக்கம்
வ, ச, மோனையன்று. மூன்றாம் அடியில் மோனை அமையவில்லை. மோனை அமைய வேண்டிய இடத்தில் எதுகை அமைந்து மோனையில்லாக் குறையை நிறை செய்கிறது. இப்படி எங்கோ ஓரிடம் வரலாம்.
மோனை அமைய வேண்டிய இடங்களில் எதுகை அமைத்துப் பாடுதல் சிறப்பன்று. பெரும்பான்மை சீர் மோனை சிறப்புடையதாகும். எதுகையுள், அடி எதுகை சிறப்புடையதாகும்.
வந்தென் அகமுழுதும் சந்தம் இசைத்திடுவாய்!
இந்த அடியை
வந்தென் அகமுழுதும் வண்ணம் இசைத்திடுவாய்!
என்று மோனை அமைக்கலாம். இவ்விரண்டு அடிகளில் எதுகை அமைந்த அடியைவிட மோனை அமைந்த அடி இனிமையாக உள்ளதைப் பாடி உணரலாம்.
சந்தம், வண்ணம் சிந்து ஆகிய பாடல்களில் சீரெதுகை அமைந்து மிக்க இனிமை தருவதைக் காண்கிறோம்.
பிள்ளைத் தமிழ் நுால்களில் அமையும் சந்த விருத்தத்தில் நான்காம் அடியில் ஈற்று அரையடி சீரெதுகை பெற்று வரும்.
காவேரி பாயாமல் கட்டுக் கலம்காணும்
கழனிகள் நிறைந்த புதுவை!
காலினால்மடை சீய்க்க நாலாபுறம் பாயும்
கால்வாய்கள் மிக்க புதுவை!
மேவும்உயர் தென்னையும் பெண்ணையும் தண்ணீரும்
மிகுதியாய்ப் பெற்ற புதுவை!
மீனுக்கும் இன்மொழித் தேனுக்கும் உறைவான
மெல்லியர் நிறைந்த புதுவை!
பாவேந்தார் தோன்றிடப் பாரதி உறைந்திடப்
பரவுபுகழ் பெற்ற புதுவை!
பஞ்சம்அது நீங்கவே பைந்தமிழ்ச் சடையப்பன்
படகுநிறை செந்நெல்ஈழத்
தீவாண்ட பரராச சிங்கனுக் கேற்றும் அத்
தென்புதுவை காண வருக!
தேனுாறும் செந்தமிழில் நானுாற வைத்திடும்
தெய்வமாக் கவிவருகவே
முனைவர் இரா. திருமுருகனார் [கம்பன் பிள்ளைத் தமிழ்]
மேலுள்ள சந்த விருத்தத்தில் ஈற்று அரையடியில் தேனுாறும் நானுாறும் என்று எதுகை அமைந்து பாடல் சிறப்புறுவதைப் பாடித் தெளியலாம்.
நீர்கொண்ட மேகங்கள் வேர்கொண்ட மலைமீது
நிலைகொண்ட நெடுமாலே வாராய்!
நேர்கொண்ட நெறிகொண்டு தேர்கொண்ட எழில்கொண்டு
நிறைகொண்ட தமிழள்ளித் தாராய்!
கார்கொண்ட உருவோனே! ஏர்கொண்ட அருளோனே!
கவியள்ளி என்நெஞ்சுள் பூப்பாய்!
தார்கொண்ட திருமாலே! சீர்கொண்ட செழுமாலே!
தாள்தொட்டுத் தொழுகின்றேன் காப்பாய்!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
மேலுள்ள சந்த விருத்தத்தில் அடிதோறும் சீரெதுகை வந்துள்ளது இவ்வாறு அமையும் விருத்தங்கள் பாட்டரங்குகளைச் சிறப்புறச் செய்யும்.
என்றுதான் திருந்துவ ரோ - தமிழ்
இனத்தவர் தமிழ்நிறை மனத்தவரோ!
நன்றுள தமிழ்மொழி யில் - வெளி
நாட்டினர் மொழிகளைக் கூட்டுகின் றார்!
பாவலர் முருகதாசன், புதுவை
மேலுள்ள நொண்டிச் சிந்தில் [இனத்தவர், மனத்தவர்] [நாட்டினர், கூட்டுகின்] எனச் சீரெதுகை அமைந்து சிறப்பதைப் பாடி இன்புறலாம்.
முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர டினவோதும்.
அருணகிரி நாதர் [திருப்புகழ்]
வண்ணப்பாடல்களில் சந்தக் குழிப்புக்குத் தகுந்தவாறு எதுகை மணப்பதைப் பாடி மகிழலாம்.
வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா ஆகிய இயற்பாக்களில் சீர் மோனை அமைவதே சிறப்பாகும். சில இசைப்பாக்களில் சீர் எதுகையும் இனிமை அளிப்பதை மேலுள்ள காட்டுகளின் வழியாக அறியலாம்.
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
20.04.2018
Aucun commentaire:
Enregistrer un commentaire