lundi 5 mars 2018

கேட்டலும் கிளத்தலும்

கேட்டலும் கிளத்தலும்
  
ஐயா வணக்கம்!
  
அளிப்பாய் சொல்லை - இப்புணர்ச்சியில் வல்லினம் மிகுமா? இலக்கியச் சான்றுடன் விளக்கம் தருமாறு வேண்டுகிறேன்.
  
பொ. தென்னவன், புதுவை
  
-----------------------------------------------------------------------------
  
வணக்கம்!
  
வருவதாய்ச் சொன்னான் என்பதுபோல், அளிப்பாய் என்ற சொல்லை ஆய் ஈற்று வினையெச்சமாய்ச் சிலர் மயங்கி வல்லினம் வர மிகுத்து எழுதுவார். பிழையாகும்.
  
அளிப்பாய் - முன்னிலை வினைமுற்றாகும். வினைமுற்றில் வல்லினம் மிகாது. அளிப்பாய் சொல்லை என இயல்பாக எழுத வேண்டும்.
  
அன்றிவ் வுலகம் அளந்தாய் அடிபோற்றி!
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி!
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி!
கன்று குணிலா வெறிந்தாய் கழல்போற்றி!
குன்று குடையாய் எடுத்தாய் குணம்போற்றி!
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி!
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்!
  
[ஆண்டாள் திருப்பாவை 24]
  
செற்றாய் திறல்போற்றி, உதைத்தாய் புகழ்போற்றி, வெறிந்தாய் கழல்போற்றி, எடுத்தாய் குணம்போற்றி, என இயல்பாய் வந்துள்ளதைக் காண்க.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
05.03.2018

Aucun commentaire:

Enregistrer un commentaire