கவியரசு கண்ணதாசன் விழா - பகுதி 2
கவியரங்கம்
[தலைமைக் கவிதை]
கண்ணனைப் போற்றிய கவியரசரைப்
பாடவருமாறு மலர்வாணியை அழைத்தல்!
தமிழேந்திக் தகைவாணி
பேத்தி வருகவே!
அழகேந்தி அணியேந்தி
அடிகள் தருகவே!
களிபூட்டும் இசைகொண்டு
கவிதை பொழிகவே!
குளிரூட்டும் மொழிகொண்டு
கோலம் இடுகவே!
எழிலேந்தும் நடைகொண்டு
இனிமை சூடுக!
பொழிலேந்தும் மணங்கொண்டு
புதுமை நாடுக!
குயில்கூட்டம்! கிளிக்கூட்டம்
கூவப் பாடுக!
மயில்கூட்டம்! மான்கூட்டம்
மகிழ ஆடுக!
நலம்மேவி வளம்மேவி
பாக்கள் கொஞ்சுமே!
மலர்வாணி.. மது..வா..நீ
வாழ்த்தும் நெஞ்சமே!
கலைவாணி! கவிவாணி!
கவிதை சொல்கவே!
மலைவாணி அருள்கொண்டு
மன்றம் வெல்கவே!
கண்ணனிடம் கவிதாசன்
கண்ட பற்றினை!
வண்ணமுடன் வகைபாடி
உண்க பொற்பினை!
வாணி எழுகவே - தமிழ்த்
தோணி விடுகவே!
--------------------------------------------------------------------------
காதலைப் போற்றிய கவியரசரைப்
பாடவருமாறு அன்பரசியை அழைத்தல்!
வண்ணம் மின்னும் அன்பரசி
எண்ணம் மின்னும் பொன்போலே!
கண்கள் மின்னும் கலையரசி
கவிதை மின்னும் விண்போலே!
சீர்கள் மின்னும் அருளரசி
செப்பும் கவிகள் தேனாகும்!
தார்கள் மின்னும் தமிழரசி
சாற்றும் நெறிகள் வானாகும்!
சிரிப்பு மின்னும் முகத்தரசி
சிந்தை யாப்பின் மலர்த்தோட்டம்!
வரிப்பூ மின்னும் வடிவரசி
வார்த்தை மேவும் மயிற்கூட்டம்!
மரபு மின்னும் மாண்பரசி
மனமே தமிழின் வீடாகும்!
பரிவு மின்னும் பெண்ணரசி
பக்திக்[கு] எதுதான் ஈடாகும்?
காதல் மின்னும் கவியரசைக்
கணிக்க இங்கே வந்திடுக!
ஊதல் மின்னும் இசைகூட்டி
ஓங்கும் தமிழைத் தந்திடுக!
அன்பரசி எழுகவே! - தமிழ்வயலை
நன்றாக உழுகவே!
--------------------------------------------------------------------------
கம்பனைப் போற்றிய கவியரசரைப்
பாடவருமாறு கவிப்பாவையை அழைத்தல்!
கவிப்பாவைப் பெயர்கொண்டு கனிப்பாவை மொழிகொண்டு
கமழ்கின்ற மணமேந்தி வாராய்!
சுவைப்பாவை தமிழ்தந்த சுடர்ப்பாவை நெஞ்சேந்திச்
துயர்நீக்கும் அமுதேந்தித் தாராய்!
அருட்பாவைத் தினமுண்டும் அணிப்பாவை எழில்கொண்டும்
ஆள்கின்ற அறமேந்தி வாராய்!
திருப்பாவைத் தமிழுண்டு திருமாலின் அடிகண்டு
திரள்கின்ற அறிவேந்தித் தாராய்!
அன்பேந்தி அருளேந்திப் பண்பேந்திப் பணிவேந்தி
அழகேந்தும் அகமேந்தி வாராய்!
என்றென்றும் தமிழேந்தி ஈடில்லாக் குறளேந்தி
இன்பூறும் இசையேந்தித் தாராய்!
கம்பன்நற் றாள்பற்றி நம்கண்ண தாசன்தன்
கவிபாடப் பெண்ணே..நீ வாராய்!
இம்மன்றம் எழுந்தாடி இருகைகள் தாம்தட்ட
இன்பத்தேன் தரும்பாக்கள் தாராய்!
கவிப்பாவை வருகவே! - தமிழைச்
செவிப்பாறை உருகத் தருகவே!
--------------------------------------------------------------------------
கடமையைப் போற்றிய கவியரசரைப்
பாடவருமாறு அருணாசெல்வத்தை அழைத்தல்!
அருணா செல்வம்! திருநா மீதே
அன்னை நடந்திடுவாள் - தமிழ்
அன்னை நடந்திடுவாள்!
கருணா கரனின் கருணை யாலே
கவிதை சுரந்திடுவாள் - மதுக்
கவிதை சுரந்திடுவாள்!
என்றன் இடத்தில் மின்னும் தமிழை
ஏற்றுப் படித்தவராம்! - தமிழைப்
போற்றிக் குடித்தவராம்!
என்றும் தமிழின் கன்னல் நெறியை
ஏந்திக் களித்தவராம்! - தமிழில்
நீந்திக் குளித்தவராம்!
கதைகள் யாவும் புதையல் போன்று
கற்க இனித்திடுமே! - தமிழ்ப்
பற்றை அளித்திடுமே!
எதையும் இங்கே விதைபோல் இட்டே
ஏற்றம் கொடுத்திடுமே! - மன
ஊக்கம் தொடுத்திடுமே!
கண்ண தாசன் கொண்ட கடமை
காட்ட அழைக்கின்றேன் - கவி
சூட்ட அழைக்கின்றேன்!
எண்ண யாவும் வண்ண மேந்தி
இசைக்க அழைக்கின்றேன் - அவையை
அசத்த அழைக்கின்றேன்!
அருணா செல்வம் எழுகவே - தமிழ்ச்
செல்வம் பொழிகவே!
தொடரும்....
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
23.04.2015
அருமை அய்யா
RépondreSupprimer