திருமால் வணக்கம்!
நீர்கொண்ட மேகங்கள் வேர்கொண்ட மலைமீது
நிலைகொண்ட நெடுமாலே வாராய்!
நேர்கொண்ட நெறிகொண்டு தேர்கொண்ட எழில்கொண்டு
நிறைகொண்ட தமிழள்ளித் தாராய்!
கூர்கொண்ட கருக்கொண்டு குளிர்கொண்ட வளங்கொண்டு
குழல்கொண்ட இசையள்ளிச் சேர்ப்பாய்!
குணங்கொண்ட சொற்கொண்டு மணங்கொண்ட நற்செண்டு
குடிகொண்ட அணியள்ளி வார்ப்பாய்!
பார்கொண்ட அடிகொண்டு! பண்கொண்ட உளங்கொண்டு!
பாக்கொண்ட என்மீது வைப்பாய்!
பனிகொண்ட விழிகொண்டு! பழங்கொண்ட மொழிகொண்டு!
பரந்தாமா ஒருபார்வை பார்ப்பாய்!
கார்கொண்ட உருவோனே! கனிகொண்ட அருளோனே!
கவியள்ளி என்நெஞ்சுள் பூப்பாய்!
தார்கொண்ட திருமாலே! சீர்கொண்ட செழுமாலே!
தாள்தொட்டுத் தொழுகின்றேன் காப்பாய்!
தமிழ் வணக்கம்!
சீர்பூத்த தமிழே..உன் பேர்பூத்த கவிபாடச்
சிங்காரச் சொல்லேந்தி ஆடு!
தேனாறு பாய்ந்தோடத் தீஞ்சோலை பூத்தாடச்
தெம்மாங்கு நடையேந்திப் பாடு!
ஏர்பூத்த நிலமாகக் கார்பூத்த வளமாக
என்மார்பில் அணியள்ளிச் சூடு!
என்னாளும் உன்பிள்ளை பொன்னான புகழ்மேவ
எழிலேந்திப் பூக்கட்டும் ஏடு!
நீர்பூத்த மரையாக நிலம்பூத்த மழையாக
நெஞ்சத்துள் தமிழே..நீ கூடு!
நெறிபூத்த நோக்கோடு நிறைபூத்த வாக்கோடு
நிலையாகத் தரவேண்டும் பீடு!
பார்பூத்த மொழியாவும் பயன்பூத்து நின்றாலும்
பண்பூத்த தமிழே..பூக் காடு!
பாட்டுக்கே அரசாக்கிப் பகையோட்டும் முரசாக்கிப்
பாரிவோடும் இங்கென்னை நாடு!
அவையோர் வணக்கம்!
தேனுாறும் தமிழ்நாடிச் சீரூறும் இசைநாடி
திரண்டிங்கு வந்தோரே வணக்கம்!
சிறப்பூறும் சான்றோரே! செழிப்பூறும் ஆன்றோரே!
செவிமேவி என்பாட்டு மணக்கும்!
மானுாரும் விழிகொண்டு மதுவூறும் மொழிகொண்டு
வந்துள்ள பெண்டீரே வணக்கம்!
மாண்பூறும் என்பாட்டு! மதியூறும் என்பாட்டு!
மழையாக நெஞ்சத்தை நனைக்கும்!
ஊனுாறும் உணர்வேந்தி வானுாரும் ஒளியேந்தி
உவப்பூறும் இளையோரே வணக்கம்!
உயர்வூறும் வண்ணத்தில் ஒலியூறும் என்சந்தம்
உள்ளத்தைத் தாலாட்டி அணைக்கும்!
நானுாறி உண்கின்ற மீனுாறும் குழம்பாக
நல்வாசம் என்பாட்டுக் கொடுக்கும்!
ஞாலத்தை வெல்கின்ற கோலத்தை என்பாட்டு
நாள்தோறும் இனமோங்கப் படைக்கும்!
