vendredi 7 novembre 2014

ஓம்மென்னும் உருவம்




ஓம்மென்னும் உருவம்

1.
யானை முகத்தவனே! பானை வயிற்றவனே!
வானை புவியை வடித்தவனே! - ஊனிலென்
கூனை நிமிர்த்திக் குறையகற்றி என்..கையால்
தேனை நிகர்த்தகவி தீட்டு!

2.
செம்மைத் தமிழ்ஊட்டி! சிந்தனைச் சீரூட்டி!
எம்மை இனிதே இயக்கிடுக! - இம்மண்ணின்
நம்பிக்கை நாதனே! நல்ல கணபதியே!
தும்பிக்கை யால்எனைத் தூக்கு!

3.
பொன்னூல் படைத்தவனே! ஓங்கு தமிழ்மணக்க
பன்னூல் படைத்தவனே! பண்பருளும் - இன்ஓளவை
தன்னுள் இருந்து தழைத்தவனே! எந்நாளும்
என்னுள் இருந்தே எழுது!

4.
வங்கக் கடலருகே வாழும் மணத்தவனே!
எங்கள் புதுவைக் கினியவனே! - பொங்குமொளி
தங்க மனத்தவனே! தந்த முகத்தவனே!
சங்கத் தமிழ்மூன்றும் சாற்று!

5.
முன்னவனே! முத்தமிழை முக்கனியாய்த் தந்தவனே!
பொன்னவனே! என்னுள் புகுந்தவனே! - என்னவனே!
மின்னவனே! இன்பம் விளைப்பவனே! இவ்வுலகின்
மன்னவனே! வந்தெனை வாழ்த்து!

6.
வலிமேல் வலிவந்து வாடுகிறேன்! நீயோ
எலிமேல் அமர்ந்தே எழுவாய் - புலிபோல்
வளிபோல் புறப்பட்டு வந்தே..நீ வன்மை
உளிபோல் துயரை ஒதுக்கு!

7.
தாமரை தந்தேன்! கனிகள் பலதந்தேன்!
மாமறை மன்னா! தருகதமிழ்ப் - பூமழையை!
நாமரை நாயகியின் நற்கருணைக்(கு) ஆளாக்கிப்
பாமறை யாவும் பயிற்று!

8.
சின்ன எலியுன்னைச் சீராய்ச் சுமர்ந்திடுமோ?
என்ன பொருளென்றே எண்ணுகிறேன்! - என்றென்றும்
அன்பிருந்தால் ஆண்டவன் நல்லடியைக் கண்டிடலாம்!
என்றுணரச் செய்யும் எலி!

9.
நாமென்னும் எண்ணம் நகர்ந்திட்டால் நெஞ்சத்துள்
ஓமென்னும் எண்ணம் ஒளிர்ந்திடுமே! - காம்பொன்றைக்
பாம்பென்று பார்த்துப் பயந்தோடும் பொய்யோட்டும்
ஓம்மென்னும் முன்னோன் உரு!

10.
சவ்வாதும் நற்சாம் பிராணியும் தாமரையும்
அவ்வாறு நீரும் அளித்திடுவேன்! - அவ்வைபோல்
செவ்வாழை செங்கரும்பு செங்கனிகள் சோ்த்தளிப்பேன்!
இவ்வேழை வாழவழி எண்ணு!

01.09.2000

24 commentaires:

  1. மிகவும் சிறப்பு ஐயா... வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      நெடுநாள் வரவில்லை! ஏனோ? இனிமை
      இடும்நாள் தொடா்க இனி!

      Supprimer
  2. சிறந்த பக்திப் பா வரிகள்
    தொடருங்கள்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      யாழ்வாணர் என்பேன்! இனிய தமிழ்மொழியைச்
      சூழ்வாணர் என்பேன் சுடர்ந்து!

      Supprimer

  3. பணிகளைக் காத்திடுமே! பாடும் புலமை
    மணிகளைச் சூட்டிடுமே! வந்த - கணத்தில்
    பிணிகளைப் போக்கிடுமே பிள்ளையார் வெண்பா!
    அணிகளை விஞ்சும் அழகு!

    RépondreSupprimer
    Réponses

    1. வெள்ளை மனமொளிர! வெண்பா வளமொளிர
      கொள்ளை யிடும்எழில் கொழித்தொளிர! - தொள்ளைக்கை
      பிள்ளை அடியைப் பிடித்திடுக! முன்செய்த
      சள்ளை அனைத்தும் சாித்து

      Supprimer
  4. வல்ல கணபதியை வாழ்த்திய பாடலோ
    சொல்ல இனிக்கிறது! சொக்குகின்றேன்! – பொல்லாத
    உள்ளமும் நெய்யாய் உருகியது! உம்பாடல்
    தெள்ளத் தெளிந்ததமிழ்த் தேன்!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      தெள்ளத் தெளிந்த தமிழ்த்தேனை அள்ளியே
      உள்ளம் உவக்கக் குடித்தனையே! - துள்ளியே
      இன்பா படைத்தனையே! என்றும் மனத்துக்குள்
      உன்..பா கொடுக்கும் ஒளி!

