திருவாளர் தியாகராசன், விசயலட்சுமி இணையரின்
முத்துவிழா வாழ்த்து!
முன்னவன் நல்லருளால் முத்து விழாவாழி!
தென்னவன் நல்கிடும் சீர்வாழி! - மின்னவன்
கண்ணன் கழல்வாழி! கன்னல் தமிழ்வாழி!
நண்ணும் புகழ்வாழி நன்கு!
அன்பூறும் முகமுடையார்! ஆன்றோர் வாழ்த்தும்
அருளூறும் அகமுடையார்! அணிகள் கூடி
இன்பூறும் மொழியுடையார்! என்றும் வாழ்வில்
இனிப்பூறும் வழியுடையார்! ஈசன் தொண்டில்
நன்கூறும் வாழ்வுடையார்! நல்லோர் சொன்ன
நலமூறும் நெறியுடையார்! உறவைக் காத்துப்
பொன்னூறும் பொலிவுடையார்! தியாக ராசர்
புகல்விசய லட்சுமியார் வாழ்க! வாழ்க!!
குலமோங்கி ஒளிர்ந்திடுமே! கோதை, கண்ணன்
குணமோங்கிக் கொழித்திடுமே! கோலம் மின்னும்
நலமோங்கிக் குவிந்திடுமே! நற்றேன் நுாலாய்
நடையோங்கிக் கமழ்ந்திடுமே! முந்நீர் மீது
கலமோங்கிச் செல்வதுபோல் கால மெல்லாம்
களிப்போங்கிக் கனிந்திடுமே! மக்கள் மாட்சி
நிலமோங்கிச் சுடர்ந்திடுமே! தியாக ராசா்
நிறைவிசய லட்சுமியார் வாழ்க! வாழ்க!!
சீா்மணக்கும் காரைக்கால் மக்கள் போற்றச்
செயன்மணக்கும் நல்லிணையா்! செம்மை மேவிப்
போ்மணக்கும் வண்ணத்தில் பணிகள் செய்து
பிறைமணக்கும் பித்தனருள் பெற்ற அன்பர்!
ஏா்மணக்கும் வளமுடைய பசுமை நெஞ்சா்!
இசைமணக்கும் இல்லறத்தை இயற்றும் செல்வர்!
தார்மணக்கும் முத்துவிழாத் தழைக்க வேண்டித்
தமிழ்மணக்கும் கவியளித்தேன்! வாழ்க! வாழ்க!!
பாட்டரசா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு.
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்.
28.04.2018