lundi 22 août 2016

ஒன்றில் இரண்டு!



ஒன்றில் இரண்டு
(ஒரே பாடலை இரண்டாகப் பகிர்தல்)
கலிவிருத்தம்!

அருந்தமிழ் மின்னும் அழகுடை ஆக்கம்!
பெருந்புகழ் ஈட்டும்! பழச்சுவை பேணும்!
வருந்துயர் போக்கும்! வழிந்திடும் இன்பம்!
தருங்கவி யாவும் தழைத்திடும் வாழ்வே!

வஞ்சித் துறை 1

அருந்தமிழ் மின்னும்
பெருந்புகழ் ஈட்டும்!
வருந்துயர் போக்கும்!
தருங்கவி யாவும்!

வஞ்சித் துறை 1

அழகுடை ஆக்கம்!
பழச்சுவை பேணும்!
வழிந்திடும் இன்பம்!
தழைத்திடும் வாழ்வே!

இலக்கணக் குறிப்பு
ஒரு செய்யுள் ஒரு பொருள் பயப்பதன்றி, அதுவே இரண்டு செய்யுளாய்ப் பிரிந்து வெவ்வேறு பொருள் தரவேண்டும்.

பாட்டரசர் கி. பாரதிதாசன்
22.08.2016

samedi 20 août 2016

ஒன்றில் மூன்று!




ஒன்றில் மூன்று!
[ ஒரே பாடலை மூன்றாகப் பகிர்தல்]

கட்டளைக் கலித்துறை

தனித்தமிழ்த் தந்தை! தகைத்தமிழ் கற்போம்! தழைக்குமன்பு!
கனித்தமிழ் நேயர்! வகைத்தமிழ் கற்போம்! கழிக்குமின்னல்!
நனிதமிழ்ச் சித்தர்! நகைத்தமிழ் கற்போம்! அழைக்குமுச்சம்!
புனைதமிழ் கற்போம்! புகழ்த்தமிழ் கற்போம்! இழைக்குமின்பே!

1 . வஞ்சித்துறை

தனித்தமிழ்த் தந்தை!
கனித்தமிழ் நேயர்!
நனிதமிழ்ச் சித்தர்!
புனைதமிழ் கற்போம்!

2. வஞ்சித்துறை

தகைத்தமிழ் கற்போம்!
வகைத்தமிழ் கற்போம்!
நகைத்தமிழ் கற்போம்!
புகழ்த்தமிழ் கற்போம்!

3. வஞ்சித்துறை

தழைக்கும் அன்பு!
கழிக்கும் இன்னல்!
அழைக்கும் உச்சம்!
இழைக்கும் இன்பே!

இலகக்கணக் குறிப்பு:
ஒரு செய்யுள் ஒரு பொருள் பயப்பதன்றி, அதுவே மூன்று செய்யுளாய்ப் பிரிந்து வெவ்வேறு பொருள் தருமாறு வர வேண்டும்.

பாட்டரசர் கி. பாரதிதாசன்
20.08.2016

வல்லின வெண்பா!




வல்லின வெண்பா!

கத்து கடற்போற்றி! காற்றுத் தகைபோற்றி!
சித்துடைப் பூப்போற்றி! சித்தத்திற் - தித்தித்த
பாப்போற்றி! பற்றறுப் பா..போற்றி! பாட்டுடைக்
கோப்போற்றி! சற்புத்தி கூட்டு!

மெல்லின வெண்பா!

மண்ணும்..நீ! மாணம்..நீ! நோன்மை..நீ!ஞானம்..நீ!
நண்ணும் மணமும்..நீ! நன்மை..நீ - நுண்மை..நீ! 
மன்னன்..நீ! முன்னை..நீ! மாமலை மின்னுமென்
நன்மணி..நீ! நாமம் நம!

இடையின வெண்பா!

வல்ல வழியை விளைய வருவாயா!
வெல்லு வழியாய் விரிவாயா! - வில்லாய்
விரைவாயா! வீழா விழியரு ளாயா!
வரைவாயா வாழைவள வாழ்வு!

பாட்டரசர் கி. பாரதிதாசன்
19.08.2016

mardi 9 août 2016

சிவலிங்க பந்தம்



சிவலிங்க பந்தம்

அன்பே! மிகுசுவை யே!ஆடும் நல்லரசே!
என்நல மே!பொழி லே!வளமே! இன்பவருள்
பொற்பே! சிறுமை புகுவதோ? பற்றறுக்க
நற்சிவ மே!வழி நல்கு!