நண்பர் வணக்கம்
எங்கே தமிழின் ஏற்றம் ஒளிக்கும்
அங்கே வருகை அளிக்கும் அன்பா்க்கு
என்முதல் வணக்கம்! இன்பத் தமிழின்
பண்பில் வாழும் பாவை யர்க்குப்
பாட்டின் அரசன் பகன்றேன் வணக்கம்!
வள்ளுவர் கலையகம் வழங்கும் இவ்விழா
உள்ளம் உவக்க ஓங்கி ஒளிர்க!
சித்திரை திருநாள் முத்துரை இட்டே
இத்திரை கொண்ட நித்திரை போக்கும்!
இயற்கை மணக்கும் இளவேனி திருநாள்
மயக்கம் கொடுத்து மஞ்சம் விரிக்கும்!
விழாவை நடத்தும் வெற்றி மனங்களைப்
பலாவைப் பாடைத்துப் பகன்றேன் வணக்கம்!
சங்கத் தலைவர்! தமிழுளம் கொண்டவர்!
பொங்குபுகழ் ஓவியர்! எங்களின் நண்பர்!
அண்ணா மலையார்! அன்பு கமழும்
பண்ணார் தமிழில் படைத்தேன் வணக்கம்!
முத்துமன நெஞ்சர்! முடியப்ப நாதர்!
கொத்துமலர் தந்து குவித்தேன் வணக்கம்!
தலைவர் தசரசன் சால்பைப் போற்றி
அலைபோல் தொடர அளித்தேன் வணக்கம்!
குளிர்மன நண்பர்! குணவதி மைந்தன்!
வளமெலாம் காண வடித்தேன் வணக்கம்!
மங்கை எலிசாபெத் மகிழ்வுறும் வண்ணம்
அங்கை இணைத்து அளித்தேன் வணக்கம்!
என்றன் மாணவி இன்மலர் வாணி
இன்னும் சிறக்க இசைத்தேன் வணக்கம்!
உறவாய் உள்ள உயர்நட ராசன்
சிறப்பினை எண்ணிச் செப்பினேன் வணக்கம்!
நற்கவிப் பாவை நலமுடன் பாடச்
பொற்புடன் வாழ்த்திப் பொழிந்தேன் வணக்கம்!
அன்பின் அரசி அருமைச் சுமதியார்
என்றும் சிறக்க ஈந்தேன் வணக்கம்!
அணிபோல் தமிழை ஆக்கி அளிக்கும்
மணியன் செல்வி! என்றன் மாணவி!
எல்லா பேறும் ஏற்று வாழப்
பல்லாண்டு பாடிப் படைத்தேன் வணக்கம்!
நாட்டியம் ஆடி நம்மை ஈர்த்துக்
காட்டிய அன்பர்க்குச் கலைசேர் வணக்கம்!
என்னைப் போன்றே அன்னைத் தமிழை
நன்றே காக்கும் நல்லார்க்கு வணக்கம்!
கம்பன் உறவும் கவிதை உறவும்
இன்மண் செழிக்க இசைத்தேன் வணக்கம்!
இருகை தட்டி என்கவி போற்றும்
இரும்புக் கரத்தர்! அரும்பு மனத்தர்
இன்நட ராசர்! என்றன் மாணவர்!
பொன்மனம் மின்னப் பொழிந்தேன் வணக்கம்!
நண்பர் கோகுலன் நட்பினைப் போற்றி
பண்புடன் சொன்னேன் பசுமை வணக்கம்!
சீர்ப்பணி யாற்றும் சிவஅரி ஐயா
ஈரடி தொட்டே இசைத்தேன் வணக்கம்!
தங்கை கணவர் தமிழ வாணர்க்கு
நுங்கைக் கொடுத்து நுவன்றேன் வணக்கம்!
ஆதி நண்பர்க்கு ஓதினேன் வணக்கம்!
சோதியைப் போற்றும் துாய தோழன்
மல்லன் மகிழ வழங்கினேன் வணக்கம்!
வல்ல தமிழால் வணக்கம் உரைத்துக்
கவிதை வானின் கதவைத் திறந்தேன்
செவியுடை அன்பர் செழுந்தமிழ் பருகவே!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
15.04.2017
Aucun commentaire:
Enregistrer un commentaire