samedi 10 mars 2018

மகளிர் நன்னாள் வாழ்த்து

மகளிர் நன்னாள் வாழ்த்து
  
பெண்ணடிமை நீங்கிடவே முரசம் கொட்டிப்
   பெரும்புலவர் அருந்தமிழில் பாக்கள் செய்தார்!
மண்ணடிமை நீங்கியவர் மகளிர் தம்மை
   மனையடிமை ஆக்கிமனம் மகிழ்ந்தார்! நாற்றப்
புண்ணடிமை செயல்யாவும் புதைய வேண்டும்!
   பொலிவேந்திப் பூவையர்கள் வாழ வேண்டும்!
பண்ணடிமைப் பாட்டரசர் வாழ்த்து கின்றேன்!
   பார்முழுதும் பாவையர்கள் நலமே காண்க!
  
மங்கையராய்ப் பிறந்திடவே தவமே வேண்டும்!
   மணிக்கவியை மனங்கொண்டு பெண்மை போற்று!
தங்கையராய் உடன்பிறந்து குடும்பம் தன்னைத்
   தலைமீது சுமந்தவளின் தண்மை சாற்று!
இங்கயரா[து] உழைக்கின்ற பெண்கள் தாமே
   இல்லத்தின் முதுகொலும்பு! வாழ்வின் அச்சு!
செங்கதிராய்ச் சீர்நல்கும் தாய்மைப் பண்பு
   செழித்திடவே மண்ணுலகைக் காக்கும்! வாழ்த்து!
  
புதுவையிலே பிறந்திட்ட புரட்சி யாளன்!
   புகழ்த்தமிழின் பண்பாளன்! பாட்டின் வேந்தன்!
புதுமையிலே இவ்வுலகம் மலர வேண்டிப்
   பூவையரின் விடுதலைக்குப் போர்வாள் கொண்டான்!
வதுவையிலே ஆணுக்கோர் நீதி! பூத்த
   மலரான மாதுக்கோர் நீதி! இங்குப்
பொதுமையிலே எந்நெறியும் இயற்ற வேண்டும்!
   பொய்புரட்டுச் சடங்கெல்லாம் பொசுங்க வேண்டும்!
  
வீட்டுக்குள் செல்வியரைப் பூட்டி வைத்த
   விலாவெடித்து முகங்கிழித்து மடமை சாய்த்துப்
பாட்டுக்குள் விடுதலையைப் பாடி வென்ற
   பாரதியை வணங்குகிறேன்! பறவை போன்று
கூட்டுக்குள் வாழுவதோ? ஆண்மை ஆளும்
   குரலுக்குத் தாழுவதோ? மேன்மை யோங்க
நாட்டுக்குள் நங்கையரின் நன்மை காத்தால்
   ஏட்டுக்குள் நம்பெயரைக் காலம் தீட்டும்!
  
தன்மானத் தமிழ்அரிமா! அறிவின் செல்வர்!
   தள்ளாத அகவையிலும் தடியை ஊன்றி
நன்மானம் உரைத்திட்ட மறவர்! சூடு
   நரம்பேற, நாம்மாற உழைத்த மல்லர்!
பொன்வானக் கதிர்கொண்ட பெரியார்! ஆய்ந்து
   பொழுதெல்லாம் பெண்ணுரிமை வேண்டி நின்றார்!
துன்பான போக்கெல்லாம் துாள்துாள் ஆக
   இன்பான வழிபடைத்தார்! பெண்ணே வாழி!
  
பிறப்பொக்கும் நெறியுரைக்கும் குறளும், பெண்ணின்
   பெருந்தக்க சீருரைக்கும்! மேல்கீழ் எண்ணம்
இறப்பொக்கும் என்றிடுவேன்! பெண்மை போற்றல்
   இனிப்பொக்கும் என்றிடுவேன்! முன்னே காத்த
சிறப்பொக்கும் வாழ்வியலைச் சூடி வாழச்
   செந்தமிழின் குறள்நெறியை ஏற்பீர் நன்றே!
திறமொக்கும் வண்ணத்தில் மகளிர் சட்டம்
   திருத்தமுற இயற்றிடுவீர்! செழிக்கும் வாழ்வே!
  
மண்கலமும் சுமந்திடுவாள்! வானில் செல்லும்
   விண்கலமும் அமர்ந்திடுவாள்! முன்னை யாப்பின்
பண்கலமும் பயின்றிடுவாள்! பயிற்சி பெற்றுப்
   படைக்களமும் புகுந்திடுவாள்! குளிர்ச்சி நல்கும்
தண்கலமும் தமிழ்க்களமும் நெஞ்சம் ஏந்தித்
   தகைக்களமும் கண்டிடுவாள்! கணினிக் கல்வி
எண்கலமும் தேர்ந்திடுவாள்! அறிவால் ஓங்கும்
   நுண்கலமும் ஓர்ந்திடுவாள்! உலகே போற்று!
  
கொடியழகு வஞ்சியினைப் பெற்ற இல்லம்
   அடியழகுப் பாடல்போல் இனிக்கும் என்பேன்!
செடியழகு பூத்தொளிரும்! பெண்ணின் உள்ளம்
   செயலழகு காத்தொளிரும்! மேகம் கொண்ட
முடியழகு! முகமழகு! முல்லைப் பற்கள்
   முத்தழகு! மொழியழகு! அன்னம் போன்றே
அடியழகு! துடியழகு! அறமே மின்னும்
   அகமழகு! அணியழகு! பெண்மை வாழ்க!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
08.03.2018

1 commentaire:

  1. "மண்கலமும் சுமந்திடுவாள்! வானில் செல்லும்
       விண்கலமும் அமர்ந்திடுவாள்! முன்னை யாப்பின்
    பண்கலமும் பயின்றிடுவாள்! பயிற்சி பெற்றுப்
       படைக்களமும் புகுந்திடுவாள்! " என வரும்
    பெண்ணின் ஆற்றல் மிகு சிறப்பை
    கண்ணின் முன்னே காண வைத்தீர்! - ஐயா!
    பாராட்டி வாழ்த்துவோம்!

    RépondreSupprimer