சித்திரத்தில் படிக்கும் முறை

அடிப்பகுதியின் வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் மாறி மாறி எழுத்துகள் அமைந்திருக்கும். பாடலின் இறுதி அடி சித்திரத்தின் நடுப்பகுதியில் மேலிருந்து கீழாகச் செங்குத்துக் கோட்டில் அமைந்திருக்கும்.  

பாட்டரசர் கி. பாரதிதாசன்
09.08.2016

lundi 8 août 2016

சிலேடை வெண்பா



சி

1.
தமிழும் திருமாலும்!

அடிதேடி அன்பர் அணிவகுப்பார்! மின்னும்
முடிசூடிக் காணமுன் நிற்பார்! - படி..பாடித்
தொண்டர் பயனுறுவார்! துாய தமிழ்மொழியைத்
கொண்டல் திருமாலைக் கூறு!

2.
தமிழும் தாயும்!

என்னை உலகில் எழிலுறச் செய்தவள்!
பொன்னை நிகர்த்தபுகழ் பூத்தவள்! - முன்னைப்
பயனென வந்தவள்! பாட்டளித்த தாயும்
துயரறு தண்டமிழும் சொல்லு!

3.
தமிழும் மதுவும்!

போதை கொடுக்கும்! புகுந்து மனத்துள்ளே
கோதை கொடுக்கும் குளிரூட்டும்! - பாதையெங்கும்
பாடிக் கிடக்கும்! பசுந்தமிழால் உண்மதுவால்
ஆடிக் கிடக்கும் அகம்!

4.
தமிழும் மலரும்!

மணம்சூட்டும்! கன்னல் மதுவளிக்கும்! மாண்பார்
குணங்காட்டும்! கொஞ்சுமொழி கூட்டும்! - மனஞ்சாற்றும்
கற்பனைக்குக் காதல் கலையூட்டும்! இன்றமிழும்
பொற்புடைய பூவும் பொலிந்து!

5.
தமிழும் தோப்பும்!

மாவும் புளியும் விளமும் வளங்கொடுக்கப்
பூவும் கனியும் பொலிந்திருக்கக் - கூவும்
குயிலும்! மயிலும்! குலவிமகிழ் தோப்பும்
உயர்தமிழும் ஒன்றென ஓது!

6.
தமிழும் கடலும்!

எண்ணிலாச் செல்வம்! இயம்பிடாப் பேரழகு!
மண்ணெலாம் வாழ வழங்குவளம்! - மின்னணிகள்
சூடும்! இனிய அலைதொடரும்! நற்கடலும்
பாடும் தமிழும் பகர்!

7.
தமிழும் வள்ளளும்!

வாரி வழங்கும் வளமிருக்கும்! வான்கொண்ட
மாரி வழங்கும் மகிழ்விருக்கும்! - சீரணிகள்
பூண்டு புகழொளிரும்! பூந்தமிழும் வள்ளலும்
ஆண்டு சிறப்பொளிரும் ஆடு!

8.
தமிழும் வானும்

எல்லை யிலாவிரிவோ[டு] என்றும் இருப்பனவாம்!
கொல்லை மலர்க்கூட்டம் கொண்டனவாம்! - நல்ல
மதியொளிர வாய்த்தனவாம்! வானும் தமிழும்
அதிமதுர ஞானமாம் ஆடு!

9.
தமிழும் முக்கனியும்!

மூன்று சுவையிருக்கும்! மூவாப் புகழிருக்கும்!
ஆன்றோர் உரையுள் அமர்ந்திருக்கும்! - சான்றோர்தம்
மன்றில் நிறைந்திருக்கும்! மாத்தமிழும் முக்கனியும்
என்றும் இருக்கும் இனித்து!

10.
தமிழும் மரமும்!

பூவுண்டு! வண்ணப் பொலிவுண்டு! காயுண்டு!
நாவுண்ண நற்றேன் கனியுண்டு! - மேவும்
நிழலுண்டு! வன்மரமும் நீள்தமிழும் ஒன்றும்
அழகுண்டு செம்மை அடர்ந்து!

11.
தமிழும் மழையும்!

பொழிந்தின்பம் மூட்டும்! புகழ்ப்புலவன் என்மேல்
வழிந்தின்பம் ஊட்டும்! வளத்தை - வழங்கும்!
அமுதென்று பேரேற்கும்! தண்மை அளிக்கும்!
தமிழ்மொழியும் வான்மழையும் சாற்று!

12.
தமிழும் ஆவும்!

அசைபோடும்! துள்ளியடி போடும்! தொடையால்
நசையூறும்! நற்றமிழும் ஆவும் - இசைந்தழகாய்ப்
பாலுாட்டும்! என்றும் பயனுட்டும்! சீர்முந்தி
வாலாட்டும் இன்பம் வடித்து!