mercredi 5 avril 2017

வஞ்சிப்பா - 1

வஞ்சிப்பா மேடை - 1
  
வஞ்சிப்பாவின் பொதுவிலக்கணம்
  
வஞ்சிப்பா இரண்டு வகைப்படும். 1. குறளடி வஞ்சிப்பா 2. சிந்தடி வஞ்சிப்பா. இரண்டு சீர்களுடைய அடிகளால் வந்து தனிச்சொல்லும் ஆசிரியச் சுரிதகமும் பெற்று முடிவது குறளடி வஞ்சிப்பா. மூன்று சீர்களுடைய அடிகளால் வந்து தனிச்சொல்லும் ஆசிரியச் சுரிதகமும் பெற்று முடிவது சிந்தடி வஞ்சிப்பா.
  
வஞ்சியுரிச்சீர் எனப்படும் கனிச்சீர்களே இப்பாட்டில் பெரும்பாலும் வரும். நிரையீற்று நாலசைச் சீர்களும் அருகி வரும், சிறுபான்மை மற்றச் சீர்களும் வரும்.
  
வஞ்சிப்பா துாங்கலோசையைப் பெற்று வரும். கனி முன் நிரை வருவது ஒன்றிய வஞ்சித்தளையால் அமைந்த ஏந்திசைத் துாங்கலோசை யாகும். கனி முன் நேர் வருவது ஒன்றாத வஞ்சித் தளையால் அமைந்த அகவல் துாங்கலோசை யாகும். ஒன்றிய, ஒன்றாத வஞ்சித்தளைகள் கலந்து வருவதும், அவைகளுடன் மற்றத் தளைகள் கலந்து வருவதும் பிரிந்திசைத் துாங்கலோசையாகும். [பெரும்பான்மை ஒன்றிய வஞ்சித்தளையும், ஒன்றாத வஞ்சித்தளையும் வரும்] [அருகியே மற்றத் தளைகள் வரும்]
  
வஞ்சியடிகளுக்குச் சிற்றெல்லை மூன்று அடிகள். பேரெல்லை அளவில்லை. [பாடுவோர் எண்ணப்படி எத்தனை அடிகளையும் பெற்று வரும்]
  
வஞ்சியடிகள் இரண்டு இரண்டு அடிகளுக்கு எதுகை பெற்று வரும்.
  
குறளடி வஞ்சிப்பாவில் மோனை கட்டாயமில்லை. சிந்தடி வஞ்சிப்பாவில் மூன்றாம் சீரில் மோனை அமைதல் மேண்டும் [அல்லது இரண்டாம் சீரில் அமைதல் வேண்டும்]
  
தனிச்சொல், ஈரசையில் அமைவது சிறப்பாகும். [சிறுபான்மை குற்றியலுகரத்தைப் பெற்ற மூவசையும் வரும்]
  
ஆசிரியச் சுரிதகம் என்பது ஆசிரியப்பாவாகும். ஆசிரியப்பாவின் சிற்றெல்லை மூன்று அடிகளாகும். வஞ்சிப்பாவில் வரும் ஆசிரியச் சுரிதகம் இரண்டு அடிகளைப் பெறுவதும் உண்டு. பெரும்பான்மை நேரிசை ஆசிரியச் சுரிதகம் வரும் [ஈற்றயல் அடி மூன்று சீர்களைப் பெறுவது]. சிறுபான்மை இன்னிசை ஆசிரியச் சுரிதகம் வரும் [அனைத்து அடிகளும் நான்கு சீர்களைப் பெறுவது]. ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடியும். [இப்பாவில் வெண்பாச் சுரிதகம் வராது]
  
ஒன்றிய வஞ்சித்தளையால் வந்த குறளடி வஞ்சிப்பா
  
கண்ணன்தரும் கவிதைப்பொழில்
எண்ணந்தனில் இடுமேநலம்!
கண்ணில்தினம் கனவேவரும்!
மண்ணின்மணம் வளமேதரும்!
அண்ணல்மொழி அருளின்மழை!
உண்ணுஞ்சுவை உறையும்நடை!
தமிழேஅவன்! தவமேஅவன்!
அமுதேஅவன்! அணியேஅவன்!
  
என்று [தனிச்சொல்]
  
நெஞ்சம் பாடும்! கொஞ்சி யாடும்!
வஞ்சிப் பாட்டின் வாசம் சூடும்!
மன்னன் தோளை மங்கை
பின்னும் நாளே பிறப்பின் பேறே!
  
மேலுள்ள வஞ்சிப்பா, கனி முன் நிரை வந்த ஒன்றிய வஞ்சித்தளையால் அமைந்தது. அனைத்து அடிகளிலும் மோனை வரும் வண்ணம் பாடியுள்ளேன். [மோனை கட்டாயமில்லை] [இவ்வஞ்சியடிகளில் இரண்டாம் சீர் கனிச்சீராகவே வந்துள்ளன, அவ்விடங்களில் புளிமாங்காயும், கருவிளங்காயும் வரலாம்] [ நிரையை முதலாக உடைய மற்றச் சீர்களும் அருகி வரலாம்] [அனைத்துச் சீர்களும் புளிமாங்கனியாகவும் கருவிளங்கனியாகவும் இருக்கும் வஞ்சியடிகளே சிறப்புடைய ஏந்திசைத் துாங்கலோலையை நல்கும்]
  
தனிச்சொல் [என்று] ஈரசையைப் பெற்றுள்ளது.
இப்பாடல் நான்கடிகளைக் கொண்ட நேரிசை ஆசிரியச் சுரிதகத்தால் முடிந்துள்ளது.
  
கண்ணே!
[சிறப்புடைய ஒன்றிய வஞ்சித்தளையால் வந்த குறளடி வஞ்சிப்பா]
  
குழலுறும்எழில் குளிர்தருமடி!
ஒழுகிடும்நடை உயிர்புகுமடி!
கயலுறுவிழி கவிதருமடி!
மயலுறுமொழி மதுதருமடி!
தினமொருவுடை திகைதருமடி!
வனமெனவுடல் மணந்தருமடி!
கனிதருஞ்சுவை கரம்தருமடி!
நனிபுகழ்பணி நலந்தருமடி!
மலருறுபதம் மகிழ்தருமடி!
கலையொளிர்உருக் கனவுறுமடி!
நாளும்
உன்னை எண்ணி உருகும்
என்னை அணைத்தே இன்பம் தருகவே!
  
விரும்பிய பொருளில் குறளடி வஞ்சிப்பா ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
[வஞ்சியடிகள் ஆறு அமையவேண்டும்] [நேரிசைச் சுரிதகம் மூன்றடியில் இருக்க வேண்டும்]
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

Aucun commentaire:

Enregistrer un commentaire