      Supprimer
  5. சிறப்பான வாழ்த்து பாடல்கள்! அருமை! நன்றி!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வாழ்த்து கவிபாடி வள்ளல் கணபதியைத்
      தாழ்ந்து பணியும் தலை!

      Supprimer
  6. வணக்கம் ஐயா!

    உள்ளங் குளிர்ந்திட ஊனுணர்வு தானுருக
    வெள்ளமென வெண்பா விரைந்ததே! - தெள்ளுத்
    தமிழ்த்தேனாம் சந்தங்கள்! கண்டு நிறைத்தேன்!
    சிமிழெனும் சிந்தையிற் சேர்த்து!

    அருமையான பக்திப் பரவசமிக்க வெண்பாக்கள்!
    இனிய வாழ்த்துக்கள் ஐயா!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வெள்ளமெனப் பாயும் வியன்தமிழில் நீராடி
      உள்ளம் உவக்கும் உயர்மதியே! - அள்ளி..நான்
      நன்றி நவில்கின்றேன்! நாளும்..உன் நற்றமிழில்
      ஒன்றி மகிழ்கின்றேன் ஓா்ந்து

      Supprimer
  7. "சின்ன எலியுன்னைச் சீராய்ச் சுமர்ந்திடுமோ?" - சின்னக் கருத்தை வைத்து பிண்ணி எடுத்து விட்டீர் ஐயா ! மிகவும் ரசித்தேன் !

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      சின்னக் கருத்தைச் சிறப்புறச் செய்வதோ
      அன்னைத் தமிழின் அருள்!

      Supprimer
  8. அருமை. அய்யா.

    தொப்பைக் கணபதியைத் தோத்திரங்கள் சொல்லிநிதம்
    தப்பாமல் பூஜித்தால் தாரணியில் -எப்போதும்
    நன்மை பெருகிவர நானிலத்தோர் வாழ்வெல்லாம்
    இன்பம் பெறுவார் இனிது.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      தொந்திக் கணபதியைப் புந்தி தாித்திட்டால்
      உந்தி வரும்இன்பம்! உண்மையிது! - தந்தமுடைத்
      தும்பிக்கை நாதனைத் தோழனாய் நீயேற்று
      நம்பிக்கை வைத்திடுவாய் நன்கு!

      Supprimer
  9. வலிமேல் வலிவந்து வாடுகிறேன்! நீயோ
    எலிமேல் அமர்ந்தே எழுவாய் - புலிபோல்
    வளிபோல் புறப்பட்டு வந்தே..நீ வன்மை
    உளிபோல் துயரை ஒதுக்கு!

    அருமை ஐயா.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வாடும் மனத்தின் வலியைச் சுமர்ந்திங்குப்
      பாடும் கவியைப் பரபு்பு!

      Supprimer
  10. நாமென்னும் எண்ணம் நகர்ந்திட்டால் நெஞ்சத்துள்
    ஓமென்னும் எண்ணம் ஒளிர்ந்திடுமே!

    அற்புதமான வரிகள் ஐயா!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பிள்ளை அருள்மேவப் பிணிகள் அகன்றோட
      வெள்ளை மனத்துடன் வேண்டு!

      Supprimer
  11. அருமையான பாக்கள் பிள்ளையார்க்கு நன்றி ஐயா...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பெருமையாய் வாழ்வேங்கப் பிள்ளையார் பாட்டை
      அருமையாய்க் காப்பாய் அகத்து!

      Supprimer
  12. பிள்ளையார் எண்ணிப் பிடிக்க மனக்குரங்கின்
    துள்ளல் அடங்கும் துயர்விலகும் - பள்ளத்தில்
    பாய்ந்தோடும் நீர்போலப் பாவங்கள் போக்கநினை
    வாய்‘அவன் பேரோது வாய்!
    நன்றி.
    த ம 9

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பிள்ளையார் பேரோதிப் பேணும் மனத்தினிலே
      கொள்ளையாய் இன்பம் கொழித்தோங்கும்! - வெள்ளையாய்
      வேண்டும் நினைவுகள் யாண்டும் நிறைவேறும்!
      தாண்டும் பிறவித் தடை!

      Supprimer